

வகுப்பறை என்பது சமூகநீதி, ஜனநாயகம், பகுத்தறிவுச் சிந்தனை இவற்றை வளர்த்திட வேண்டும். கல்வி என்பது அநீதிகளை எதிர்த்து கேள்வி எழுப்பும் மனிதர்களை உருவாக்கும் ஒரு கருவியாக பயன்பட வேண்டும். - ஹென்றி கிரௌக்ஸ் அறிவியல்
அறிஞர் கலிலியோ தன்னுடைய ஆசிரியர் வகுப்பறையில் ஈர்ப்பு விசை குறித்து நடத்திய பாடம் தவறு என்பதை நிரூபிக்க பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தில் இருந்து நடத்திய பிரபலமான அறிவியல் சோதனையை வரலாறு மறக்காது. கல்லூரி பேராசிரியர்களை எதிர்த்து கேள்விகள் எழுப்பி பாதியில் வெளியேறி பின்நாளில் பன்னாட்டு ஆப்பிள் நிறுவனராக மாறியவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகம் போற்றும் தத்துவஞானி சாக்ரட்டீசையே அவரது மாணவர் பிளாட்டோ எதிர்த்து கேள்வி கேட்டதிலிருந்து தொடங்கியது இது.
விமர்சனப்பூர்வக் கல்வி: இதைத்தான் விமர்சனப்பூர்வக் கல்விமுறை என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கல்விமுறையைச் சாதித்தவர் பாலோ பிரேயரே என்னும் போர்ச்சுக்கீசிய இடதுசாரி கல்வியாளர். ஹென்றி கிரௌக்ஸ் அண்மையில் எழுதிய “அறிவு ஜீவிகளாக ஆசிரியர்கள்” என்கிற புத்தகத்தில் 16 அற்புத கட்டுரைகள் உள்ளன. விமர்சனப்பூர்வக் கல்வி முறையை தமது வகுப்பறைகளில் அறிமுகம் செய்யும் ஆசிரியர்கள், தலைசிறந்த வல்லுநர்களாக, விஞ்ஞானிகளாக மாறக்கூடிய மாணவர்களை உருவாக்குவார்கள் என இந்தப் புத்தகம் தொடங்குகிறது. அவர்கள்தான் அறிவுஜீவிகளாக விளங்கும் ஆசிரியர்கள்.
அது என்ன விமர்சனப்பூர்வக் கல்விமுறை? இந்தக் கல்விமுறையை அறிமுகம் செய்த பாவுலோ பிரையரே தற்போதைய கல்விமுறையை வங்கி முறைக்கல்வி என்று குற்றம்சாட்டினார். வங்கியில் பணம் போடுவதுபோல ஒரு வகுப்பறையில் உட்கார்ந்திருக்கும் அனைத்து மாணவ செல்வங்களின் மூளைக்குள் அரசு அறிவு என்று கொடுக்கின்ற விஷயங்களை ஓர் ஆசிரியர் போட்டு மூடுகிறார்.
இந்த வகுப்பறைகளில் ஆசிரியர் என்பவர் அனைத்தும் அறிந்தவர். மாணவர்கள் இனிமேல்தான் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற தாழ்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள். வகுப்பறையின் அனைத்து அதிகாரங்களும் ஆசிரியர்களிடம் உள்ளன. அவர்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டிய அடிமைகளாக மாணவர்கள் உள்ளனர். எதையுமே எதிர்த்து கேள்வி கேட்காத நாட்டின் குடிமக்களை உருவாக்கும் சதி இந்தக் கல்வியின் பின்னணியில் உள்ளது என்பது விமர்சனப்பூர்வக் கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.
மாணவர் எனும் இளைய ஆசிரியர்: மாணவர்களை மனப்பாடம் செய்யும் எந்திரங்களாக அல்லாமல் சமூகத்தை மாற்றும் சிந்தனையாளர்களாக உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என்பது இவர்களின் நிலைப்பாடு. கல்வி விடுதலைக்கான கருவியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் பழைய அரசியல் சமூக நெறிகளையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் சுதந்திர வகுப்பறைகளை அவர்கள் உருவாக்கினார்கள்.
இந்தப் புத்தகம் ஆசிரியர் என்பவர் ஒரு மூத்த மாணவர் என்றும் மாணவர் என்பவர் ஓர் இளைய ஆசிரியர் என்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு பிரச்சினையை அலசி ஆராய்ந்து வகுப்பறையில் உரையாடல் விவாத முறையில் தீர்வுகளை அடைகிறார்கள்.
இந்தக் கல்விமுறைப்படி வகுப்பறையில் பேசுவதற்கான வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பெறுகிறார்கள். உண்மையான வாழ்க்கை தொடர்பான பாடங்களை இந்த வகுப்பறைகள் கொண்டுள்ளன. பொதுவாக, தன்னெதிரே நடைபெறும் அநியாயங்களைத் தட்டிக் கேட்காமல் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிப்போகும் மனிதர்களை உருவாக்கும் வேலையைத்தான் நமது கல்விமுறை செய்து வருகிறது.
கண் முன்னால் விபத்தில் சிக்கி இறந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரைக் காப்பாற்றத் துடிக்காமல் அதை தன் கைப்பேசியில் வீடியோ எடுக்கும் கொடூர மனநிலைக்கு நமது சமூகம் மாறியதற்கு வங்கி முறை கல்விதான் காரணம் என்பது இவர்களது குற்றச்சாட்டு.
சமூகத்தின் அனைத்து வகையான நிகழ்வு களிலும் பங்கேற்கும் பகுத்தறிவு மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என இந்தப் புத்தகம் முன்மொழிகிறது. இதற்காக வீட்டுப் பாடங்களை எழுத்து வடிவில் தராமல் தான் வசிக்கும் பகுதியில் மனிதர்களைச் சந்திக்கும் சமூக சிந்தனை சார்ந்த செயல் திட்டங்களை அறிவிப்பது உள்படப் பலவற்றை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com