கற்றது தமிழ் - 32: வறுமை நீங்க வழிகாட்டிய திருமுருகாற்றுப்படை

கற்றது தமிழ் - 32: வறுமை நீங்க வழிகாட்டிய திருமுருகாற்றுப்படை

Published on

‘பக்திப் பாட்டு போடுவாங்கள்ல அந்த அலைவரிசையில வை' என்று குழலியின் அருகே வந்தமர்ந்தார் பாட்டி. 'துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்' என்று கந்த சஷ்டி ஒலிக்க, பாட்டியும் உடன் பாடத் தொடங்கினார்.

குழலி: சஷ்டி கவசம் முழுசாத் தெரியுமா பாட்டி... இந்தக் கவசத்தை எழுதினது யாருன்னு சொல்லுங்களேன்.

பாட்டி: யாரு எழுதினாங்கன்னு தெரியாது. ஆனா பாடினவங்க சூலமங்கலம் சகோதரிகள்.

அம்மா: பாலதேவராய சுவாமிகள் எழுதினது குழலி. நாம பாடுற இந்தக் கவசம் திருச்செந்தூர் முருகன் மேல எழுதப்பட்டது.

குழலி: என்னம்மா சொல்றீங்க... திருச்செந்தூர் முருகன்னா... மற்ற ஊர்கள்ல இருக்குற முருகனுக்குத் தனித்தனியா கவசம் இருக்கா...

அம்மா: ஆமா குழலி. முருகனோட ஆறுபடை வீட்டுக்கும் தனித்தனிக் கவசம் இருக்காம். நாம பாடுறது திருச்செந்தூர்க் கவசத்தை.

குழலி: முருகன் தமிழ்க் கடவுள்னு சொல்றோம். அவரப் பாடுற இந்தப் பாட்டுல இவ்வளவு வேற்று மொழிச் சொற்கள் இருக்கே?

சுடர்: வீடே பக்திமயமா இருக்கே... என்ன அத்தை, குழலி முதல் மதிப்பெண் வாங்கனும்னு சிறப்பு வழிபாடா...

அம்மா: நீங்க நல்லாப் படிச்சா, நல்ல மதிப்பெண் வாங்குவீங்க... இதுல நானோ, சாமியோ செய்யறதுக்கு என்ன இருக்கு.

குழலி: முருகன், சுப்பிரமண்யராயிட்டதனால இந்தப் பாட்டும் அதுக்கேத்த மாதிரி இருக்கோ...

அம்மா: உன் கிட்டயே பதில் இருக்கும்போது, என்னை ஏன் வம்பிழுக்குற.

சுடர்: கடைச்சங்க காலத்துலயே திருமுருகாற்றுப்படை இருக்கே.

குழலி: ஐந்து நிலங்களுக்கும் ஐந்து தெய்வங்கள். முதல், கரு, உரிப்பொருள்கள் பத்திக் கூட நாம பேசியிருக்கோமே...

சுடர்: ஆமா குழலி நிலமும் பொழுதும் முதல்பொருள். திணைக்கான ஒழுக்கம் உரிப்பொருள். ஆனா கருப்பொருள்கள்... மறந்திருச்சே...

குழலி: தெய்வம், மக்கள், பறவை, விலங்கு,ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, பண், யாழ்,தொழில்னு கருப்பொருள்களைச் சொல்வாங்க.

சுடர்: குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்கு திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்குக் கொற்றவை... முருகன் மலையும் மலைச் சார்ந்த இடத்தின் தெய்வமா இருக்கிறதுனாலதான், கோயில் எல்லாம் மலை மேல இருக்குபோல.

குழலி: நீ சொல்றது சரிதான் சுடர். திருமுருகாற்றுப்படைப் பத்திச் சொல்லேன்.

சுடர்: பத்துப் பாட்டு நூல்கள்ல ஒன்னுதான் திருமுருகாற்றுப்படை, நக்கீரர் எழுதினது. பத்துப்பாட்டு நினைவிருக்கா...

குழலி: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்... நீ ஆற்றுப்படைன்னா என்னன்னு சொல்லு...

சுடர்: பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

சென்று பயன்எதிரச் சொன்ன பக்கம்

குழலி: எனக்கும் புரியற மாதிரி சொல்லு...

சுடர்: அந்தக் காலத்துல புலவர்கள் எல்லாம், அரசர்கள, வள்ளல்களப் பற்றிப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தாங்க. ஒரு புலவன் தான் போய்ப் பார்த்துப் பரிசில் பெற்ற வள்ளல் எப்படிப் பட்டவனு பாடுறது. வறுமையில் இருக்கிற புலவனுக்கு, இந்த வள்ளலோட நல்ல பண்புகளச் சொல்லி, வழிகாட்டி நீயும் அவனைப் போய்ப் பாரு. உன் வறுமை நீங்கிடும்னு ஆற்றுப்படுத்துறது. அதுதான் தான் ஆற்றுப்படை.

குழலி: ஆறுன்னா வழின்னு பொருள் இருக்குல்ல. அப்ப ஆற்றுப்படுத்துதல்னா வழிகாட்டுறது.

சுடர்: மற்ற ஆற்றுப்படைகள்ல பொருள் செல்வத்தத் தேடிப் போறதுக்கு வழிகாட்டிப் பாடுறதா இருக்கும். திருமுருகாற்றுப்படையில முருகன் கிட்ட இருந்து அருள் என்கிற செல்வத்தை எப்படி அடையலாம்னு நக்கீரர் வழிகாட்டியிருப்பாரு.

இனி இறுதித்தேர்வை எப்படி சிறப்பா எழுதலாம்னு இப்ப உனக்கு வழிகாட்டுறேன். தேர்வு, விடுமுறையெல்லாம் முடிஞ்ச பிறகு தமிழுக்கு மேற்கொண்டு வழிகாட்டுறேன்.

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in