

வகுப்பறையின் நோக்கம் பாடப் பொருளை முடித்து வைப்பது அல்ல. புதிய தேடல் பயணத்தைத் தொடங்கி வைப்பது. - கல்வியாளர் லிடியா காவானாக்
பெரும்பாலான ஆசிரியர்களின் பலவீனம், பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை வரிக்கு வரி குரல்வளை நோகக் கத்துவது. கணிதப்பாடத்தை எடுத்துக்கொண்டால் புத்தகத்தில் உள்ள அனைத்து கணக்கு களையும் கரும்பலகையில் ஏற்றிப் படிப்படியாக தானே தீர்வு கண்டு இறுதியாக ‘டேக் டவுன்’ என்பது. அவ்வாறன்றி மாணவர்களைச் செய்ய வைத்தால் ஆசிரியர் பாடம் நடத்தவில்லை எனப் பெற்றோர் பள்ளிக்கு படையெடுப்பது பெரிய அவலம்.
வித்தியாசம் என்ன? - ஒரு பாடப்பகுதியை வகுப்பெடுத்தல், அதில் கேள்வி பதில் எழுதித் தருதல், அதை மனப்பாடம் செய்ய வைத்தல், அதைக் கொண்டு ஓர் எழுத்துத் தேர்வை நடத்துதல், திருத்தி மதிப்பெண் வழங்குதல், பிறகு அடுத்த பாடப்பகுதியிலும் இதே நடைமுறையைப் பின்தொடர்தல் என்கிற சுழலை இடைமறித்துப் புரட்டிப் போடப்பட்ட வகுப்பறை எனும் மாற்று முறையை முன்னிறுத்துகிறது ‘ தி ஃபிளிப்புடு கிளாஸ்ரூம்’ (The Flipped Classroom) நூல்.
பள்ளிக்கூடத்தில்கூட பரவாயில்லை உயர்கல்வியிலும் இதே நடைமுறையைப் பின்பற்றுவது மிகப்பெரிய அபத்தம் என்கிறது இந்நூல். சரி! சாதாரண வகுப்பறைக்கும் புரட்டிப் போடப்பட்ட வகுப்பறைக்கும் என்ன வித்தியாசம்? வழக்கமான கற்றல்-கற்பித்தலுக்கு மாற்றாக, வகுப்பில் இடம்பெறப்போகும் பாடப்பகுதியை மாணவர்கள் முன்கூட்டியே அறிந்து வீடியோக்கள், வெளி வாசிப்பு, இணையத்தில் தேடுதல் முதலியவற்றில் ஈடுபடுகிறார்கள்.
கருத்துகளை உள்வாங்கி உள்ளடக்கத்தோடு வகுப்புக்கு வருகிறார்கள். அங்கே பாடப்பொருள் விவாதிக்கப் படுகிறது. இப்போது நெறியாளராக ஆசிரியர் செயல்படுகிறார். தான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மாணவருக்கும் அவகாசம் அளிக்கப்படுகிறது. கருத்துகளை வகுப்பில் பரிமாறிக் கொண்டு ஆழமான புரிதல்களுக்குள் நுழைகிறார்கள்.
‘நோட்ஸ்’க்கு இடமில்லை: இதற்கான விதை 1984இல் இடப்பட்டது. அன்றைய சோவியத் கல்வியியல் அறிவியல் அகாடமியின் உறுப்பினரான மிலிட்சா நெச்கினா அம்மையார் ‘புரட்டப்பட்ட வகுப்பறை மாதிரி’ ஒன்றை ரஷ்யாவின் ஆசிரியர் கூட்டமைப்பு மாநாட்டில் அறிமுகப்படுத்தினார்.
ரஷ்ய அறிவியல் அகாடமி உடனடியாக இந்த முறையை அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்தியது. பாடப் பொருளைக் கடந்து சமகால நடப்புகள் வரையிலான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கான சிறந்த வழி இது என்பதை ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர் எரிக் மசூர் புரிந்துகொண்டு இந்த உத்தியை முதலில் புத்தகமாக எழுதி வெளியிட்டார்.
இந்த முறை இன்று உலகெங்கிலும் பேசப்படுகிறது. ரெடிமேட் கேள்விகள், ரெடிமேட் பதில்கள் கொண்ட ‘நோட்ஸ்’ வகையறாக்களுக்கு இந்தக் கல்வியில் இடமில்லை. நம் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இதைப் பரிசீலிக்க வேண்டும்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com