கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

கதை கேளு கதை கேளு 60: சூழலும் பெண்களும்

Published on

அறிவியல் உலகம் அதிசயத் தகவல்களைக் கொண்டது. மனித இனம் பூமியின் வடிவமைப்பை மாற்றியும், தன் வசதிக்கேற்றாற் போல உருமாற்றியும் பெற்றுக்கொண்ட பெருமைகள் எல்லாம், காலநிலை மாற்றத்தால் உரு இல்லாமல் போனதை சூழலும் பெண்களும் புத்தகம் பதிவுசெய்கிறது. நூலாசிரியர் நாராயணி சுப்பிரமணியனின் களஆய்வு தகவல்கள், இந்நூல் முழுவதும் எழுத்துக்களாக மட்டுமில்லாமல், நம் நெஞ்சை முட்களாக மாறியும் குத்துகின்றன.

குடும்பத்தில், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இனமாக, உரிமைகளற்று நடத்தப்படும் பெண்கள், சூழலியல் பாதிப்பில் எவ்வாறு சிக்கிக் கொள்கிறார்கள். சூழலியல் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த உலகம் நம்பிக்கொண்டிருப்பதும் பெண்களைத்தான் என்ற இருவேறு கோணத்தில் நாராயணியின் கட்டுரை செல்கிறது. பெண் இன்னும் எத்தனை விழிப்புணர்வுடன் சிந்திக்க வேண்டும் என்பதையும் கட்டுரை நினைவூட்டுகிறது.

சூழலில் சிக்கியுள்ள பெண்கள்: வியட்நாம் போரின்போது அடர்ந்த காடுகள், தோப்புகளில் யாரும் ஒளியக் கூடாது என்பதால், வயல்வெளிகள், காடுகள் என பல பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் ஏஜென்ட் ஆரஞ்சை தூவின. ஏஜென்ட் ஆரஞ்சு நச்சு தன்மை கொண்டது. ங்கா என்ற பெயருடைய பெண்ணின் உடல் மீது, இந்த ஏஜன்ட் ஆரஞ்ச் தூள் பட்டபோது அதைச் சாதாரணமாக தட்டிவிட்டுச் சென்றார்.

ஆனால் பிறகு அவருக்குத் திருமணமாகி பிறந்த குழந்தைகள் உடல் ஊனமுற்ற குழந்தைகளாக இருந்தனர். போர் நடந்து 40 ஆண்டுகள் கழித்துதான், ஏஜன்ட் ஆரஞ்சு நச்சுத்தூள் தன்மேல் பட்டதால்தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறந்தது என்பதை அறிந்தார் ங்கா.

ஓர் இடத்தின் சுற்றுச்சூழல் கெட்டு விட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாக தான் இருக்கிறார்கள். இன்னொருபுறம் சீரழிந்த சுற்றுச்சூழலை யார் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சூழல் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் பெண்களை பாராட்டும் அதேநேரம் இந்த முடிவுகளை எடுக்கும் இடங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதையும் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

காலநிலை மாற்றத்தால் கடும் வறட்சி நிலவும் பகுதிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அங்கு பெண்களின் நிலை பரி தாபகரமாக உள்ளதை அறிய முடிகிறது. வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை சுமக்கும் பெண்கள், குடும்பம் முழுமைக்கும் தேவையான நீரைச் சேகரிக்க வேண்டிய நிலைக்கும் ஆளாகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்பத் தேவைக்கான நீரைச் சுமந்துவரவே ஒரு ஆண், நான்கைந்து திருமணங்கள் செய்துகொண்டு நீர் மனைவிகளைக் கொண்டுள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதிப்பதில் ஆடம்பரத் தேவைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. அடிப்படைத் தேவை ஆடைகள் என்ற நிலைமாறி ஆடம்பரத் தேவையாகி வருகின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆடம்பரத் தேவையாக ஆடை மாறி, ஆடை உற்பத்தியில் மிகுந்த கழிவுகளை வெளியேற்றி, சுற்றுச்சூழலை பாதித்து வருவதுடன், வளர்ந்த நாடுகளின் தேவையை நிறைவேற்றும் பொறுப்புக்கும் வளரும் நாடுகள் பொறுப்பேற்கின்றன.

ஒவ்வொரு ஆடையையும் உற்பத்தி செய்யதேவைப்படும் நீரின் அளவு கணக்கிட்டால், பூமியின் வறண்ட நிலைக்கு காரணம் விளங்கும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 530 லட்சம் டன் ஆடைகள், உற்பத்தி செய்யப்படுகின்றன.

விவசாய புரட்சிக்கு வித்திட்ட பெண்கள்: நேரடி விவசாயம் மட்டுமல்லாது தோட்டம் போடுதல் கால்நடை வளர்ப்பு, காட்டுச் செடிகளை தன்மயம் ஆக்கு்தல் என எல்லா கோணங்களிலும் பெண்கள் பங்களிக்கிறார்கள். இத்தனை முக்கிய மான பங்களிப்புகளை செய்தாலும் ஓரிடத்தில் உணவு பாதுகாப்பு கேள்விக்குறி யாகும்போது அங்கே முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான்.

இந்தியாவில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்தசோகை இருக்கிறது. நான்கில் ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு வகையில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது. ஒரு முதலாளித்துவ சமூகத்தில் எது வேலையாக அங்கீகரிக்கப்படுகிறது என்று பார்த்தால் எந்தெந்த வேலைகளை எல்லாம் சம்பளமாக மாற்றலாமா அதைத்தான் முதலாளித்துவம் அங்கீகரிக்கிறது அந்த வகையில் பெண்களின் விவசாய பணிகள் வருவதில்லை.

எதிர்காலம்: பூமியை பெண்ணாக உருவகப்படுத்தி இருப்பதாலேயே, வீட்டிலுள்ள பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துப்போக வேண்டும் என்று நிர்பந்திப்பது போல, நோய் எனில் தனக்குத் தானே பூமித்தாய் சரிசெய்து கொள்வாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காலநிலை மாற்றம் நம் கண்முன்னே, அச்சப்படுத்த ஆயத்தமாகிவிட்டது. இந்த நிலையிலும் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருப்பதை இப்புத்தகம் களஆய்வு தகவல்களால் உறுதிப்படுத்துகிறது.

- நிறைவுற்றது

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in