முத்துக்கள் 10 - லீப் ஆண்டு வந்தது எப்படி?

முத்துக்கள் 10 - லீப் ஆண்டு வந்தது எப்படி?
Updated on
2 min read

இந்த ஆண்டு 366 நாட்கள். அதற்கு காரணம் பிப்ரவரி 29-ம் தேதியான இன்று. லீப் ஆண்டாக (Leap Year) 2024 மாற காரணமான லீப் நாள் (Leap Day) பிப்.29 குறித்த சுவாரசியமான முத்துக்கள் 10:

# லீப் நாள் அல்லது மிகுநாள் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகக் கருதப்படுகிறது. இதற்கு முந்தைய மிகுநாள் 2020-ல் வந்தது, அடுத்த மிகுநாள் 2028-ல் வரும்.

# வழக்கமாக 365 நாட்களைக் கொண்டது ஓராண்டு எனப்படுகிறது. ஏனென்றால், சூரியனை முழுவதுமாக ஒரு முறை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் அவகாசம் இது. ஆனால், 365 என்பது ஒரு தோராயமான எண்ணிக்கை மட்டுமே. துல்லியமாக கணக்கிட்டால் பூமி சூரியனை முழுமையாக ஒருமுறை சுற்ற 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள், 56 நொடிகள் ஆகும். இது விண்மீன் ஆண்டு (sidereal year) எனப்படுகிறது.

# நாட்காட்டியில் உள்ள 365 நாட்களைவிட மிகுநாள் ஆண்டு சற்று கூடுதலானது. எனவே கூடுதலான இந்த நேரத்தை சரிக்கட்டுவதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு முழு நாள் நமது நாட்காட்டியில் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது.

# இதில் பிப்ரவரியில் மிகுநாள் சேர்க்கப்பட காரணம் பண்டைய ரோமாபுரியின் மாமன்னர் ஜூலியஸ் சீசர். அதுவரை பின்பற்றப்பட்டு வந்த சூரிய நாட்காட்டியுடன் ஜூலியன் நாட்காட்டியை கி.மு. 45-ம்ஆண்டில் சீசர் அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் மிகுநாள் ஆண்டு சேர்க்கப்பட்டது.

# பின்னர் ஜூலியன் நாட்காட்டியானது 1852-ல் கிரிகோரியன் நாட்காட்டியாக மேம்படுத்தப்பட்டது. இருப்பினும் பிப்ரவரி மாதத்தில் மிகுநாள் கடைபிடிக்கப்படும் பாரம்பரியம் தொடர்ந்தது.

# மிகுநாள் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் 5-ம் நூற்றாண்டிலிருந்து கடைபிடிக்கப்படும் விநோதமான பாரம்பரியம் உள்ளது. அயர்லாந்து வாழ் திருமணமாகாத ஆண்களிடம் அவர்களை விரும்பும் பெண்கள் தங்களது காதலை இந்நாளில் தெரிவிக்கலாம். இது மிகுநாளில் நடைபெறும். ஒருவேளை அந்த பெண்ணை குறிப்பிட்ட ஆணுக்குப் பிடிக்காமல் போனால் அந்தப் பெண்ணுக்குப் பட்டாடைகள் மற்றும் கையுறைகளை நிராகரிக்கும் ஆண் வாங்கித் தர வேண்டும் என்கிற சம்பிரதாயம் உள்ளது.

# ஒருவேளை மிகுநாள் ஆண்டுகளை கடைபிடிக்காமல் போனால், ஆண்டுதோறும் அதிகரிக்கும் 6 மணிநேரத்தை கணக்கிடாமல் போனால் பருவ காலங்களை துல்லியமாக கணிக்க முடியாமல் போகும் அபாயம் உள்ளது.

# இதனால் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கோடைக்காலம் மே மாதத்திற்கு பதில் டிசம்பரில் வரும். இதனால் பல குழப்பங்கள் ஏற்படக்கூடும்.

# நான்காண்டுகளுக்கு இடையில் வரும் ஆண்டெல்லாம் லீப் ஆண்டு ஆகிவிடாது என்றும் அறிவியல் விளக்குகிறது.

# இதற்கு காரணம், ஒரு ஆண்டின் துல்லியமான நீளம் 365.242222 நாட்கள். ஆனால் நமது நாட்காட்டியில் 365 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தக் குறைபாட்டைச் சரிசெய்வதற்காகத்தான் மிகுநாள் ஆண்டுகள் இருக்கின்றன. அவற்றின் விதி என்னவென்றால், ஓர் ஆண்டை நான்கால் வகுத்து மீதி இல்லாமல் வந்தால் அது மிகுநாள் ஆண்டாகும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in