

ஈடுபாடு, ஊக்கம், விமர்சன சிந்தனைத் திறன், தகவல் களைத் தக்கவைத்தல் ஆகியவை குழந்தைகளுக்கு செயல் அடிப்படை யிலான கற்றல் முறையை அதிகரிக்கச் செய்கிறது. இதுவரை கொடுக்கப்பட்ட செயல்பாடுகள் அதன் அடிப்படையில் அமைந்தவை.
LSRW (கேட்டல், பேசுதல், படித்தல்,எழுதுதல்) கல்வியில் அடிப்படைத் திறன்களாகும். அனைத்துச் செயல்பாடுகளும் இத்திறன்களில் ஒன்றை வளர்க்க உதவும். ஏனெனில், இவை தகவல் தொடர்புக்கு அடிப்படையாக அமைகின்றன. பல்வேறு சூழல்களில் புரிதல், வெளிப்பாடு மற்றும் தொடர்புகளை எளிதாக்குகின்றன.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகளிடம் நிஜப்பொருட்கள், பொம்மைகள், படங்கள் கொடுத்துப்பேசவைப்பது குறித்து பார்த்தோம்.அதேபோல் பதின் பருவத்தினரிடையே பேசும் திறனை வளர்ப்பது கட்டாயமாகும். ஏனெனில், இது அவர்கள் நம்பிக்கையை வளர்ப்பதுடன், திறமையை வெளிப்படுத்தவும் உதவும்.
கலகல வகுப்பறை சிவா அவரது வகுப்பறையில் பேசும் திறனை வளர்ப்பதற்கு குறும்படங்களைத் திரையிடுகிறார். குறும்படம் பார்த்து முடித்தபின், மாணவர்களைப் பேச அனுமதிக்கிறார். மாணவர்கள் அஞ்சாமல் தங்கள் சொந்த கருத்துகளைப் பகிர்கின்றனர். அனைவரும் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது நயம்பாராட்டும் திறனை வளர்க்கிறது. இது பேசும் திறனை வளர்ப்பதற்கான முன்தயாரிப்புச் செயலாகும்.
பதின்பருவத்தினரைக் குழு விவாதங்கள் மற்றும் தனிநபர் விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க வைப்பதன் மூலம் பேசுதல்திறனை வளர்க்கலாம். விவாதப்பொருளாகப் பாடக்கருத்துகளுக்கு தொடர்புடைய மற்றும் பொருத்தமான தலைப்புகளை வழங்க வேண்டும். அவை தற் போதைய நிகழ்வுகள், சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கியதாக இருத்தல் நலன்தரும்.
விவாதங்களின் முடிவில் ஆசிரியர் வழங்கும் தீர்ப்புக்கு அஞ்சாமல் ஒவ்வொருவரும் பங்களிக்கவும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அனுமதிக்கும் வகையில் செயல்பாடுகள் கட்டமைக்கப்பட வேண்டும். சமமான பங்கேற்பை உறுதி செய்வதற்காக, மதிப்பீட்டாளர் அல்லது நேரக் கண்காணிப்பாளர் போன்ற ஒருவரை நியமிக்கலாம். மாணவர்களில் ஒரு வரை நியமிக்கலாம்.
சகாக்களுக்கு முன்னால் விளக்கக்காட்சிகள் அல்லது உரைகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் நம்பிக்கையையும், பொதுப் பேச்சுத் திறனையும் வளர்க்க உதவும். இச்செயலை அனைத்துப் பாடங்களுக்கும் வழங்கமுடியும். இது பயமின்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள் வழங்குவதற் கான தளத்தை அமைத்துத் தருகிறது.
கற்றல் அனுபவத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அவர்களின் சொல்லகராதி, வாக்கிய அமைப்பை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், அவர்களின் சுயமரியாதை, விமர்சன சிந்தனை திறன்களை அதிகரிக்கவும் உதவும்.
ரோல்-பிளேக்கள், கதைசொல்லல்,முன்கூட்டிய பேச்சுகள் போன்றசெயல்பாடுகளை இணைத்துக்கொள் வது, பதின் பருவத்தினர் ஈடுபாட்டுடன் வேடிக்கையாக பேச உதவும்.பதின்வயதினர் விமர்சிக்கப்படுவார் கள் என்ற பயமின்றி, தங்கள் திறமையை வெளிப்படுத்த பாதுகாப்பான, பொருத்தமான சூழலை உருவாக்குவது அவசியம்.
இன்றைய கல்வி முறையில் குழந்தை மைய கற்றல் இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில், அவை மாணவர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் ஆதரவான, பாதுகாப்பான, உள்ளடக்கிய கற்றல் சூழலை வழங்குகின்றன.
இந்தவகைப் பள்ளிகள் குழந்தைகளின் நல்வாழ்வு, பங்கேற்பு மற்றும் ஒட்டுமொத்த கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கின்றன. அந்தவகையில் இதுவரை பயன்படுத்திய செயல்பாடுகள் குழந்தை மையக் கற்றல் முறைக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
வரும்காலங்களில் பதின்பருவத் தினருக்கும் செயல்பாடுகள் கட்டமைக்கப்படும். இதுவரை வெளிவந்த கட்டுரைகளின் செயல்பாடுகளை தங்கள் பள்ளியில் செயல்படுத்திய அனுபவத்தினைப் பகிர்ந்தால், கூடுதல்ஊக்கம் பெறுவேன். தேர்வு நெருங்கிவிட்டது. ஆகவே, புதிய உத்திகளுடன் ஜூனில் சந்திக்கிறேன்.
- கட்டுரையாளர் எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை