மகத்தான மருத்துவர்கள் - 60: இந்தியா வந்த மருத்துவ தேவ தூதன் எம்.எம்.எஸ்.அஹூஜா
இந்தியாவின் ஹரியானாவில் பிறந்து கராச்சி சென்றவர்கள் யாகூப் சகோதரிகள் என்றால், பாகிஸ்தானில் பிறந்து, லாகூரில் படித்து மெட்ராஸ் வந்தவர் டாக்டர் எம்.எம்.எஸ்.அஹூஜா.
மன்மோகன் சிங் அஹூஜா எனும் எம்.எம்.எஸ்.அஹூஜா பிறந்தது 1929 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் முல்தான் நகரில். லூகூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற அஹூஜாவை, படிக்கும் போதே இந்திய பாகிஸ்தான் பிரிவினை பாதிக்க, தனது கல்வியை தொடர இந்தியா வந்தார் அவர்.
அப்படி, 1952 ஆம் ஆண்டு, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற அஹூஜா, பின்பு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். 1956 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தின் உயரிய எம்.ஆர்.சி.பி. பட்டத்தைப் பெற்றதோடு இந்தியா திரும்பினார்.
1958 ஆம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அந்த சமயத்தில் நாட்டில் நாளுக்கு நாள் சர்க்கரை நோய் பெருகி வருவதைக் கவனித்து, அது இந்திய மக்களை எந்த அளவில் தாக்கி நோயாளிகளை உருவாக்கும் என்று அன்றே கணித்து, அதற்கு ஏதாவது செய்ய முடிவெடுத்தார்.
நாட்டில் முதன்முறை: தனது சொந்த செலவில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் என்டோக்ரைன் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பட்டம் பெற்ற எம்.எம்.எஸ்.அஹூஜா, அதே சூட்டோடு, தான் பணிபுரிந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் முதன்முதலாக, 'என்டோக்ரைனாலாஜி துறை' (endocrinology department) ஒரு சிறப்புத் துறையை தோற்றுவித்தார்.
அவர் தொடங்கிய அந்த நாளமில்லா சுரப்பி அமைப்பில், தொடர்ந்து தனது மருத்துவ மாணவர்களை, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபடச் செய்து, தேவையான அளவு மாணவர்கள் சேர்ந்ததும் RSSDI எனும் சர்க்கரை நோய் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பையும் நிறுவினார். அத்துடன் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், பல மருத்துவப் புத்தகங்களையும் இதுகுறித்து அவர் எழுதி வெளியிட்டார்.
ஒருபுறம் நூற்றுக்கணக்கான என்டோக்ரைன் சிறப்பு மருத்துவர்களை அவர் உருவாக்கி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முயன்றார். அதேசமயத்தில், அவர் தேசமெங்கும் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு, நோயைக் கட்டுக்குள் வைத்திட பல்வேறு விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார்.
'Learning to live with Diabetes' என்று இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு புத்தகமாக அவரது புத்தகம் விளங்குகிறது. இதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையின் தீர்க்க தரிசனத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா!
தொடக்கப்புள்ளியிலேயே வரும் ஆபத்தைக் கணித்து, அதைக் கட்டுப்படுத்த எண்ணற்ற மருத்துவர்களை உருவாக்கி, ஒரு தேசத்தை தொற்றா நோயின் பிடியிலிருந்து மீண்டு வர உதவிய அவருக்கு, பி.சி.ராய் விருது, பத்ம விருது என பல கவுரவங்களை வழங்கி நன்றி செலுத்திக் கொண்டது நமது நாடு. வாழ்நாள் முழுவதும் மருத்துவத்தையும் மக்களையும் நேசித்த எம்.எம்.எஸ்.அஹூஜா, 1998 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மருத்துவர்களின் மகிமை: கடந்த வாரம் நாம் பார்த்த யாகூப் சகோதரிகளுக்கும் இன்று நாம் தெரிந்து கொண்ட டாக்டர் அஹூஜாவுக்கு இடையில் மட்டுமல்ல... இதுவரை இந்தத் தொடரில் நாம் சந்தித்த அத்தனை மருத்துவர்களுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை உள்ளது. எத்தனை துயர் வந்தபோதிலும் எல்லாவற்றையும் தாண்டி, தங்களது கனவுகளை நனவாக்கியவர்கள் இவர்கள்.
ஆயிரம் தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டியதுடன், அத்தனை சவால்களையும் கடந்து அவர்கள் சாதிக்க நினைத்தது தன்னைச் சார்ந்த மக்கள் நலமுடன் இருப்பது மட்டும்தான்.
விதைகளை விருட்சமாக்கியவர்கள் இவர்கள் என்றாலும் பலன்களை அறுவடை செய்தது என்னவோ மக்கள் தான். இதுவரை நாம் பார்த்தது ஒரு பெரிய கடலின் மிகச்சிறு துளிகள் மட்டும்தான். இன்றும் மருத்துவர்கள் பலர் துயரங்களை வென்று, தமது துறையில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல... மற்ற துறைகளும் அப்படி சவால் மிகுந்தது தான்.
அவர்களைப் போலவே உங்களுக்கும் கல்வி பயிலும்போதே ஆயிரம் துயரங்கள் வரலாம். படித்து முடித்த பின்னரும் எண்ணற்ற சவால்கள் வரலாம். ஆனால், நேற்றைய பாடங்களில் இருந்தும், இன்றைய முயற்சிகளில் இருந்தும்தான் நாளைய வரலாறு நிகழப் போகிறது. அதை நீங்கள் தான் நிகழ்த்தப் போகிறீர்கள்.
யார் கண்டது... இந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கூட நாளை ஒரு மருத்துவராக வரலாம். உங்களது தன்னலமற்ற சேவையைக் கண்டு, தன்னிகரில்லா சாதனையைக் கண்டு யாரோ ஒருவர் உங்களைப் பற்றிக் கூட தனது மகத்தான மருத்துவர்கள் தொடரில் எழுதலாம். அப்படி ஒன்று நிகழவேண்டும் என்ற ஆவலுடன் ஆரம்பிக்கப்பட்டு, நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் நிறைவடைகிறது இந்தத் தொடர்.
முயலுங்கள்...
முடியுங்கள்...
வாழ்த்துகள்.!
(மகத்துவம் நிறைவடைகிறது)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com
