முத்துக்கள் 10 - விவசாயிகளுக்கான முதல் இயக்கத்தை உருவாக்கிய விஜய் சிங் பதிக்

முத்துக்கள் 10 - விவசாயிகளுக்கான முதல் இயக்கத்தை உருவாக்கிய விஜய் சிங் பதிக்
Updated on
2 min read

சுதந்திரப் போராட்ட வீரரும் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளருமான விஜய் சிங் பதிக் (Vijay Singh Pathik) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# உத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பிறந்தார் (1882). இயற்பெயர் பூப் சிங் குர்ஜர். இவரது தாத்தாவும், அப்பாவும் 1857-ல் சிப்பாய் கலகம் என்று குறிப்பிடப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள். தாத்தா ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்.

# விடுதலைப் போராட்ட இயக்கத்தினால் இளம்வயதிலேயே கவரப்பட்டார். ராஷ் பிஹாரி போஸ், சசீந்த்ர நாத் சான்யால் உள்ளிட்ட புரட்சி வீரர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1915-ல் லாகூரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற சதித் திட்டத்தில் கலந்துகொண்டதற்காகத் தேடப்பட்டார்.

# இதனால், இவரது பெற்றோர் இவர் பெயரை விஜய் சிங் பதிக் என்று மாற்றினர். ராஜஸ்தான் சித்தவுட்கட் பகுதியில் வசித்துவந்தார். ராஜஸ்தானில் சுதந்திரப் போராட்ட இயக்கம் பரவச் செய்தார். வரிகளால் விவசாயிகள் சுரண்டப்பட்டு வந்தனர்.

# ஜமீன்தார்களின் உதவியுடனும் பாதுகாப்புடனும் ஆங்கிலேயர்கள் விவசாயிகளிடம் வரி வசூலித்து வந்தனர். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இவர்களமிறங்கினார். ஒவ்வொரு கிராமத்திலும் கிஸான் பஞ்சாயத்தின் கிளைகள் தொடங்கினார். காந்தியடிகள் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதற்கு வெகு காலம் முன்னரே விவசாயிகளின் நலனுக்காக பிஜவுலியா கிஸான் ஆந்தோலன் என்ற பெயரில் சத்தியாக்கிர இயக்கத்தை இவர் நடத்தினார்.

# இதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது பணிகளால் காந்தி, திலகர் ஆகியோர் பெரிதும் கவரப்பட்டனர். இவரது அயராத முனைப்புகளால் விவசாயிகளுக்கு மகத்தான வெற்றி கிட்டியது. ‘பதிக் ஒரு நல்ல சிப்பாயைப் போல பணியாற்றுபவர்’ என்று காந்தியடிகள் இவரைப் பாராட்டியுள்ளார்.

# 1920-ல் ஆஜ்மீரில் ராஜஸ்தான் சேவா சங்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. விரைவில் இந்த அமைப்பின் கிளைகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. இந்த அமைப்பு ராஜஸ்தானில் மக்கள் போராட்ட இயக்கங்களை முன்னின்று நடத்தியது. வளமான சமுதாயம் உருவெடுக்க ஆணும் பெண்ணும் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்றார்.

# சுதந்திரத்துக்குப் பிறகு ஒன்றிணைந்த ராஜஸ்தான் உருவாக வேண்டும் என்பதை பிரதமர் நேரு, சர்தார் பட்டேல் ஆகியோர் கவனத்துக்குக் கொண்டு சென்றவர். நல்ல கவிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரும்கூட.

# ராஜஸ்தான், கேசரி மற்றும் நவீன் ராஜஸ்தான் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். ‘ஸ்வதந்த்ர’ என்ற வார இதழ், ‘ராஜஸ்தான் சந்தேஷ்’ மற்றும் ‘அஜ்மேர் ஸே நயே சந்தேஷ்’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கினார். தனது பத்திரிகைகளின் வாயிலாகத் தனது எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தார்.

# தன் எழுத்துக்களாலும் பேச்சாலும் மக்களிடையே சுதந்திரப் போராட்ட வேட்கையை உண்டாக்கினார். நாவல்களும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். அஜய் மேரு என்ற இவரது நாவல் மிகவும் பிரசித்தம். பதிக் பிரமோத் என்பது இவரது சிறுகதைத் தொகுப்பு நூல்.

# இவரது பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டது. சத்தியாகிரகியாகவும், புரட்சி வீரராகவும் தனது வாழ்நாள் முழுவதும் தேச சேவையில் ஈடுபட்டவரும் தன்னலமற்று சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவருமான விஜய் சிங் பதிக் 1954-ம்ஆண்டு மார்ச் மாதம் 72-ம் வயதில் காலமானார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in