

சந்தேகமில்லை. ஆசிரியர் என்பவர் இன்னொரு பெற்றோர்தான். குழந்தைகளின் எதிர்காலம் வீடுகளில் மட்டுமல்ல, வகுப்பறைகளிலும் உருவாகிறது. சுதந்திர வீடாகட்டும் - வகுப்பறை யாகட்டும் அது பயமற்று இருக்க வேண்டும். ‘Fear of freedom’ பற்றி அழுத்திச் சொன்னவர் பாவ்லோ பிரேய்ர். விவாத வழிக் கல்வி பற்றி முதல்முதலில் சொன்னவரும் அவரே! பயமற்ற வகுப்பறையை உருவாக்கிய வர் பாண்டியன். விவாதங்களுக்கும் அங்குப் பஞ்சமில்லை.
குழந்தைகள் பேசினர்; கேள்வி கேட்டனர். கேள்வி பல திசைகளிலும் இருக்கும். 'பெயரெச்சம் என்பது ‘adjective’தானே சார்?' ‘லப்பர் பந்து பார்த்துட்டீங்களா?'... கேள்விகள் பறந்துவந்தன. பாண்டியன் இடைநிலைப் பள்ளி ஆசிரியர். பயமற்ற வகுப்பறை அவர் கனவு. கனவில் பாதி தூரம் அவர் போய்விட்டார். மௌனத்தில் சிக்கிக் கிடந்த குழந்தைகளையும் அவர் பேசவைத்து விட்டார். யாருக்கும் கட்டுப்படாத குழந்தைகளையும் அன்பு கொண்டு அரவணைத்தார்.
ஆசிரியரின் முதல் அடையாளம் அங்கீகாரம்தான். எந்த அங்கீகாரமும் இல்லாமல் வீடுகளில் சுருண்டு கிடக்கும் குழந்தைகளுக்கு வகுப்பறை மிகவும் காற்றோட்டமான இடம். வகுப்பறையின் வியர்வை களைக் காயவைக்கும் காற்றுதான் பாண்டியன். ஆனாலும், பாண்டியன் இந்தத் திருப்தியிலேயே கரைந்துவிடக் கூடாது. போகவேண்டிய தூரம் எல்லோருக்கும் பாக்கி இருக்கிறது. பாண்டியனுக்கும் இருக்கிறது.
ஆறுதல் எனும் அங்கீகாரம்: சரசு புதிதாகப் பணியில் சேர்ந்திருப்பவர். சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இன்னும் பணிஉறுதி ஆகவில்லை. ஏற்கெனவே துரை இருந்தார். இவர் இன்னொரு அட்டெண்டர். சரசுக்கு 35இல் இருந்து 40க்குள் இருக்கும். அதற்குள் கணவரை இழந்து விட்டார்.
கணவருக்கு மஞ்சள்காமாலை. அவர் உடல் உழைப்பாளி. மஞ்சள்காமாலை வந்த பிறகும் உடல் உழைப்பை விடவில்லை. காமாலை அவர் உயிரைப் பறித்துவிட்டது. சரசு ஒவ்வொரு வகுப்புக்கும் அட்டெண்டன்ஸ் நோட்டை எடுத்துவந்தார். பாண்டியன் வகுப்புக்கும் வந்தார். ‘புதுசா?’ என்று மட்டும் பாண்டியன் கேட்டார். சரசு தலையாட்டினார்.
சரசு அதிகம் பேசுவதில்லை. ஒரு நாள் சரசு கண் கலங்கி வந்தார். கலங்கிய பொழுதில் பலரும் நெருங்கி விடுகின்றனர். அது மனித இயல்பு. வகுப்பறைக்குள் சிக்கிக் கிடந்தவர் பாண்டியன். கலங்கிய கண்களைப் பார்த்ததும் அவரும் வாய் திறந்தார். “ஏம்மா? என்ன ஆச்சு?” என்று ஆறுதலாகக் கேட்டார். “பாவனாவுக்கு உடம்பு சரியில்ல சார்” என்றார் சரசு. “பாவனா யார்?”. “எம் மக சார்! ஒன்பது வயசாகுது! காய்ச்சலில் அவளுக்கு உடம்பு கொதிக்குது!”.
“ஒண்ணும் ஆகாது! பாவனாவைப் பத்திரமாப் பாத்துக்கங்க!” என்றார் பாண்டியன். பிறகு மெதுவாகக் கேட்டார், ”பணம் ஏதும் வேணுமா’ம்மா?” சரசு பதறினார்: “அய்யோ! வேணாம் சார்! பார்வதி நானூறு தந்தாங்க! அது போதும்!”. பார்வதி ஆறாம் வகுப்பு ஆசிரியர். சரசு போகும்போது, பாண்டியன் சொன்னார்: “மனசு கஷ்டத்திலும் வேலைய நேரத்துக்கு சரியாகச் செய்றீங்க அம்மா”. சரசு கலக்கம் நீங்கிச் சிறிதாகப் புன்னகை செய்தார். ஆறுதலும் சில நேரத்தில் ‘அங்கீகாரம்’தான்!
ஒரு கவித்துவ முகம்! - வகுப்பறைக்கு வெளியே பாண்டியனின் பார்வையைக் கொண்டுபோனவர் என்று சரசுவைக் கூறலாம். வீட்டைவிடப் பெரியது வகுப்பறை; வகுப்பறையைவிடப் பெரியது சமூகம். பாண்டியன் சிறந்த சமூக சிந்தனையாளராக உருவாகக் காரணமே சரசுதான். இல்லாவிட்டால் வகுப்பறைக்குள்ளேயே அவர் ஒடுங்கிப்போயிருப்பார்.
பள்ளிக்கு உள்ளே இருந்த மரத்தடிதான் அவருடைய ஆசிரியர் அறை. துரை எப்போதாவது எழுதக்கூடியவர். மரத்தடி ஆசிரியர் அறையைத் துரை தாண்டும் போதெல்லாம் அவரைப் பாண்டியன் அழைப்பார். “ஒரு நாள் வகுப்புக்கு வந்து, நீங்கள் எழுதிய கவிதைகளில் கொஞ்சம் வாசியுங்க! குழந்தைகள் ரொம்ப விரும்புவாங்க!” என்று துரையிடம் சொல்வார். துரையின் முகம் பூரா சிரிப்பு! “சரி சார்! சரி சார்” என்பார் துரை. அட்டெண்டருக்குள் ஒரு கவித்துவ முகம்! முகங்களை மலர வைப்பது அங்கீகாரத்தின் வேலைதான்!
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com