கனியும் கணிதம் 54: கனியட்டும் கணிதம்

கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com
கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com
Updated on
2 min read

கணிதம் எங்கும் நிறைந்துள்ளது. இதனை ஒரு வரியாகக் கடந்துவிடாமல், காலை எழுந்ததிலிருந்து, குளிப்பது, பள்ளிக்குக் கிளம்பு வது, வண்டியில் செல்வது, இதிலெல்லாம் என்ன கணிதம், வகுப்பறையில், அதன் பரப்பளவு, அதற்கு வண்ணம் தீட்டுவது, குடிக்கும் தேநீரில் கணிதம், உடலில் இருக்கும் எண்கள், தலையில் இருக்கும் எண்கள், ஊருக்குப் போகும்போது கணிதம் எனச் சுற்றிச் சுற்றி கணிதத்தை பார்த்தோம்.

இன்னும் இன்னும் கணிதம் எங்கும் நிறைந்துள்ளது. அது இனிப்பான ஒன்று. கடினம் கடினம் எனச் சொல்லிச் சொல்லியே அதை பாதி கடினமாக்கிவிட்டனர். மேலும் அதைத் தலைமுறை தலைமுறையாகவும் கடத்தவும் செய்கின்றனர்.

தாத்தா மகனுக்கு “கணக்குன்னா கஷ்டம்டா” எனச் சொல்லத்தொடங்கி, அப்பா அடுத்த தலைமுறைக்கு சொல்லி, அக்கா தம்பிக்குச் சொல்லி, கணக்கு வகுப்பறைக்குள் உட்காரும் முன்னரே கணக்குன்னா கஷ்டம் என்ற மனநிலையோடு உட்கார்கின்றார்.

அது மேலும் மேலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கணிதம் நம் தினசரிகளில் பின்னி பிணைந்துள்ளது என்பதே உண்மை. கடந்த 50 கட்டுரைகளில் அதனைப் பார்த்துக்கொண்டே வந்தோம்.

எங்கும் எதிலும்: கணிதம் என்றால் வெறும் எண்கள் மட்டுமேஅல்ல. எண்கள் மிக முக்கிய பகுதி. இன்னொரு மிக முக்கியமான விஷயம். குறுக்குவழிகள் நீண்ட பயணத்திற்கு கைகொடுக்காது. தேர்வுகளுக்காக மட்டும் அல்ல கணிதம். அறிவியல் மனப்பாங்கு ஒவ்வொருவருக்கும் மிக முக்கியம்.

அந்த அறிவியல் மனப்பாங்கிற்கு, அறிவியல்பூர்வமாக சிந்திப்பதற்கு, ஆராய்வதற்கு, கணிதக்கூறுகள் மிக அத்தியாவசியமாக அமையும். கணிதத்தின் அடிப்படைகளை மீண்டும் மீண்டும் கற்பதனால் தவறில்லை. பெரிய வகுப்பிற்கு போய்விட்டோம் என்று சின்னவகுப்பு கணிதப் புத்தகங்களைத் தொட்டுவிடாமல் இருக்காதீர்கள்.

சில கூறுகள் இப்போது பார்த்தால் புரியலாம். இன்றைய வகுப்பிற்கு அது கை கொடுக்கலாம். “அடச்ச இதுதானா அது” என உங்களுக்குப் புன்னகையைப் பரிசளிக்கலாம். அதே போல வயது வித்தியாசமின்றிக் கணிதம் பற்றிப் பேசுங்கள்.

அறிவியல் உரைகள் அவ்வப்போது நிகழ்கின்றது ஆனால் கணித உரைகள் வெகுஅபூர்வம். அப்படியே அமைந்தாலும் கணிதமேதையின் வாழ்க்கை வரலாற்றில் சுருங்கிவிடுகின்றோம். உண்மையில் கணிதம் பற்றி பேச பேச அது எவ்வளவு அற்புதமான அழகான ஆழ்கிணறு என்று புலப்படும்.

அதே போலவே கணிதப் புத்தகங்கள் என்று தேடினால் நமக்குக் கிடைப்பது புதிர்களும், அல்லது பாடப்புத்தகம் ஒட்டிய பயிற்சி புத்தகங்கள் மட்டுமே. ஆண்டில் சிறந்த கணித நூல்கள் என்ற பட்டியலைக்கூட நாம் எங்கும் பார்க்க இயலாது. மற்ற துறை நூல்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

கைகொடுக்கும் கணிதம்: நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அங்கே கணிதம் கைகொடுக்கும். கலைத்துறைக்கும் விளையாட்டுத்துறைக்கும் வாசிப்பதற்கும் அறிவியலுக்கும் வானியலுக்கும் வண்டி ஓட்டவும்கணிதம் கைகொடுக்கும். வெற்றி என்பது ஒரு உணர்நிலைதான்.

ஆனால் ஒப்பீடு எனவரும்போது அங்கே எண்கள் கட்டாயம் வந்து சேரும். நீங்கள் உங்களை ஒப்பிட்டாலும் (நேற்றைய நீங்களும் இன்றைய நீங்களும்) அங்கே கணிதம் எங்காவது தேவை.கணிதத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள் வோம். அது நம்மைக் கரை சேர்த்துவிடும்.

கணிதத்தைத் தவிர்த்து வாழலாம். நாம்ஏமாற்றப்படுவது தெரியாமலும், நாம் முன்னேறு கின்றோமா என்று தெரியாமல் வாழ்வதும் நமது தேர்வு மட்டுமே. கணிதம் நமக்கே தெரியாமல் நம்முள் பல சிந்தனை ஊற்றுகளை விளைவிக்கும். வரும் காலம் வெறும் தரவுகளை (Data) வைத்து அல்ல தரவுகளை எப்படி முறைப்படுத்துகின்றோம், ஆராய்கின்றோம், பயன்படுத்தப் போகிறோம் என்பவர்களுக்கே.

எளிமையாக்குவோம்: மகிழ்ச்சியையும் வெற்றியையும் உணர்வுகளையும் நாம் அளவிடமுடியாது. மிகவும் உண்மை. ஆனால் அதன் எதிர் நிலைக்கு போகாமல் இருக்கக் கணிதக் கூறுகள் நமக்குத் துணை நிற்கும். கணிதத்தை இன்னும் எளிமையாக்குவோம். கணிதத்தைத் தேனாக்குவோம். கணிதத்தில் சுவை கூட்டுவோம். கணிதத்தைக் கூட்டாகச் சுவைப்போம். கணிதம், உலகில் இருக்கும் அத்தனை பேருக்கும் கனியா கட்டும்.

- முற்றும்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in