

பிழை இரண்டு விதம். அதிகார மமதையால் ஏற்படும் பிழை சீற்றம் தருகிறது. தர வேண்டும். உடன் நடப்பவர் செய்யும் அப்பாவித்தனமான பிழையால் வருத்தமும் வருகிறது; இணக்கமும் கூடுகிறது. கூட வேண்டும்.
ஆசிரியர் பாண்டியனுக்கு அப்படி ஓர் அனுபவம்! தனபால் 7ஆம் வகுப்பு மாணவன். வீட்டில் ஏதோ பிரச்சினை. வகுப்பில் கடைசி பெஞ்சில் இருப்பான். யாருடனும் பேச்சு இல்லை. வகுப்பையும் கவனிப்பது இல்லை. பாண்டியன் வகுப்பில் நுழைந்த போது, தனபால் பெஞ்சில் குப்புறப் படுத்து இருந்தான். எழவில்லை.
‘போ வெளியே!’ - அப்போது ஆரம்பித்த கோபம், படிப்படியாக வளர்ந்தது. அவனை வாசிக்கச் சொன்னார் பாண்டியன். தனபால் அசட்டையாக எழுந்தான். முன் பெஞ்சில் இருந்தவனிடம் புத்தகத்தை வாங்கிப் புரட்டிக்கொண்டே இருந்தான்.
வாசிக்கவில்லை. ஆசிரியரின் கோபம் உச்சி மண்டைக்கு ஏறியது. மற்ற மாணவர் மத்தியில் தன்மானத்தை ஆசிரியர் காத்துக்கொள்ள வேண்டும். ஆங்காங்கே சிரிப்பு வேறு எழுகிறது. என்ன செய்யலாம்? ஆசிரியர்களின் வழக்கமான கோபம்தான் இது. முகத்தை இறுக்கிக்கொண்டு ‘போ! வெளியே!’ என்றார்.
அசட்டையான கொட்டாவியுடன் தனபால் வெளியேறத் தயார் ஆனான். இன்னும் என்ன செய்யலாம்? அவரை அறியாமல் வார்த்தைகள் வெளிவந்தன. “பொடிப்பயல்” என்றார். வெளியேறப் போனவன் சற்று நின்றான். ஆசிரியரை முறைத்தான். ஆசிரியரின் கோபம் வளர்ந்தது. மாணவனைத் தரதரவென இழுத்துப்போய் வெளியேவிட்டார். கொஞ்ச நேரம் அவரால் பாடம் நடத்த முடியவில்லை. மூச்சு வாங்கியது.
அமைதியாக இருந்தார். வகுப்பும் அமைதியானது. பொதுவாக எதையும் மறைக்காமல், ஆசிரியர் சந்திரனிடம் பகிர்ந்துகொள்வது பாண்டியனின் வழக்கம். மாணவன் தனபாலிடம் உண்டான முரண்பாட்டையும் சந்திரனிடம் பகிர்ந்துகொண்டார். சந்திரன் தன்னைப்பாராட்டுவார் என்று நினைத்தார். பாராட்ட வில்லை.
ஆசிரியரின் கோபம்: “தனபால் ரொம்ப நல்ல பையன்” என்றார் சந்திரன். சந்திரனிடம் இந்த வார்த்தைகளை பாண்டியன் எதிர்பார்க்கவில்லை. சற்று திகைத்தார். சந்திரன் மெதுவாகச் சொன்னார்: “ஒரு மாசம் முந்தி என் சின்ன மகன் ராஜேசுக்கு எந்நேரமும் இருமல்.
நானும் ஊரில் இல்லை. மனைவிக்கும் டாக்டரிடம் கூட்டிப் போக முடியல. அந்த நேரம் வீட்டுக்கு வந்தான் தனபால். அவன்தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனான். தனபால் செஞ்ச உதவியை மறக்க முடியாது பாண்டியன்” என்றார். பாண்டியன் குழம்பினார். தனபாலின் உண்மை முகம் எது? அசட்டையா? சிரத்தையா? அசட்டையாகவே இருக்கட்டும்.
அதைவிட மோசம் அல்லவா ஆசிரியரின் கோபம்! அசட்டையா? கோபமா? எது பிழை? திருத்த வேண்டியது யாரை? ஆசிரியரையா? மாணவரையா? பாண்டியனுக்கு விளங்கவில்லை…
அதனால் என்ன? - தனபால் நிகழ்வுக்குப் பின் பாண்டியனின் கோபம் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் யோசிக்கிறார். அவர் வீட்டுக்குப் பால் ஊற்றும் பால்காரப் பெண்மணியின் பெயர் மரியம். காலை 6 மணிக்குப் பின்னர் மாலை 5 மணிக்கு வருவார். சுத்தமான பசுமாட்டுப் பால் கொண்டுவருவார். கலகலப்பானவர்; அதேநேரம் கண்டிப்பானவர்.
அவருடைய சைக்கிள் மணிச் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் இருந்து ஒருவர் செம்பைத் தூக்கி ஓடிவருவார். மரியத்திடம் பால் வாங்குவதே பலருக்குப் பெருமை. பாண்டியனின் மனைவி உமாவும் மரியமும் பள்ளி நண்பர்கள். எனவே, பாண்டியன் வீட்டுக்கும் மரியத்திடம் பால் கிடைக்கிறது.
ஒரு நாள் மாலை மரியம் வரவில்லை. குழந்தைகளின் இரவு உணவுக்குப் பால் கிடைக்கவில்லை. வீடு பொருமியது. பாண்டியன் அமைதி காத்தார், கோபப்படவில்லை. பக்கத்தில் இருந்த பரோட்டா கடையில் பால் வாங்கி ஒருவழியாக இரவைச் சமாளித்தார்கள். மறுநாள் காலை ஆறு மணிக்கு மணிச் சத்தம் கேட்டது. மரியம்தான்! பாண்டியன் கேட்கும் முன்னமே மரியம் முந்திக்கொண்டு சொன்னார்.
“சார்! நேத்து உத்தண்டர் வீட்ல ஒரு கேதம்; பாட்டி தவறிட்டாங்க! சாயந்திரம் வந்தவுங்களுக் கெல்லாம் காபி தரணும். உங்களுக்கும் பாட்சாவுக்கும் பால நிறுத்திட்டு அவுங்களுக்குக் கொடுத்திட்டேன். மன்னிச்சுக்கங்க சார்! இனி இது மாதிரி நடக்காது!” என்றார். “அதனால் என்ன? பரவாயில்லம்மா!” என்றார் பாண்டியன். எவ்வளவு பக்குவம்! கூட நடப்பவர் சிறு தவறு செய்யும்போது கோபம் கொள்வதால் என்ன அர்த்தம்? தனபால் தந்த பாடமல்லவா இது!
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com