எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர் | வகுப்பறை புதிது 38

எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர் | வகுப்பறை புதிது 38
Updated on
2 min read

ஒவ்வொருவரும் தங்களது தவறுகளுக்கு வைக்கும் பெயரே அனுபவம். தவறுகளிலிருந்து கற்றலைச் சொல்லிக் கொடுப்பவரே சிறந்த ஆசிரியர் - ஜாக் கேன் ஃபீல்ட்.

‘ஆசிரியரின் ஆன்மாவுக்கு சிக்கன் சூப்’ (Chicken Soup for the Teacher’s Soul) நூலின் முதல் அத்தியாயம் என்னைப் புரட்டிப் போட்டது. நூலாசிரியர் ஜாக் கேன் ஃபீல்ட், பள்ளி ஒன்றுக்கு செல்கிறார். தற்செயலாக அவரிடம் 30 ஆண்டுகள் பழைய பதிவேடு கிடைக்கிறது. பள்ளியினுடைய பழைய பொருள் களை எல்லாம் எடைக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு இடையில் அந்தப் பதிவேட்டை நூலாசிரியர் புரட்டுகிறார். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு வகுப்பில் 47 மாணவர்கள்.

அப்போது பணிபுரிந்த ஆசிரியர் 47 மாணவர்களைப் பற்றியும் அதில் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார். அதன்படி 47 பேரும் வாழ்க்கையில் தேற மாட்டார்கள். நூலாசிரியர் அந்த 47 பேரையும் தேடிப் புறப்படுகிறார். இரண்டே மாதங்களில் ஏறக்குறைய அத்தனை பேரையும் சந்தித்துவிடுகிறார்.

தவறை ஏற்ற ஆசிரியர்: நோய்வாய்ப்பட்டு இறந்த ஒரு மாணவரைத் தவிர அனைவருமே சிறந்த நிலையில் இருக்கிறார்கள். காவல் துறை அதிகாரி, மருத்துவர், இசைக் கலைஞர், பேராசிரியர் இப்படி ஒவ்வொருவரும் உயரிய நிலையை எட்டியிருக்கிறார்கள். இதையடுத்து நூலாசிரியர் அந்த ஆசிரியரைத் தேடுகிறார். 82 வயதில் மூப்படைந்த அந்த ஆசிரியரின் வாக்குமூலம் பதிவுசெய்யப்படுகிறது.

தவறு இழைத்ததை ஆசிரியர் ஒப்புக்கொள்கிறார். “என் வாழ்நாளில் நான் சந்தித்த தலைசிறந்த வகுப்பு அதுதான். ஆனால், அப்போது நான் அவ்வாறு நினைக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவரைப் பற்றி நினைப்பதற்கும் வாழ்க்கையில் அவர் என்னவாக உருவாகிறார் என்கிற யதார்த்தத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது” என்று அந்த அத்தியாயம் முடிவடைகிறது.

‘சிக்கன் சூப்’ வகையறா புத்த கங்கள் பிரபலமானவை. ‘உங்கள் ஆன்மாவுக்கான சிக்கன் சூப்’ எனும் தலைப்பில் பல்வேறு சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், ஆசிரியரின் ஆன்மாவுக்கு என்று தனியே இப்படி ஒரு நூலைக் கற்பனை செய்தது அற்புதம். 384 பக்கங்கள் கொண்ட இந்நூலில் மனதை நெகிழ வைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் அனுபவங்கள் கொட்டப்பட்டிருக்கின்றன. பல ஆசிரியர்கள் தங்கள் தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். அதைச் சொல்வதற்கு அவர்கள் வெட்கப்படவே இல்லை.

வாழும் புத்தகம்: இந்நூல் ஐந்து விதமான படிப்பினைகளை அளிக்கிறது. முதலாவ தாக, ஒரு குழந்தையின் அறிவு, திறன்கள் மீது தாக்கம் செலுத்துபவராக ஆசிரியர் இருக்கிறார். இரண்டாவது, ஒரு மாணவரின் தனிப்பட்ட குணநலன் சொல்லிக் கொடுத்து வருவது அல்ல. ஆசிரியர் எப்படி நடந்துகொள்கி றாரோ, அதைப் பொறுத்து மாணவர் தாமாகப் பண்படுகிறார். எனவே, ஒவ்வோர் ஆசிரியரும் ஒரு வாழும் புத்தகம்.

மூன்றாவதாக, தற்காலத்துக்குத் தேவையான திறன்களை மாணவரிடம் வளர்த்து வேலைவாய்ப்புக்கான வழிகாட்டியாகச் செயலாற்றுவது ஆசிரியரின் முக்கிய கடமை. நான்கா வது அம்சம் சமூக நுண்ணுணர்வை ஊட்டி நன்னடத்தையைக் கற்பித்து மாணவரைச் செதுக்குவது. ஐந்தாவதாக, நாட்டுப்பற்று மிக்க குடிமக்களை உருவாக்கும் கிரியா ஊக்கியாக ஆசிரியர் திகழ முடியும்.

நான் பாடம் நடத்துவதில்லை, என் நாட்டின் எதிர்காலத்தை உரு வாக்கிக் கொண்டிருக்கிறேன் - ஒவ்வோர் ஆசிரியரும் தம் மனதில் நிறுத்தவேண்டிய இந்தக் கருத்தை புத்தகம் முழுவதும் என்னால் உணர முடிந்தது.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in