Published : 16 Oct 2019 09:58 AM
Last Updated : 16 Oct 2019 09:58 AM

ஆசிரியருக்கு அன்புடன் 2!- குழந்தைகளைக் கொண்டாடும் பள்ளிக்கூடம்

ரெ.சிவா

பள்ளிக்கூடத்தைத் தேடிக் குழந்தைகள் வருவதைவிடக் குழந்தைகளைத் தேடி பள்ளிக்கூடம் செல்லவேண்டும். என்ற நோக்கத்
தோடு தொடங்கப்பட்டது உளார் பள்ளி. அப்படியென்ன சிறப்பு அந்தப்பள்ளியில்?

இயற்கை எழிலும் பிரச்சினைகளும் நிறைந்திருக்கும் மாநிலம் காஷ்மீர். அங்குள்ள ஓர் ஏரியில் உள்ளது உளார் பள்ளி. ஓராசிரியர் பள்ளி. நீரில் மிதக்கும் இரண்டு அறைகள். மின்சாரம், உலகை இணைக்கும் செல்பேசி இணைப்புகள் தீண்டாத இடம். ஆசிரியர் அங்கேயே தங்கி இருக்கவேண்டும். படிக்கவரும் மாணவர்களுக்கும் சேர்த்து சமைக்க வேண்டும். அங்கு எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள் தெரியுமா? அனைத்துவகுப்புகளும் சேர்த்து ஏழு குழந்தைகள்.

ஆசிரியராகும் ராணுவ வீரன்

சென்ற ஆண்டு அங்கே வேலை பார்த்த ஆசிரியை வேலையை விட்டு விட்டார். ஆசிரியர் இல்லையென்றால் உளார் பள்ளியை மூடிவிடுவார்கள். குழந்தைகளின் படிப்புக்கு வேறு வழி இல்லை என்பதால் ஆசிரியரான தனது அப்பா தொடங்கிய அந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார் ராணுவத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற கபீர் என்ற இளைஞர்.

அழகிய சூழலில் ஏகாந்தமாய் படகுப் பள்ளி. குழந்தைகளிடம் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்க்கிறார் கபீர்.

ஆசிரியர்

மேசையிலிருந்து ஒரு நோட்டு கிடைக்கிறது. இதற்கு முன்னால் அங்கு வேலை பார்த்த பிர்தவுஸ் டீச்சரின் நாட்குறிப்பு அது.
பள்ளி திறந்ததை அறிந்து ஐந்து குழந்தைகள் வருகிறார்கள். ஆசிரியப் பணி அனுபவம் இல்லாததால் கபீர் சிரமப்படுகிறார். சிறிய
குச்சியால் ஒரு சிறுவனை அடித்துவிடுகிறார்.

“பிர்தவுஸ் டீச்சர் அடிக்கவே மாட்டாங்க!” என்று அச்சிறுவன் சொன்ன வார்த்தைகள் கபீரின் மனதைத் தைக்கின்றன.
தேடத் தூண்டிய வரிகள்பிர்தவுஸ் டீச்சரின் நாட்குறிப்பை ஆழ்ந்து வாசிக்கத் தொடங்குகிறார். டீச்சருக்கும் மாணவர்களுக்கு இடையே உருவான பிணைப்பு புரியத்தொடங்குகிறது. தேர்வுக்கு வராத இம்ரானைத் தேடி பிர்தவுஸ் செல்கிறார். அவன் கணிதத்தில் அபார திறமை உள்ளவன்.

இம்ரான் படித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அவனுக்கு இங்கே வேறு வேலைகள் இருக்கின்றன. என்று பள்ளிக்கு அனுப்ப அவனது தந்தை மறுக்கிறார். டீச்சரின் வாதம் எடுபடவில்லை. இந்த நிகழ்வை நாட்குறிப்பில் எழுதி முடிவில் ‘இருட்டை இருட்டால் விரட்ட முடியாது. வெளிச்சம் இருளைப் போக்கிவிடும்’ என்று பிர்தவுஸ் எழுதிய வரிகள் கபீரை இம்ரானைத் தேடிச் செல்ல வைக்கின்றன.
பிர்தவுஸ் டீச்சரின் குறிப்புகளைப் பின்பற்றியும் தனது கருத்துப்படியும் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார் கபீர். இருந்தாலும் ஆண்டு இறுதித்தேர்வில் குழந்தைகளிடம் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவு இல்லை. கணக்கில் கபீர் தேர்ச்சி அடையாததற்கு தான் தவறாகச் சொல்லித் தந்ததே காரணம் என்று அறிகிறார். தனது அப்பா வேறு இடத்திற்கு அனுப்பிவிடுவார் என்று அழுகிறான் இம்ரான்.

நீயும் மாறிவிடாதே!

புதிய கல்வியாண்டில் மீண்டும் பிர்தவுஸ் டீச்சர் பள்ளிக்குத் திரும்புகிறார். இம்ரான் பள்ளிக்கு வந்ததை அறிந்த டீச்சர் மகிழ்கிறார்.
இம்ரானின் அப்பா வந்து அவனை வலுக்கட்டாயமாகப் பள்ளியை விட்டு இழுத்துச் செல்ல முயலும்போது கபீர் வருகிறார். தடுக்கும் அவரை இம்ரானின் அப்பா துப்பாக்கியால் சுடமுயல்கிறார். அவர் கையில் இருந்துதவறி விழுந்த துப்பாக்கியை எடுத்துத்
தந்தையைக் குறிபார்க்கிறான் இம்ரான்.

“உன் அப்பாவைப்போல நீயும் மாறிவிடாதே. நான் உன் ஆசிரியர் சொல்கிறேன் துப்பாக்கியைக் கீழே
போடு” என்ற கபீரின் வேண்டுகோளை இம்ரான் மதிக்கிறான். அவனது அப்பா தலைகுனிந்து வெளியேறுகிறார். அனைவரும் மகிழ்கின்றனர்.

Teacher’s Diary என்ற தாய்லாந்துப் படத்தின் கதை உரிமையைவாங்கி இந்தியில் படமாகத் தயாரித்திருப்பவர் பாலிவுட் முன்னணி நாயகர்களுள் ஒருவரான சல்மான் கான்.

குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்று பள்ளிகளை மூடிவரும் இவ்வேளையில் Notebook படம் முக்கியமான வருகையாகும்.
சமமாக வளராமல் ஒருபக்கமாக வளர்வது வீக்கம். கிராமங்களில், மலைப்பகுதிகளில் இன்னமும் வளர்ச்சியின் கரங்கள் நீளவில்லை. அவர்களைத்தேடிச் சென்று கல்வி அளிக்கும் பள்ளிகளே இன்றைய தேவை.

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர், ‘கலகலவகுப்பறை’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

படம்: Notebook

மொழி: இந்தி

வெளியான ஆண்டு: 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x