

வகுப்பறையில் என்ன வசதிகள் உள்ளன, என்ன வகை கருவிகள் உள்ளன என்பதையும் மீறி என்ன வகை ஆசிரியர் இருக்கிறார் என்பதே கல்வி. - கிரேக் நோயஸ் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகத்தில் கல்வியை எளிதாக்குகிறோம், விசாலப்படுத்துகிறோம், உலக அறிவை வகுப்பறைக்குள் கொண்டு வருகிறோம் என்கிற பெயரில் அரசு பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் என்கிற வித்தியாசமின்றி கற்றல் செயல் பாடுகளில் தொழில்நுட்பம் தலையிடத் தொடங்கிவிட்டது.
அதுவே, அமெரிக்க கறுப்பின கல்வியாளர், முதிர்ந்த ஆசிரியர் கிரேக் நோயஸ் எழுதிய ‘முழுமையான ஆசிரியர்’ (The Complete Teacher) புத்தகத்தை வாசித்தபோது ஆசிரியர்கள் மீதான எனது பார்வை மாறிப்போனது.
கே 12 ஆசிரியர்: இந்நூலில் ‘கே-12’ ( K12) ஆசிரியர்கள் எனும் பதம் முன்வைக்கப் படுகிறது. இந்தச் சொல் ஒரு நாட்டில் உள்ள தொடக்கநிலை, இடைநிலை, மேல்நிலைப் பள்ளிக் கல்வியின் முழு வரம்பையும் உள்ளடக்கியது ஆகும். முழுமையான ஆசிரியர் என்பவர் ஒரு குறிப்பிட்ட வயது மாணவரோடு மட்டுமே தன்னால் இயங்க முடியும் எனக் கருதக் கூடாது.
எந்த வகுப்பு, எந்த வயதுக் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டாலும் அவர்களுடையக் கல்வி, வாழ்க்கை, வளர்ச்சி இவற்றில் முக்கியப் பங்கேற்பாளராகத் தன்னை உருமாற்றிக் கொள்ள வேண்டும். பாடங்களால் மட்டுமல்லாது குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை என்கிற உணர்வுப் பூர்வமான மனம் சார்ந்த சித்திரங்களால் ஆனது வகுப்பறை என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
எனவே ஒரு முழுமையான ஆசிரியர் கரும்பலகைக்கு அப்பாலும், பாடப் புத்தகத்துக்கு அப்பாலும் குழந்தைகளின் உலகமாக வாழ்பவர். முழுமையானவர் என்றால் பாடம் கற்பித்து, மதிப்பெண் வாங்க வைப்பவரா? ஒழுக்கத்தை நிலை நிறுத்துகிறவரா? இவை முக்கியம்தான். ஆனாலும் முழுமையான ஆசிரியர் என்பவர் மாணவரின் வாழ்க்கை வடிவமைப்பாளராகத் திகழ்பவர் என்பதே இந்த நூலாசிரியரின் நிலைப்பாடு. இதற்கு உகந்த பல உதாரணங்களை இந்நூலில் அவர் அடுக்கிச் செல்கிறார்.
ஆசானைத் தேடி: நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி ஒருவர் தமது பள்ளி ஆசிரியரைத் தேடிச் செல்கிறார். வகுப்பறையின் மேசையில் நான்கு சக்கரங்களை இணைத்து அதைச் சிறிய தள்ளுவண்டியாக மாற்றி, நிலைமம் குறித்து விளக்கிக்காட்டிய ஆசிரியர் அவர். அவரது செயல்பாடுதான் தம்முடைய வாழ்க்கையின் திருப்புமுனை என அந்த நோபல் அறிஞர் குறிப்பிடுகிறார். பாட புத்தகமோ, துறை சார்ந்த அறிவோ என எல்லாவற்றையும் கடந்து ஆசிரியரின் ஒரு செயல் ஒரு மனிதனை மாற்றிவிடும்.
இன்னொரு உதாரணம், வழக்கறிஞராகி பிறகு நீதிபதியான ஒருவர் தமது எட்டாம் வகுப்பு ஆசிரியைத் தேடிச் செல்கிறார். மாணவப்பருவத்தில் மெலிந்த தேகத்துடன் அச்சம் நிறைந்தவராக இருந்தவர் தன்னை பலம் பொருந்திய மாணவர்கள் மோசமாக நடத்தியபோது அந்த ஆசிரியைச் செய்த செயலை நினைவுகூருகிறார்.
தவறிழைத்த மாணவர்களை அடிப்பதற்கு பதில் பாதிக்கப்பட்ட மாணவரின் மனநிலையிலிருந்து ஒரு கடிதம் எழுதுமாறு அவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கிறார். இது தவறிழைத்த மாணவர்களையும் மாற்றி விட்டது, பாதிக்கப்பட்டவரைப் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக்கி பின்னர் நீதிமானாகவும் உயர்த்தி விட்டது.
இந்தப் புத்தகத்தின் தலைசிறந்த பகுதி, தன் ஆசிரியரைப் பார்த்து தானும் ஆசிரியர் ஆக விரும்பி அவரைப்போலவே தம் மாணவர்களிடம் அன்பாசிரியராக திகழ்வதாகக் கூறும் 20 அற்புத பழைய மாணவர்களின் குறிப்புகள். திறமையான பொறியாளர்களை, நல்ல மருத்துவர்களை, பெரிய பதவியில் இருப்பவர்களை உருவாக்குவதைவிட நல்ல மனிதர்களை உருவாக்கினாரா என்பதுதான் ஒரு முழுமையான ஆசிரியரின் அடையாளம்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com