Published : 07 Oct 2019 06:08 PM
Last Updated : 07 Oct 2019 06:08 PM

அறிவோம் அறிவியல் மேதையை 1: மக்கள் விஞ்ஞானி– மேக்நாத் சாகா

அது 1905-ம் ஆண்டு...
டாக்காவில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த பள்ளிக்கு வங்காள கவர்னர் வந்திருந்தார். அவர் ஒரு வெள்ளைக்கார துரை!

துரையை வரவேற்பது என்றால் சும்மாவா? பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் என எல்லோரும் பயபக்தியுடன் துரையின் ப்ளசர் கார் வரும் திசையைப் பார்த்துக் கொண்டு நின்றனர். ‘அதோ துரையின் கார்! துரை வந்து விட்டார். ஏதோ ஒரு அடிமையின் உற்சாகக் குரல் காற்றை மாசுபடுத்திக் கரைந்தது.

திடீர் என ஒரு மாணவர் பட்டாளம் வெள்ளைக்கார துரையின் கார் முன் தோன்றி “பிரிக்காதே! பிரிக்காதே! மக்களை மதத்தால் பிரிக்காதே! ஒடுக்காதே! ஒடுக்காதே! சுதந்திர தாகத்தை ஒடுக்காதே!” என முழக்கமிட்டது. அந்த மாணவர் கூட்டத்தின் செய்கையைப் பார்த்து விருந்தினராக வந்த வங்காள கவர்னரும் பள்ளி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுவனின் நாட்டுப்பற்று
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளைக்கார கவர்னர் ஜெனரல் கர்சன் 1905-ம் ஆண்டு வங்காள மக்களின் விடு
தலை உணர்வை ஒடுக்க வங்காளத்தை கிழக்கு வங்காளம், மேற்கு வங்காளம் என இரண்டாகப் பிரித்தார்.

கிழக்கு வங்காளம் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி, மேற்கு வங்காளம் இந்துக்கள் அதிகம் உள்ள பகுதி. ஆனால் அவர்கள் அனைவரும் மொழியால் வங்காளிகள். எல்லோரும் இணைந்து வெள்ளையரை எதிர்த்து குரல் கொடுத்தனர். அது பள்ளி கல்லூரிகளிலும் எதிரொலித்தது. அப்படித்தான் மேலே சொன்ன டாக்கா பள்ளியில் நாட்டுப்பற்றுள்ள மாணவர்கள் போர்க்குரல் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களில் 12 வயதே ஆன சிறுவன் ஒருவனும் இருந்தான். காலில் செருப்புகூட அணியாத அந்த ஏழைச் சிறுவன் சுதந்திர தாகம் மேலெழ மாணவர்களுடன் சேர்ந்து உரத்த குரல் எழுப்பினான், “திரும்பிப்போ! திரும்பிப்போ! வங்காள கவர்னரே திரும்பிப் போ!”

கடும் கோபம் கொண்ட பள்ளி நிர்வாகம் கவர்னருக்கு தன் விசுவாசத்தைக் காட்ட ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கியது. நாட்டுப்பற்றுக்கு பரிசாக அப்படி வெளியேற்றப்பட்ட சிறுவர்களில் ஒருவர் மேக்நாத் சாகா. பிற்காலத்தில் நவீன வானியற்பியலின் தந்தையாக உருவெடுத்தார்.

மேக்நாத், 1893 அக்டோபர்் 6 அன்று பிறந்தார். இன்று பங்களாதேஷ் என அழைக்கப்படும் அன்றைய கிழக்கு வங்காளத்தில் டாக்கா நகருக்கு சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நதிக்கரையில் அமைந்திருந்தது சியரத்தாலி என்ற ஊர். அங்குதான் ஜெகந்நாத் சாகா, புவனேஸ்வரி தேவி தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக மேக்நாத் பிறந்தார்.

தீண்டாமை கடந்து விண்ணைத் தீண்டியவர்
தீண்டாமை கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சாகா எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த மேக்நாத், படிப்பாலும் உழைப்பாலும் தன்னை உயர்த்திக் கொண்டார். சிறு வயது முதல் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட அவர் சாதி முறையையும், சாதியைக் காப்பாற்றும் மூடக் கருத்துக்களையும் எதிர்த்தார். பாடநூல்கள் மட்டும் அல்லாமல் அவற்றுக்கு வெளியேயும் நிறைய படித்தார். இதனால் சமூக அக்கறையை வளர்த்துக்கொண்டார்.

பன்னிரண்டு வயதிலேயே நாட்டுக்காகப் போராடி பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட மேக்நாத், சாகும்வரை நாட்டுப்பற்றுடன் நாட்டுக்காகவே வாழ்ந்தார். சுதந்திரத்துக்காகப் போராடிய புரட்சி இயக்கங்களில் இணைந்து கல்லூரி காலத்தில் செயல்பட்டார். கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும், அலாகாபாத் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மேக்நாத் வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டையும், சாகா சமன்பாட்டையும் கண்டுபிடித்தார். இந்த பேரண்டம் பெருவெடிப்பு ஒன்றினால் உருவான ரகசியத்தை அறிய இவரது கோட்பாடே இன்று வழிசெய்துள்ளது. அதனால்தான் மேக்நாத் நவீன வானியற்பியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

தன் கண்டுபிடிப்புகளுக்காக மேக்நாத், நான்கு முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். காலணி ஆதிக்க எதிர்ப்பாளரான அவருக்கு பரிசு வழங்கப்படவில்லை. ‘சாகா அணுக்கரு ஆய்வு நிறுவனம்’ உட்பட பல அறிவியல் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கினார். ‘சயின்ஸ் அண்டு கல்ச்சர்’ என்ற பத்திரிக்கையை நடத்தி அறிவியலைப் பரப்பினார். விஞ்ஞானி பி.சி.ராய், சத்யேந்திரநாத் போஸ், விடுதலைப் போராட்ட தலைவர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஜவாஹர்லால் நேரு என பலரும் அவரது அறிவுக் கூர்மையை உணர்ந்து அவரிடம் நட்பு பாராட்டினர்.

நாடாளுமன்றத்தில் கர்ஜனை

அவர் இந்திய மக்களை பீடித்திருக்கும் படிப்பறிவின்மை, ஏழ்மை, நோய்நொடிகள் ஆகியவற்றைப் போக்கும் வகையில் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். 1952-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் கொல்கத்தாவில் சுயேச்சை வேட்பாளராக வென்றார். நாடாளுமன்றத்தில் அரசாங்கம் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்டார்.

மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கச் சொல்லி போராடினார். அணு ஆராய்ச்சியில் அரசாங்கம் ஒளிவுமறைவு இல்லாமல் மக்களுக்கு உண்மைகளை சொல்லவேண்டும் என வலியுறுத்தினார். அறிவியலை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்றார். அறிவியல், தொழில் துறை அனைத்திலும் பிற வல்லரசு நாடுகளின் அடிமையாக இல்லாமல் இந்தியா சுதந்திரமாக விளங்க வேண்டும் என்றார்.

அணு ஆராய்ச்சி மட்டும் அல்லாமல் வளிமண்டல ஆராய்ச்சி, வரலாறு, தொல்லியல், பொருளாதாரம், மனித உரிமை, அரசியல் என பல துறைகளில் மேக்நாத் சாகா செயல்பட்டார். ஒரு விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் மக்கள் நாயகனாகவும் விளங்கிய மேக்நாத் சாகா 1956-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் நாள் மாரடைப்பால் காலமானார்.

அறிவியலும், அறிவியல் ஆராய்ச்சிகளும் மக்களுக்கே என முழங்கிய அவரது பிறந்த நாளான அக்டோபர் 6-ம் நாளை நாம் ஏன் ‘மக்கள் அறிவியல் நாள்’ என கொண்டாடக் கூடாது? இனி கொண்டாடுவோம்!

- தேவிகாபுரம் சிவா, கட்டுரையாளர் எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x