

தூய லூயிஸ் தேவாலயத்தின் அடித்தளத்தில் வழக்கம்போல் அன்றும் ரகசியமாய் பாடம் நடந்து கொண்டிருந்தது. மற்ற வகுப்பறைகளைப் போல் அங்கு வசதியான மேசைகள் கிடையாது. காற்றோட்டத்திற்கும் ஒளி புகுவதற்கும் ஜன்னல் கிடையாது. மெழுகுவர்த்தி அனல், பிஞ்சு மாணவர்களின் மேனியை மேலும் வெப்பமூட்டும். அனைத்து உபாதைகளையும் தாண்டி ஜான் பெர்ரி பாடமெடுத்துக் கொண்டிருந்தார்.
திடீரென உள்ளே புகுந்த அந்நகரத்து ஷெரிப், “இனி இங்கு வகுப்புகள் நடக்காது. எல்லோரும் வீட்டுக்குச் செல்லுங்கள். மீறி பாடம் கேட்டால், அனைவரையும் சிறையிலடைத்து அடிமையாக்குவோம்” என்று வகுப்புறைக் கதவைத் தாழிட்டார். மாணவர்கள் அதிர்ந்து போயினர். யார் இந்த ஷெரிப்? இந்த குழந்தைகள் கல்வி கற்பதால் மாகாண அரசுக்கு என்ன நஷ்டம்? ஜான் ஏன் ரகசியமாய் பாடம் நடத்தினார்? 18ஆம் நூற்றாண்டு அமெரிக்கச் சூழலைப் புரிந்து கொண்டால், இக்கேள்விகளுக்கான பதில் கிட்டும்.
அடிமைத்தளை உடைக்க! - அமெரிக்கா விர்ஜீனியா மாகாணத்தில் கறுப்பின குடும்பத்தில் 1789ஆம் ஆண்டு ஜான் பெர்ரி மீச்சம் பிறந்தார். பரம்பரை பரம்பரையாக வெள்ளையினத்தவர்களுக்கு அடிமையாக வாழ்ந்த குடும்பம் அது. அடிமைத்தளை உடைக்க ஜான் கடுமையாக உழைத்தார். கெண்டுக்கி சால்ட்பெட்டர் குகையில் இரவு பகல் பாராமல் உழைத்து தன்னையும் தன் பெற்றோரையும் பணம் கொடுத்து விடுவித்தார்.
ஆனால், தன் மனைவியை விடுவிப்பதற்குள், ஜான்-ஐ மிசெளரி மாகாணத்து அடிமை வேலைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். மனம் கலங்காத ஜான், மூன்று டாலரை கையிலேந்திக் கொண்டு மிசெளரி நோக்கி நடந்தார்.
குறுக்கே ஓடிய மிசிசிப்பி ஆற்றைக் கடக்கவே 2 டாலர் செலவழிந்தது. மிச்சமிருந்த ஒற்றை டாலரை முதலாகக் கொண்டு பேரல் கட்டுமானம், தச்சு வேலை என்று பல வேலைகளைச் செய்து அதில் கிடைத்த சம்பாத்தியத்தால் மனைவியை விடுவித்து, அதே மாகாணத்தில் குடியமர்ந்தார்.
ஆப்பிரிக்க மக்களுக்கான முதல் திருமுழுக்கு தேவாலயத்தை தூய லூயில் பகுதியில் தொடங்கி, அதன் போதகரானார். கறுப்பின மக்களுக்குப் பாடம் சொல்லித்தர அன்று யாரும் தயாராக இல்லை. எனவே தேவாலய அடித்தளத்தில் ரகசியமாய் பாடமெடுத்து வந்தார். அக்கம் பக்கத்திலிருந்த மாணவர்கள் நாள்தோறும் சென்று அவரிடம் கற்றனர்.
இவரைக் கண்டு பல கறுப்பினத்தவர்கள் மாகாணந்தோறும் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தனர். இதனை அறிந்த அரசு, 1847ஆம்ஆண்டு ‘கறுப்பினத்தவர்கள் இம்மாகாணத்தில் பாடம் கேட்க உரிமைக் கிடையாது’ என சட்டமியற்றியது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஜான் நடத்திவந்தரகசிய தேவாலய வகுப்பறைக்கு ஷெரிப்மூடுவிழா நடத்தினார். ஜான் செய்வதறியாமல் குழம்பிப் போனார்.
விடியல் பிறந்தது! - கல்வி கற்பதில் இடைவெளி விழுந்தால், மாணவர்கள் சுரங்க வேலைக்கும் கப்பல் வேலைக்கும் செல்ல பெற்றோர் வற்புறுத்துவர் எனத் துடித்தார். கண்கூடாகவே பலர் வேலைக்குச் செல்வதைப் பார்த்து, தன் மனைவியிடம் இரவு பகலாகப் புலம்பினார். மிசிசிப்பி ஆற்றோட்டத்தின் வேகத்தைக் காட்டிலும் தீவிரமாக யோசித்து முடிவெடுத்தார். அமெரிக்கக் கறுப்பின கல்வி வரலாற்றில் அதுவொரு மைல்கல்.
காவலர்கள் எல்லோரும் வீடடைந்த பிறகு, சூரியன் மறையும் நேரத்தில் ஜான் தன் மாணவர்களை மிசிசிப்பி நதிக்கரைக்கு அழைத்து வந்தார். சிறிய படகின் மூலம் அனைவரையும் தொலைவிலிருந்த நீராவிக் கப்பலுக்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்ற மாணவர்களுக்குப் பீறிட்டது ஆச்சரியம். வசதியான மேசைகள். காற்றோட்டமான ஜன்னல்கள். ஏராளமான நூல்கள் அடங்கிய சிறிய நூலகம். இத்தனை சௌகரியமான வகுப்பறையை இதுவரை அவர்கள் பார்த்ததில்லை.
அங்கிருந்த மாணவன் ஒருவன் ஜான் பெர்ரியை நோக்கி, “நம் மாகாணத்தில் கறுப்பினத்தவர்கள் பாடம் கேட்க அனுமதியில்லையே, நம்மை அடிமையாக்கி விடுவார்களா, சார்?” என்று கேட்டான். “இந்த மிசிசிப்பி நதி தனியொரு மாகாணத்துக்குச் சொந்தமானது அல்ல.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் உரியது. இனி இந்த மிதக்கும் நீராவிக் கப்பலில், நீங்கள் சுதந்திரமாகப் பாடம் கேட்கலாம்” என்று ஜான் பொறுமையாகச் சொன்னார். ஆற்று நீர் மெல்ல சலசலத்தது. சுலபத்தில் கிடைத்திடாத கல்வி உரிமையை நாள்தோறும் ருசித்துச் சுவைத்துப் பயனடைவோம்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர். தொடர்புக்கு: iskrathewriter@gmail.com