

உள்ளூர் நிலைகளை மீறி சர்வதேச போட்டி, அடையாளங்களைத் தக்க வைக்க ஒரு நாட்டின் போராட்ட ஆயுதம் கல்வி என்பதை யாரும் மறுக்க முடியாது - சூ யாங்சின்
உலகப் புகழ் வாய்ந்த ஆய்வு இதழான ‘நேச்சர்’, ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் சர்வதேச அளவில் அந்த ஆண்டு வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வின் முடிவுகள், அறிவியலின் எழுச்சி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. கல்வியின் கெளரவ அடையாளமாக இந்த தரவரிசைக் கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவை முந்திக்கொண்டு சீன பல்கலைக்கழகங்கள் இதில் முதலிடம் பிடித்தன.
தற்போது உலகளவில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் முன்னணியில் இருக்கும் 10 நிறுவனங்களில் ஏழு சீனாவைச் சேர்ந்தவை. வரலாற்றிலேயே முதல்முறையாக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் முதல் 10 இடங்களில் இடம்பெற வில்லை. இந்தியாவின் டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதுவும் 210 இடங்களுக்குக் கீழே.
2 தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி: என்ன நடந்து கொண்டிருக்கிறது சீனாவில் என்பதை அறிய சீனக் கல்வியாளர் சூ யாங்சின் சமீபத்தில் எழுதிய “புதிய கல்விமுறையை நோக்கி” என்கிற புத்தகத்தை வாசித்தேன். 2002ஆம் ஆண்டு முதலே புதிய வகை கல்விப் பாதையில் சீனர்கள் பயணித்து வருகின்றனர். இதை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவர் சூ யாங்சின். உலகின் மிகப்பெரிய அரசுக் கல்வி முறையை நடத்தி வருபவர்கள் சீனர்கள்.
29 கோடியே 30 லட்சம் மாணவர்கள், ஒரு கோடியே 88 லட்சம் ஆசிரியர்கள் என்கிற எண்ணிக்கையில் பிரம்மாண்ட மனித வளத்தைக் கொண்ட சீனக் கல்வி அமைப்பில் ‘ஷுவாங்ஜியாங்’ (Shuangjian) என்கிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் இரண்டு விஷயங்களை அவர்கள் சாதித்தார்கள். ஒன்று, தனியார் டியூஷன் மையங்கள் மூடப்பட்டன. இரண்டு, வீட்டுப் பாடங்கள் தருவதில்லை.
வெற்றிக்கு ஆங்கிலம்: அந்த நேரத்தில் மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும். பள்ளிக் கல்வியின் ஒரு பகுதியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுயமாக ஆங்கிலம் கற்று சான்றுகளை மாணவர்கள் பெற வேண்டும். இதற்காகத் தனியார் பயிற்சி நிறுவனங்களை தன்னுடைய கல்வி சந்தைக்குள் சீனா அனுமதித்துள்ளது.
தாய் மொழி அறிந்த ஆங்கில ஆசிரியர்களுக்கு இன்று சீனாவின் நட்சத்திர அந்தஸ்து. உலக அளவிலான போக்கை புரிந்து கொண்டு ஆங்கிலத்தை ஆய்வு மொழியாக சீனா அங்கீகரித் துள்ளது. ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுங்கள் அல்லது அழிந்து போய்விடுங்கள் (PUBLISH IN ENGLISH OR PERISH) என்கிற வாசகம் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் மட்டுமல்ல அனைத்து கல்விக்கூடங்களிலும் பொறிக்கப் பட்டுள்ளது.
தொடக்கம் தாய்மொழி: சிறு நகரங்கள் முதற்கொண்டு லட்சக்கணக்கான மைதானங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டித் துரித ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பயிற்சி பெற்று நிபுணத்துவம் அடைய விரும்பினால் மூன்று மாதங்கள் விடுப்பும் தரப்படுகிறது. ராணுவத்தில் உள்ளவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருமே ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுகிறார்கள்.
இதனால், உலக அளவில் ஆராய்ச்சி துறையிலும் கல்வியிலும் சீனா வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் தாய்மொழியையும் விட்டுக்கொடுக்காமல் ஒரு விதி நடைமுறையில் உள்ளது. முனைவர் பட்ட ஆய்வுகளை ஆங்கிலத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும். அதே சமயத்தில் ஒரு பிரதி சீன மொழியில் கண்டிப்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நம்முடைய ஐந்தாம் வகுப்பு என்கிற நிலைக்கு இணையான சீன ஆரம்பக் கல்வி என்பது முழுக்க தாய்மொழியில் மட்டுமே நடைபெறுகிறது. அதன் பிறகு சர்வதேச கல்வி என்கிற பெயரில் அறிவியல், அரசியல், பொருளாதாரம் போன்ற பாடங்களுடன் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பாகக் கல்வி மாற்றப்படுகிறது. ஆங்கிலம் முதன்மை பாடமாக, தாய்மொழியை அடுத்துக் கற்பிக்கப்படுகிறது. கற்கை நன்றே.. கற்கை நன்றே சீனாவை பார்த்தும் கற்கை நன்றே.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com