

சில வருடங்களுக்கு முன்பு நானும் நண்பர்களும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தோம். எங்கள் எதிரில் சிலர் அமர்ந்திருந்தனர். நாங்கள் அனைவரும் அவரவர் வீட்டு விசேஷங்களைப் பேசிக்கொண்டிருந்தோம், பணப்பற்றாக்குறையால் படும் அவஸ்த்தையைப் பேசினோம், கொஞ்சம் அரசியல் பேசினோம்.
நாங்கள் ஆசிரியர்களாக இருந்தும் குழந்தைகள் பற்றியோ, கற்பித்தல் பற்றியோ, பள்ளிக்கூடங்கள் பற்றியோ அப்போது பேசவில்லை. எங்கள் எதிரில் அமர்ந்திருந்தவர் எங்களைப் பார்த்து “நீங்கள் அனைவரும் ஆசிரியர்களா?” என்று கேட்டார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.
அவர் கண்டுபிடித்தது எப்படி? - நான் சிரித்துக்கொண்டே “எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது? நாங்கள் கல்வியைப் பற்றியோ, குழந்தைகள் பற்றியோ, ஊதிய உயர்வு பற்றியோ பேசவேயில்லையே” என்று கேட்டேன்.
அதற்கு அவரும் சிரித்துக்கொண்டே “எல்லாரும் இவ்வளவு நெருக்கமாக அருகருகே உட்கார்ந்திருந்தும் இவ்வளவு உரக்கப் பேசுகிறீர்களே. இதிலிருந்து தெரிகிறதே” என்றார். அப்போதுதான் அந்த உண்மை எங்களுக்கு உறைத்தது.
பல வகுப்பறைகளிலும் ஆசிரியர் பேசுவது தெரு தாண்டி இருப்பவருக்குக் கேட்கும் அளவுக்கு இருக்கும். ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு குழந்தைகளும் அதே அளவு உரத்த குரலில் பதிலளிப்பார்கள்.
வகுப்பறை என்பது தொற்றுநோய் பரவும் இடம் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. நாம் உற்சாகமாக இருந்தால் குழந்தைகளும் உற்சாகமாக இருப்பார்கள். நாம் சோகமாக இருந்தால் குழந்தைகளும் சோகமாக இருப்பார்கள். இத்தகைய மெளனத்தாக்கம் மூலம் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்காமலே குழந்தைகள் கற்றுக்கொள்பவை அதிகம்.
காரணம் என்ன? - வகுப்பறையில் நான்கு சுவர்களுக்குள்ளே குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். ஆசிரியர் பேசுகிறார். ஆனால், மூன்று வகுப்பு தாண்டி கேட்கிறது. அதற்கு கீழ்வருபவை காரணங்களாக இருக்கலாம்.
1. சத்தமாகப் பேசினால்தான் அது உற்சாகமான வகுப்பு என்ற நம்பிக்கை
2. புத்தகங்கள் அச்சிடப்படாத பழைய காலத்தில் சுவடிகளைப் பார்த்து அல்லது ஒரேயொரு பிரதியை வைத்து மாணவர்களுக்கு “பாடம் கேட்டல்” என்ற முறையில் கற்பித்ததின் தொடர்ச்சி.
3. உரக்கப் பேசினால் கவனிக்காத குழந்தையும் கவனிக்கும் என்ற எண்ணம்.
4. நான் வகுப்பை நன்றாக நடத்துகிறேன் என்று பள்ளி தலைமையாசிரியருக்கு உணர்த்துவதற்கு.
5. உரக்க வாசித்தால்தான் மனதில் பதியும் என்ற நினைப்பு.
6. கற்றலில் கேட்டல் நன்று என்பதற்கு அதிக அழுத்தம் கொடுப்பது…
வீட்டில் பெற்றோர்களும் இதே எண்ணத்தோடு செயல்படுவதைப் பார்க்கலாம். அமைதியாகப் படித்துக் கொண்டிருக்கும் குழந்தையிடம் உரக்கப்படி, அப்போதுதான் நீ படிக்கிறாய் என்று தெரியும் என்று சொல்லி உரக்கப்படிக்க வைப்போம். குழந்தையின் மீது எவ்வளவுநம்பிக்கை பாருங்கள்!
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in