

வியர்வையும் அதனால் உடலில் வீசும் வாடையும் எதனால் என்று கடந்த வாரம் பேசத் தொடங்கினோம். கோபம், பதற்றம், மன அழுத்தம், மகிழ்ச்சி, பருவக் கிளர்ச்சி போன்ற நிலைகளில் எபோக்ரைன் சுரப்பியானது அக்குள், மார்புகள், பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளில் ஒருவிதமான வியர்வை சுரக்கச் செய்யும். அதுவே எக்ரைன் வியர்வை என்பது வெப்ப நிலை மற்றும் விளையாட்டுகளில் வெளியேறக்கூடியதாகும்.
அதாவது எக்ரைன் வியர்வை என்பது கூலிங் சிஸ்டம் என்றால் எபோக்ரைன் வியர்வை என்பது ஹார்மோன் சிஸ்டம் எனலாம். இந்த ஹார்மோன் விளையாட்டுகள், ஆண்களை விட பெண்கள் உடலில் அதிகம் என்பதால் வியர்வை வாடையும் இவர்களுக்கு அதிகம் காணப்படுவது இயல்பாகும்.
ஆக, உடலெங்கும், உள்ளங்கை, உள்ளங்கால்களில் அதிகம் இருப்பவை எக்ரைன் வகைச் சுரப்பிகள்தான். பிறந்தது முதலே செயல்படத் தொடங்கும் இந்த வகை சுரப்பிகளின் அடர்த்தி, வயது கூடக்கூட குறைவதும், அதேபோல உடல்பருமன் உள்ளவர்களுக்குக் குறைவதும் இயல்பு.
ஆனால், மீராவின் கேள்வியின்படி 10-ம்வகுப்பு படிக்கும்போது கூட உள்ளங்கை நனையும் அளவு வியர்ப்பது எப்படி என்றால், மீராவிற்கு உள்ளது எக்ரைன் வகை சுரப்பிகள் அதிகமுள்ள ஹைப்பர்-ஹிட்ரோசிஸ் (hyperhidrosis) எனும் நிலையாகும்.
பொதுவாக வயது கூடக் கூட, இந்த நிலை தானாவே மாறிவிடும் என்பதால் மீராவுக்குத் தேவையெல்லாம் விழிப்புணர்வும் நம்பிக்கையூட்டலும் தான். அதேசமயம், இதில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க, போதிய அளவு தண்ணீர் பருகுவது, உப்புச் சத்துகள் குறையாமல் இருக்க, ஓ.ஆர்.எஸ் அல்லது இளநீர் பருகுவது, நீர்த்தன்மை நிறைந்த காய் கனிகளை உட்கொள்வது, இரண்டு முறையாவது குளிர்ந்த நீரில் குளிப்பது, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது ஆகியன நன்மை பயக்கும். தேவைப்படும்போது, தோல் நோய் நிபுணரிடம் ஆலோசனைகள் பெற்று வியர்வையை உறிஞ்சும் அலுமினியம் க்ளோரைட் வகை களிம்புகளைப் பயன்படுத்துவதும் நல்லது.
அதேசமயம் பாரதிக்கு உள்ளதுபோல, வாடை வீசும் மற்ற வியர்வையை bromhidrosis என அழைக்கும் தோல் நோய் மருத்துவர்கள், இது பொதுவாக அக்குள் பகுதியில் மட்டும் காணப்படும் ஹைப்பர்-ஹிட்ரோசிஸ் நிலை என்கிறார்கள். ஆக, இதற்கான தீர்வும் மேற்சொன்ன வழிமுறைகள் அனைத்தும் தான் என்றாலும், வாசனையூட்டும் டியோடரெண்ட்ஸ் பயன்பாடு, பிரத்தியேகமான under arm pads பயன்பாடு இதில் தற்காலிகமாக உதவும் என்பதுடன், சரும வல்லுநர்கள் பரிந்துரைக்கும் 'போட்டாக்ஸ்' (botox), அயனி இடப்பெயர்வு (iontophoresis) அல்லது லேசர் சிகிச்சைகள் இதில் நிரந்தரத் தீர்வாகவும் விளங்குகிறது என்பதால் வாய்ப்புள்ளவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக வியர்வை என்பது உடலின் நச்சுகள் வெளியேறும் ஒரு இயற்கை நிலை என்பதே உண்மை.
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com