

உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எங்கள் நாடு. அதிலும் எங்கள் டென்மார்க்கின் மகிழ்ச்சி வகுப்பறைகளில் இருக்கிறது - மார்டின் எக்லாண்ட்.
உலகிலேயே மகிழ்ச்சியான நாடு எது என்கிற புள்ளிவிவரம் வெளிவரும்போதெல்லாம் முதல் இடத்தில் அதை விட்டால் இரண்டாவது இடத்தில் கண்டிப்பாக டென்மார்க் இடம்பெற்றுவிடுகிறது. இதற்குப் பின்னால் உள்ள காரணம், ‘தி டேனிஷ் பீப்பிள்ஸ் ஹை ஸ்கூல்’ (The Danish People’s High School) என்கிற புத்தகத்தை வாசித்தபோது முழுமையாகப் புரிந்தது. டென்மார்க் நாட்டின் தனித்துவம், மகிழ்ச்சி, வளர்ச்சி யாவும் அது வழங்கும் கல்வியில்தான் இருக்கிறது.
நீங்கள் விரும்பும் படிப்பு: ஒரு சமூகத்தில் நிகழும் கற்றலுக்கும் அந்த சமூகத்தின் மகிழ்ச்சிக்கும் இடையிலான தொடர்பை இந்தப் புத்தகம் அருமையாகக் கோடிட்டுக் காட்டுகிறது. டென்மார்க் நாட்டின் அடையாளம் அதன் உயர்நிலைப்பள்ளிகள். ‘மக்கள் உயர்நிலைப் பள்ளிகள்’ என்றே அவை அந்நாட்டில் அழைக்கப்படுகின்றன.
பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் பட்டம் பெற்றுவிட்டால் அத்தோடு கல்வி முடிவடைந்து விட்டது என்பதொரு தவறான கற்பிதம் என்பதை எடுத்தயெடுப்பில் இந்தப் புத்தகம் உணர்த்தி விடுகிறது. உண்மையில் கல்வியை வாழ்நாள் முழுவதும் தொடர முடியும்.
தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்புவரை அனைத்து குடிமக்களுக்கும் தரமான, சமமான கல்வி வழங்கும் அணுகுமுறையை டென்மார்க் கடைபிடித்துவருகிறது. அங்குக் கல்விக்குக் கட்டணமே கிடையாது. நம் நாட்டில் பள்ளிக் கல்வி முடித்தவுடன் உயர்கல்வி படிப்புகளில் எது தமக்குக் கிடைக்கும் என்று குழந்தைகள் பதற்றத்துடன் தேடும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அங்கே பள்ளிக் கல்வி முடிந்ததும் தமக்கு எது தேவை என்பதைக் குழந்தை தாமாக முடிவு செய்து அந்தப் பட்டப்படிப்பில் சென்று சேரும் உரிமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை சீட்டுகள்தான் உள்ளன என்கிற அழுத்தம் அங்கு இல்லை. இத்தனை குழந்தைகள் சேர்ந்து இருக்கிறார்கள் என்கிற எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகளைப் பெருக்குகிறார்கள். கல்வியின் எந்த படிநிலையிலும் நுழைவுத் தேர்வுகள் இல்லை. பல்கலைக்கழகம் உங்களைத் தேர்ந்தெடுக்காது; நீங்கள்தான் பல்கலைக்கழகத்தையும் உங்களுக்கான பட்டத்தையும் தேர்வு செய்கிறீர்கள்.
காலமெல்லாம் மாணவர்: தொடக்கக் கல்வி முதல் இடைநிலைவரை ஒரே பள்ளியில்தான் கட்டாயம் தொடர வேண்டும். மாணவர்களுக்கான கல்வி என்பது ஒருங்கிணைந்த ஒற்றை கட்டமைப்பைக் கொண்டது. இதில் தேர்வு என்கிற கசப்பான கொடிய சூழல் நடுநிலைப்பள்ளி ஆண்டுகள்வரை பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அதன் பிறகு குழந்தைகளுக்கே தெரியாமல் அவர்களது கற்றலின் தரத்தை நிர்ணயம் செய்யும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
‘டேனிஷ் மக்கள் உயர்நிலைப் பள்ளிகள்’ எனும் கல்விமுறை வேறு எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பம்சமாகும். வாழ்நாள் முழுவதும் கற்றல், வளர்ச்சியின் முக்கியத்துவத்தை இது அங்கீகரிக்கிறது. பள்ளி, கல்லூரி வயதைக் கடந்து பணி செய்பவர்கள்கூட ஊர்தோறும் திறக்கப்பட்டிருக்கும் இந்த பள்ளிக்கூடங்களில் இணைந்து கொள்கிறார்கள். மாலை நேரம், விடுமுறை நாள்களில் பாடசாலைக்குச் செல்வதில் அலாதியான பிரியம் கொண்டிருக்கிறார்கள்.
இதனால்தான் உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான முனைவர் பட்ட ஆய்வுகளை முறையாக முடித்தவர்களை டென்மார்க்கில் பார்க்கிறோம். திருமணம், குழந்தைப்பேறு, ஏனைய காரணங்களுக்காகக் கல்வியைக் கைவிடுவது, முனைவர் பட்ட ஆய்வை பாதியில் நிறுத்தி விடுவது போன்ற எதையும் அங்குப் பார்க்க முடியாது.
மருத்துவத்துக்காக 5 முறை, இயற்பியலில் 3 முறை, வேதியியலில் 3 முறை, இலக்கியத்தில் 3 முறை என 14 முறை நோபல் பரிசு பெற்றவர்கள் டேனிஷ் மக்கள் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என வாசிக்கும்போது நாமும் இதை முயன்று பார்க்க வேண்டுமே என மனம் துடிக்கிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com