

சென்ற வாரப் பகுதி புதிர் கதைகள் எழுதுவது தொடர்பானது. அதில் உள்ள புதிர் கதைக்கு விடை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். அண்ணன் - தம்பி இருவருக்கும் ஒட்டகம் கொடுக்கப்படுகிறது. இதில் இரண்டாவதாகச் செல்லும் ஒட்டகத்தின் உரிமையாளருக்கே புதையல். இதற்கு என்ன விடை: இருவரும் ஒட்டகத்தை மாற்றிக்கொண்டார்கள். அப்படியெனில், அண்ணனின் ஒட்டகத்தை முதலில் சேர்த்துவிட வேண்டும் என தம்பியும், தம்பியின் ஒட்டகத்தை முதலில் சேர்த்துவிட்டால் இரண்டாவதாக வரும் தனது ஒட்டகத்தால் புதையல் கிடைக்கும் என அண்ணனும் போட்டி போட்டிக்கொண்டு வேகமாகச் சென்றார்கள்.
இந்தக் கதையில் இரண்டாவதாகச் சென்றால் தான் புதையல் என்பது மற்றவர்கள் யோசிக்காத ஒரு ஐடியா. அதற்குத் தீர்வு ஒட்டகங்களை மாற்றிக்கொள்வது. இதுவே மையம். இதை அப்படியே புதிராகச் சொன்னால் சிலருக்குப் புரியும். சிலருக்குப் புரியாது. அதையே ஒரு கதையாக உருவாக்கினால் புதிரைச் சொல்வதற்கும் எளிதாக இருக்கும். அதைக் கேட்டுச் சிந்திப்பதற்கும் எளிதாக இருக்கும்.
குழப்பம் தவிர்: புதிர்க் கதைகள் உருவாக்கும்போது இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புதிரை எளிதாகக் கொண்டு சேர்க்க உதவியாகத்தான் அந்தக் கதை இருக்க வேண்டுமே தவிர, அந்தக் கதையே குழப்புவதாக அமைந்துவிடக் கூடாது.
அடுத்து, கதைகள் எவ்வளவு சுருக்கமாக அமைக்க முடியுமோ அவ்வளவு சுருக்கமாக அமைக்க வேண்டும். தேவையற்ற வர்ணனைகள், நிறைய கதாபாத்திரங்களைச் சேர்த்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்களில் புதிர்க் கதையை உருவாக்குவதே நல்லது.
புதிர் கதைகளைப் போலவே விடுகதைகளை மையமாக வைத்தும் குறுங்கதைகளை உருவாக்கலாம். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள விடுகதைகளைப் பயன்படுத்தாமல், புதிய விடுகதைகளை உருவாக்கி அதற்கு ஏற்ற கதைகளை எழுதலாம்.
வகுப்பறையில் பாடம் நடத்தும்போதுஆசிரியர்கள் இதுபோன்ற புதிர்கதைகளை உருவாக்கிக்கொள்ளும்போது வகுப்பு இன்னும் சுவாரஸ்யமாகச் செல்லும். நண்பர்களோடு பேருந்தில் செல்லும்போது இதுபோன்ற கதைகளைச் சொல்லும்போது பயணநேரம் என்பதே தெரியாது.
கதை எனும் பெருங்கடல்: கதை என்பது நம்மைச் சுற்றியே உலவிக்கொண்டிருக்கும். அதை நாம் கண்டுபிடித்துவிட்டால் எளிதாக எழுதிவிடலாம்.அப்படி எழுதும்போது என்னவெல்லாம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பகிரும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதே இந்தத் தொடர்.
விதவிதமான கதைகள் தொடங்கி ஒரு பத்திரிகைக்கு கதையை அனுப்புவதுவரை பல்வேறு விஷயங்களை இந்தத் தொடரில் பார்த்தோம். பல்வேறு விஷயங்கள் அறிமுகப்படுத்தியும் சில விஷயங்களை ஆழமாக அலசினோம். ஒவ்வொன்றும் கதை எழுதுவதற்கான அடிப்படை பயிற்சியே.
கதை அல்லது பாடல் என கலை சார்ந்த படைப்பு முயற்சிகளில் நாம் ஈடுபடும்போது கற்பனைத்திறன் இன்னும்விரிவடையும். கற்பனைத்திறன் விரிவடையவிரிவடைய எதுவொன்றையும் புரிந்துகொள்ளவும் புரியும்படி பேசவும் எழுதவும் நம்மால் முடியும்.
கதை என்பது மிகப் பெரிய கடல். கதை எழுதுவதற்கும் நீண்ட பயிற்சிகள் தேவை. இந்தத் தொடர் அப்பயிற்சிக்கு உங்களைத் தயார்படுத்தியிருக்கும் என உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், நிறைய ஆசிரியர்கள், மாணவர்கள் இதைப் படித்துவிட்டு தொடர்புகொண்டார்கள்.
சில ஆசிரியர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் தங்கள் வகுப்பில் படித்துக்காட்டி மாணவர்களை கதை எழுத வைத்து அனுப்பியிருந்தார்கள். அந்த வகையில் புதிய கதாசிரியர்களாக உருவாகியிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
இந்தத் தொடர் வாயிலாக நிறைய கதைகளை வாசிக்கவும் புதிய கதைகள் எழுதவும் முயன்றீர்கள் என்றால் இந்தத் தொடருக்கான நோக்கம் நிறைவேறியதாக உணர்வோம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மின்னஞ்சல் வழியே கேட்கலாம். இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய ’வெற்றிகொடி’ நாளிதழுக்கு எனது நன்றி.
(நிறைவுற்றது)
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com