

நீங்கள் குழந்தைகளைத் தேர்வுக்கு மட்டுமின்றி வாழ்க்கைக்காகவும் தயார் செய்கிறீர்கள் என்றால் உங்கள் பள்ளியின் ஆன்மா நூலகமாகவே இருக்கும். - ரெபேக்கா ஜெ மோரிஸ் திறன்பேசியில் எத்தனையோ புத்தகங்களை உள்ளடக்க முடிந்த காலத்தில், நூலகங்கள் தேவையா எனக் கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
உண்மையில், பள்ளிக்கூடக் கற்றல் நடவடிக்கைகளில் நூலகங்கள் எவ்வளவு பெரிய பங்கை வகிக்க முடியும் என்பதற்குச் சான்று, ‘பள்ளி நூலகங்களும் மாணவர் கற்றலும்’ (School Libraries and Student Learning) நூல். சலனமற்ற நீர்நிலையில் எறியப்படும் சிறு கல் ஏற்படுத்தும் அலைகளைப் போல, ஓர் ஆசிரியர் அல்லது ஒரு பள்ளி முன்னெடுத்து வைக்கும் மிகச் சிறிய அடிகூட அங்குப் பயிலும் மாணவர்களின் வாழ்நாள் முழுவதும் அலை அலையாகப் பரவி, அவர்களை உயர்த்துகிறது. இதனை ‘கல்வியில் சிற்றலை விளைவு’ (Ripple Effect) என்றழைக்கிறது இந்நூல்.
நூலகம் எனும் அற்புதம்: கல்வியாளர் ஜோக்கப் கூனின் இவ்விளைவை 1970இல் அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பும் இப்படியான சிற்றலைகளை சில பள்ளிகளோ ஆசிரியர்களோ முயன்றிருக்கக்கூடும் என்றாலும் இதனை ஒரு கருத்தாக்கமாக இவர்தான் வெளியிட்டார். ஒரு மாணவரின் தவறான நடத்தையை ஓர் ஆசிரியர் முன்னின்று நிவர்த்தி செய்யும்போது, மற்ற மாணவர்களின் நடத்தையிலும் அது வலுசேர்க்கிறது என்பன போன்ற முன்னுதாரணங்களுடன் இந்த சிற்றலை விளைவை அவர் விளக்கினார்.
அதுவே ஒரு நூலகம் ஒரு மாணவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய விளைவு மற்றதைக் காட்டிலும் வீரியமானது. அது தொடர் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் விதைக்கிறது என்கிறார் நூலாசிரியர். ஆனால், அதை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.
வாசிப்பு ஒரு சிற்றலை விளைவாக மாணவரிடம் உருவாக ஆசிரியரின் அணுகுமுறைகள், வாசிப்பு சார்ந்து அவர் ஊட்டும் உற்சாகம் எனப் பல காரணிகள் உள்ளன. தொடக்கப்பள்ளி அளவில் ஆசிரியர் வகுப்பறைக்கு தன்னோடு ஒரு புத்தகத்தை எடுத்துவந்து வாசிப்பில் ஈடுபடுவதைப் பார்க்கும் மாணவர்கள், ஒரு முறையேனும் நூலகத்துக்குள் அடியெடுத்து வைக்க உந்தப்படுவார்கள்.
வாசிக்‘கலாம்’ - “நூலகத்துக்குள் பிரபஞ்சத்தையே பார்த்தேன்” என அறிவித்த வானியல் அறிஞர் கார்ல் சாகன் பற்றி ஓரிடத்தில் நூல் பேசுகிறது. அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் வறுமையில் வாடிய சிறுவன் கார்ல் சாகனுக்குப் பாடப்புத்தகங்கள் எட்டாக்கனியாக இருந்த காலத்தில், பொது நூலகம் ஒன்று அந்தப் பகுதியில் திறக்கப்பட்டது. அது, அவர் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. இளம் வயதில் வீடுவீடாகச் சென்று தினசரிகளை அதிகாலையில் போடும் பணியை மேற்கொண்ட முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பற்றி இந்நூல் அழகான ஒரு விஷயத்தைச் சொல்லுகிறது.
அன்றாடம் தினசரிகள் போட்டுவிட்டுத் திரும்பியதும் ராமேஸ்வரத்தில் மாணிக்கம் என்பவர் தன்னுடைய வீட்டில் பராமரித்துவந்த சிறிய நூலகத்தில் புத்தகத்தை எடுத்து வாசிக்க கலாமை அனுமதித்தார். அதுவே விஞ்ஞானி கலாம் உருவெடுக்கச் சிற்றலை விளைவை ஏற்படுத்தியது என்பது நூலாசிரியரின் கருத்து. இப்படிப் பல உதாரணங்களை இந்தப் புத்தகம் அடுக்கிக்கொண்டே செல்கிறது.
சக்கர நாற்காலியிலேயே வாழ்நாளைக் கழித்த விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் ‘பள்ளிக்கூடம் ஒன்றை உருவாக்குவதற்கு முன் நூலகத்தை முதலில் உருவாக்குங்கள்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையே எழுதியுள்ளதை இந்நூலில்தான் வாசித்தேன். ஏதோ ஒரு பள்ளியில் இந்தக் கட்டுரையின் மூலம், பூட்டி வைக்கப்பட்ட ஒரு நூலகம் திறக்கப்படுமேயானால் சிற்றலை விளைவை நாமும் சாதித்து இருப்போம்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com