Published : 10 Jun 2025 07:58 AM
Last Updated : 10 Jun 2025 07:58 AM
உங்கள் சமூகத்தில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை வேலைத்திறன் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக உள்ளது. இது ஸ்டெம் கல்வியின் தேவையை உணர்த்துகிறது. - டாக்டர் அண்ட்ரியன் பெர்டோலினி
எத்தனையோ இளைஞர்கள் நம் சமூகத்தில் பொறியியல் துறையில் பட்டம் வாங்கி இருந்தும் அவர்களிடம் வேலைக்குத் தேவையான திறன்கள் இல்லை என 70% பட்டதாரிகள் குறித்து பொறியியல் தொழில் நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கல்வியாளர் அண்ட்ரியன் பெர்டோலினி எழுதியிருக்கும் நூல், “இக்நைட்டிங் ஸ்டெம் லேர்னிங்” (Igniting STEM Learning) ஆகும்.
அடிப்படையில் சிக்கல்: தவறு முழுவதுமே கல்லூரிகளின் தரப்பில் மட்டுமில்லை. நமது கல்வியின் அஸ்திவாரத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. நாம் பின்பற்றும் கல்வி பெரும்பாலும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் இவற்றை உள்ளடக்கிய ‘ஸ்டெம்’ (STEM) எனும் கல்விமுறை நேரடி செயல்பாட்டு கற்றல், விமர்சனபூர்வ சிந்தனை வழி கற்றல், சிக்கல்களைத் தீர்க்கும் முறைகளை ஆய்வு செய்து கற்றல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
சாதாரண கல்விக்கும், ‘ஸ்டெம்’ கல்விக்கும் என்ன வித்தியாசம்? ‘ஸ்டெம்’ கல்வித் திட்டத்தின்கீழ் பாடங்கள் தனித்தனியே நடத்தப்படுவதில்லை. கேள்வி/பதில் என்பதைத் தவிர்த்து பிரச்சினை/தீர்வு கண்டுபிடிப்பு என்பதாகக் கல்வியை அது அணுகுகிறது. பாடப்புத்தகத்தில் படிப்பது என்பதைக் கடந்து ஆய்வு உபகரணங்கள், தொழில்நுட்ப கருவிகள் மென்பொருள் செயல்திட்ட மாதிரிகள் என அறிவை விரிவடைய செய்யும் முறையாக அது உள்ளது.
தீர்வை நோக்கிய கல்வி: உதாரணமாக, நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்று பொதுக்கல்வி போதிக்கிறது. ‘ஸ்டெம்’ கல்வியில் மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரு பாராசூட்டைச் செய்து புவியீர்ப்பு விசையும் காற்றின் எதிர்ப்புச் சக்தியும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை நேரடியாகச் செய்து பார்க்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் நியூட்டன் ஆக மாறுகிறார்கள், நியூட்டன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அறிவியலை அடுத்தக் கட்டத்துக்கு உயர்த்துகிறார்கள்.
இது சாத்தியமா என்றால், இதற்கான முக்கிய உதாரணங்களை இந்தப் புத்தகம் அடுக்கிச் செல்கிறது. கென்யாவில் மாசாய் இனத்தின் 11 வயது மாணவர் ரிச்சர்ட் அவரது சமூகத்தையும் மாட்டுப்பண்ணையையும் சிங்கங்களிடம் இருந்து பாதுகாக்க நினைத்தார். அதற்கு ‘ஸ்டெம்’ கல்வியைப் பயன்படுத்தி அற்புதமான தீர்வை முன்மொழிந்தார்.
பழைய கார் பேட்டரிகளைப் பயன்படுத்தியும் எல்ஈடி விளக்குகளைப் பயன்படுத்தியும் ‘சிங்க விளக்குகள்’ என்கிற ஒன்றை இரவில் ஒளிரச் செய்தார். சிங்கங்கள் அங்கே மக்கள் இருக்கிறார்கள் என நினைத்து விலகிச் சென்றன. தீர்வை நோக்கிய அறிவியல் கல்வி இப்படித்தான் இருக்க வேண்டும்.
தமது கிராமத்துக்கே மின்சாரம் வழங்கிய மலாவியைச் சேர்ந்த கிடின்கிஜி மெக்கெஞ்ஜி, தமது பள்ளியைப் பிடித்தாட்டிய தண்ணீர் பஞ்சத்துக்குத் தன் சைக்கிளில் மழைநீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு அமைப்பை சுயமாக உருவாக்கித் தீர்வு கண்ட நைஜீரியாவின் ஸ்டான்லி அனா என இந்த நூலில் பல முன்னுதாரணங்கள் உள்ளன. கல்வியின் அடிப்படை குறித்து விவாதம் நடந்துவரும் இன்றையச் சூழலில் ‘ஸ்டெம்’ கல்வி குறித்தும் பேச வேண்டியது அவசியம்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT