

கடந்த 61 அத்தியாயங்களில் பணம் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு வளமாக்குகிறது? அதனை எவ்வாறு வெற்றிகரமாகக் கையாள்வது? தனிநபர் நிதி மேலாண்மை மூலம் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? என்பது குறித்த பல்வேறு அம்சங்களை பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அதன் மொத்த சாராம்சத்தையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
தனிநபர் நிதி மேலாண்மையில் பால பாடமே பணத்தை நேசிப்பது தான். நாம் வெறுக்கும் எந்த ஒரு விஷயமும் நம்மை விட்டு விலகிவிடும். எனவே பணத்தை நேசித்து, அதில் உச்சபட்ச இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதனை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
சர்வமும் பணமயமாக மாறிவிட்ட இந்த உலகில், பணத்தைப் பற்றி எப்போதும் நெகட்டிவாக பேசிக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது. விதண்டாவாதமாக பணத்தை திட்டிக்கொண்டு இருந்தால் வறுமையும் கடனும் மட்டுமே நிரந்தர சொத்தாக மாறும். பணத்தில் புரளும் உலகில் எந்த கோடீஸ்வரனும் பணத்தை பற்றி எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருப்பதில்லை.
தனிநபர் நிதி மேலாண்மை முக்கியம்: பணத்தை பற்றி பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வருமானத்தைப் பெருக்க வேண்டும். வருமானத்தை பட்ஜெட் போட்ட பிறகே செலவு செய்ய வேண்டும். செலவு செய்வதற்கு முன்பாக சேமிப்புக்கு தேவையான நிதியை முதலில் எடுத்துவைக்க வேண்டும். செலவை குறைக்க சிக்கனத்தை பழக வேண்டும். அதிக லாபம் வரும் திட்டங்களை கண்டறிந்து அதில் சேமிக்க வேண்டும். அரசு தரும் வரிவிலக்குகளைப் பயன்படுத்தி வருமான வரியைக் குறைக்க வேண்டும்.
சேமிப்பைக் காட்டிலும் சிறந்த முறையில் முதலீடு செய்ய கற்க வேண்டும். முதலீட்டை ஒரே இடத்தில் செய்யாமல் பல வகைகளாக பிரித்து பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் பாதுகாக்க, கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும். கடன் வாங்கக் கூடாது. அப்படியே வாங்கினாலும் அதனை எவ்வாறு அடைக்க வேண்டும் என்பதை எல்லாம் நமக்கு கற்றுத் தருவது தான் தனிநபர் நிதி மேலாண்மை.
பொருளாதாரத்தில் தொழில்சார் நிதி மேலாண்மை, பன்னாட்டு நிதி மேலாண்மை, நிறுவன நிதி மேலாண்மை, தனிநபர் நிதி மேலாண்மை என பலவகைகள் இருக்கிறது. இதில் தனிநபர் நிதி மேலாண்மை தான் ஒவ்வொரு மனிதனுடனும், குடும்பத்துடனும் நேரடியாகத் தொடர்புடையது. அதனை பள்ளியிலும், கல்லூரியிலும் கூட யாரும் கற்றுக்கொடுப்பதில்லை. சாமானிய மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்த தனிநபர் நிதி மேலாண்மையை கற்றுக்கொண்டால் வாழ்க்கை வசமாகிவிடும்.
பொருள் அவசியம்: உலகின் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறள் அறம், இன்பம் ஆகியவற்றுக்கு இணையாக பொருள்சார் உலகிற்கு போதிய முக்கியத்துவம் அளிக்கிறது. அதில் வள்ளுவர், 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று ஆணித்தரமாகச் சொல்லிவிடுகிறார். அறமும் இன்பமும் நிலைத்திருக்க பொருள் அவசியம் என்பதையும் சுட்டுகிறார்.
தகவல் தொழில்நுட்பமும் செலவினங்களும் வளர்ந்திடாத அக்காலத்திலே பண்டைய தமிழ் இலக்கியங்கள் பொருளாதாரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளித்திருக்கின்றன என்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. செலவினங்கள் மலைப்போல பெருகிவிட்ட இக்காலத்தில் பொருளாதார அறிவு பெரும்பாலோருக்கு இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
அதிலும் தனிநபர் நிதி மேலாண்மைசார் அறிவு, நாட்டில் 25 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே உள்ளது. வாழ்வில் கரைசேர உதவும் கலங்கரை விளக்காக இருக்கும் அனைவருக்கும் தனிநபர் நிதி மேலாண்மையை கற்பிப்பது தலையாய கடமையாகும்.
யாவருக்கும் பொருளாதார விடுதலை: நம்முடைய அரசியலமைப்பு சட்டம் நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. சமூக, அரசியல் விடுதலைக்கு இணையாகத் தனிநபரின் பொருளாதார விடுதலையை முன்வைக்கிறார் டாக்டர் அம்பேத்கர். நாட்டில் ஒவ்வொருவரும் பொருளாதார விடுதலையை அடைய வேண்டுமென்றால் அரசும் சமூக அமைப்புகளும் குடிமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
தேர்வில் பாஸ் (Pass) ஆவதற்கு வழிகாட்டும் கல்வி நிலையங்கள், இனி வாழ்க்கையில் பாஸ் (Boss) ஆவதற்குத் தனிநபர் நிதி மேலாண்மையை அனைவருக்கும் போதிக்க வேண்டும்.
(முற்றும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in