

ஹன்லேவில் இருந்து குளிர் நடுக்கும் அதிகாலையில் உம்லிங் லா நோக்கி நமது பயணத்தைத் தொடங்கினோம். கூகுள் மேப் மற்றும் எந்தவித தொழில்நுட்பமும் உம்லிங் லா செல்ல நமக்கு உதவாது. எந்த தொழில்நுட்ப உதவியும் இல்லாமல், எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டு பயணம் செய்தோம்.
அதிகாலையிலேயே புறப்பட்டதால், வேறு எந்த வாகனத்தையும் பார்க்க முடியவில்லை. கொஞ்ச தூரம் வரை சாலை நன்றாக இருந்தது. ஆனால், மேலே செல்ல செல்ல கொஞ்சமும் பாதை இல்லை. மலை உச்சியை நோக்கி செல்ல செல்ல மூச்சு விடவே கஷ்டமான நிலையில், வண்டியை விட்டு கீழே இறங்கி அதை தள்ளிக்கொண்டு போகவே முடியவில்லை. மூன்று டிகிரி குளிர் அந்த பகலிலும் உடலைத்துளைத்துச் சென்றது.
எப்படியோ தட்டுத்தடுமாறி சமமான பாதைக்கு வந்து சேர்ந்தோம். அந்த இடம் தான் பொட்டி லா. இந்த இடமும்வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் முதல் பத்து உயரமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 18124 அடி உயரத்தில் இருக்கும் இந்த பொட்டிலாவில் இருந்து பார்த்தால் சுற்றிலும் மலைகள் தான். காக்ஸங்களாவிற்கு அடுத்து இந்த பொட்டிலாவில் பனிக்கட்டிகளைப் பார்க்க முடிந்தது.
அதன்பிறகு சாலை கொஞ்சம் பயணத்துக்கு ஏதுவாக இருந்தது. சீன எல்லை என்பதால் அங்கு ஒரு ராணுவ முகாம் தென்பட்டது. அவர்களிடம் வழி கேட்டு பயணத்தை தொடர்ந்தோம். நான்கு மணி நேர பயணத்துக்குப் பிறகு உம்லிங் லாவில் கால் பதித்தோம். உலகத்தின் உச்சியில் நிற்கிறோம், அந்த உணர்வே நம்மைச் சில்லிடவைத்தது.
பெருமைமிகு தருணம்: கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான சாலையில் இருப்பதை மிகப்பெருமையாகக் கருதினோம். மோட்டார் சைக்கிள் பயணிகளுக்கு இந்த இடம் ஒரு கனவாகவே இருக்கும். இந்த பகுதியில் கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருக்கும் தேசியக்கொடியைப் பார்க்கும் போதும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் கின்னஸ் சாதனை சான்றிதழைக் கண்ட கணத்தில் மனம் நெக்குருகி நெகிழ்ந்து கண்கள் ஈரமாகின.
எல்லை சாலைகள் அமைப்பு (BRO) போட்டிருக்கும் இந்த சாலை சீன எல்லையில் உள்ள டெம்சோக் கிராமம் வரை செல்கிறது. ஒரு சிறிய காபி கடை, கழிவறை, கின்னஸ் சாதனை சான்றிதழ் வைக்கப்பட்டிருந்த அறை, ஒரு மைல்கல் அதைத்தவிர இங்கு பெரிதாக எதுவும் இல்லை தான். ஆனாலும் இந்த சாகச காற்றைச் சுவாசிக்க இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து இங்கு வருவதை மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறார்கள்.
நமக்கும் அப்படித்தான் எதையோ பெரிதாய் சாதித்த உணர்வு. தென்னிந்தியாவில் சாதாரண கிராமத்தில் பிறந்து பெரிய பெரிய கனவுகளோடு இந்த பயணத்தைத் தொடங்கிய நமக்கு, காடு மேடு கடல் எல்லாம் கடந்து உலகின் உச்சியில் நிற்கும்போது மனம் அத்தனை நிறைவாய் இருக்கிறது. இந்த பயணம் தொடங்குவதற்கு முன், ஏகப்பட்ட கேள்விகள், தடைகள், ஆனால் இன்று அத்தனையும் தாண்டி இங்கு நிற்பது பெரும் பாக்கியம் தான். நம் பயணத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்துவிட்டோம். இனி இந்தியாவின் மற்றொரு நிலப்பரப்பில் பயணிக்கத் தயாராவோம்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை ; தொடர்புக்கு: withlovelogi@gmail.com