Published : 30 Oct 2019 08:55 AM
Last Updated : 30 Oct 2019 08:55 AM

உயர்கல்விக்கு திறவுகோல் 4- தோல்பொருள் வடிவமைப்பாளர் ஆகலாம்!

எஸ்.எஸ்.லெனின்

தோல்பொருட்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு என்பது இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் தொழில் துறையாகும். தோலில் வடிவமைக்கப்பட்ட காலணி மற்றும் ஆடைகள் உற்பத்தியில், உலகளவில் இரண்டாவது பெரும் ஏற்றுமதி நாடாக இந்தியா விளங்குகிறது.

தோலிலான கைப்பை, பணப்பை போன்ற பொருட்கள் ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ‘பேஷன் டெக்னாலஜி’ படிப்பின் ஓர் அங்கமாக தோல்பொருள் வடிவமைப்பு துறையும் பல்வேறு தளங்களில் விரிவான வேலைவாய்ப்புகளை உள்ளடக்கி வளர்ந்து வருகிறது.

மூன்று விதமான படிப்புகள்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது, மத்திய காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம். இதன் வளாக கல்வி நிலையங்கள் சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 12 நகரங்களில் செயல்படுகின்றன. இங்கெல்லாம் தோல் பொருட்கள் வடிவமைப்பு, காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, அலங்கார வடிவமைப்பு என 3 விதமான மூன்றாண்டு டிசைனிங் படிப்புகள் இளங்கலை (B.Des.) பட்டப்படிப்பாக பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் சேர FDDI – AIST (Footwear Design and Development Institute – All India Selection Test) என்னும் தேசிய அளவிலான தேர்வை எழுத வேண்டும். IIT-JEE, BITSAT மற்றும் இதற்கு இணையான பிற நுழைவுத் தேர்வுகளை எழுதியவர்கள், இந்த FDDI – AIST தேர்வை எழுத அவசியமில்லை. மேற்படி தேர்வின் முடிவுகளை FDDI – AIST விண்ணப்பத்தில் பதிவு செய்தால் போதுமானது.

தேவையான தகுதி

பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதியுடன், விண்ணப்பிக்கும் ஆண்டின் ஜூலை மாதம் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ. 500-ஐயும் ஆன்லைன் பரிவர்த்தனையாகவே செலுத்த வேண்டும். தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் அவர்கள் குறிப்பிடும்
நாளில் இணையதளத்தில் இருந்தே தரவிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ளலாம்.

தேர்வு விவரம்

விண்ணப்ப நடைமுறைகள் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். மே நான்காம் வாரத்தில் தேர்வு நடைபெறும். சென்னை உட்பட நாட்டின் 31 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைந்திருக்கும். தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைனில் வெளியாகும். நேரடி கலந்தாய்வின் முடிவாக 12 வளாக மையங்களில் ஒன்றில் சேர்க்கையை உறுதி செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும்.

என்ன கேட்பார்கள்?

நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாளானது, Quantitative Aptitude, Verbal Ability, General Awareness, Business Aptitude Test என 4 பிரிவுகளில் 150 வினாக்களுடன் 200 மதிப்பெண்களுக்கு அமைந்திருக்கும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப்பகுதியில் இருந்து கணிசமான வினாக்கள் கேட்கப்படும். இத்துடன் நடப்பு செய்திகள் மற்றும் பொது அறிவையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x