

மென்திறன்கள் (Soft skills) இருப்பதைப்போல வன்திறன்களும் (Hard skills) உள்ளனவா? என்று வினவினாள் மணிமேகலை. உள்ளன என்றார் ஆசிரியர். அவை யாவை? என்று வினவினான் அழகன்.
கவிதா கணக்கில் புலி. எவ்வளவு சிக்கலான கணக்கிற்கும் எளிதில் விடையைக் கண்டுபிடித்துவிடுவார். இது அவரது வன்திறன். ஆனால், எளிய கணக்கைக்கூட அவரால் பிறருக்குப் புரியும்படி எடுத்துரைக்க இயலாது. இதற்கு தகவல்தொடர்பு என்னும் மென்திறனில் அவருக்குள்ள குறைபாடே காரணம் என்று ஆசிரியர் எழில் விளக்கினார்.
அதாவது, ஒரு செயலைச் செய்துமுடிப்பதற்கு ஒருவருக்கு உள்ள அறிவும் திறனும் வன்திறன். அச்செயலை எங்ஙனம் செய்கிறார் என்பதை முடிவுசெய்வது அவரது மென்திறன் எனலாமா? என்று வினவினான் அருளினியன்.
தெளிவாகச் சொல்லிவிட்டாய் என்று அவனைப் பாராட்டிய எழில், கணக்கில் புலியான கவிதாவிற்கும் ஓவியத்தில் புலியான வேறொருவருக்கும் உள்ள வன்திறன்கள் வெவ்வேறானவை. ஆனால், இருவரும் தத்தம் துறைகளில் மிளிரத் தேவையான மென்திறன்கள் பொதுவானவை என்று விளக்கினார்.
வெளி இடத்திலும் பொறுப்பு: நடத்தைத் திறன்கள் (Behavioural skills) என்றால் என்ன? என்று வினவினாள் மதி. நீ பள்ளிக்குள் நடந்துகொள்ளும் முறைக்கும் பள்ளிக்கு வெளியே நடந்துகொள்ளும் முறைக்கும் வேறுபாடு இருக்கிறதா? என்று வினவினார் எழில். சிறிது சிந்தித்து ஆம் என்றாள் மதி.
ஏன் அத்தகைய வேறுபாடு? என்று வினவினார் எழில். பள்ளியில் ஒரு மாணவர் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்னும் வழக்கமும் எதிர்பார்ப்பும் இருப்பதால் என்றாள் மதி. பிற இடங்களில் அவ்வாறான எதிர்பார்ப்புகள் இல்லையா? என்று வினவினாள் மணிமேகலை. இருக்கின்றன. ஆனால், பள்ளியில் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒரு மாணவராக எனக்கு இருக்கிறது. ஆனால், வெளியில் அந்தப் பொறுப்பு இல்லையே என்றாள் மதி.
ஒரு மாணவராக நீ பள்ளியில் மட்டும் பின்பற்றி, பிற இடங்களில் பின்பற்றாமல் இருக்கக்கூடிய திறன்கள்தான் உனது நடத்தைத்திறன்கள் என்று எடுத்துரைத்தார் எழில். ஒரு மாணவராகப் பள்ளியில் நடந்துகொள்வதைப்போல, குடும்ப உறுப்பினராக வீட்டிலும் குடிமகனாக வெளி இடத்திலும் பொறுப்போடு நடந்துகொண்டால்? என்ற வினவினான் அழகன். அதுதான் வாழ்க்கைத்திறன் என்றார் எழில். ஓ! எந்த இடத்திலும் எப்பொழுதும் பொறுப்போடு பண்பட்டவராக இருக்கக் கற்பிப்பதுதான் வாழ்க்கைத்திறன் கல்வியின் நோக்கமா? என்றாள் கயல்விழி. ஆம் என்றார் எழில்.
சிலர், தொழிற்கல்வியை (Vocational education) வாழ்க்கைக்கல்வி என்கிறார்களே? என்றான் சாமுவேல். ஒருவர் தனது வாழ்க்கைப்பாட்டிற்காக பணத்தை ஈட்ட உதவும் திறன்களான அவை வாழ்க்கைப்பாட்டுத் திறன்கள் (Livelihood skills); வாழ்க்கைத்திறன்கள் அல்ல என்றார் எழில் தெளிவாக.
உறங்க செல்லும் முன்... கற்கும், கேட்கும் அறிவுரைகள் பல நாளடைவில் மறந்துவிடுகின்றன. அவற்றை அன்றாட வாழ்வில் தொடர்ந்து பயன்படுத்த ஏதேனும் உத்தி இருக்கிறதா? என்று வினவினாள் நன்மொழி.
குமரி ஒவ்வொருநாள் இரவும் தூக்கச்சொல்வதற்குமுன் அன்றைக்கு நிகழ்ந்தவற்றை மனக்கண்ணில் கொணர்வார். அவற்றுள் எவையெல்லாம் செம்மையாக இருந்தன, ஏன் அவ்வாறு இருந்தன, அவற்றைத் தக்கவைக்க என்ன செய்ய வேண்டும் எனச் சிந்திப்பார்.
அதன்பின் எவையெல்லாம் செம்மையற்று இருந்தன, ஏன் அவ்வாறு இருந்தன, அடுத்த முறை அவற்றைச் செய்மைபடுத்த என்ன செய்ய வேண்டும் எனச் சிந்திப்பார். அங்ஙனம் சிந்தித்துக் கற்றதை அடிக்கடி நினைவுகூர்வார். அவற்றை அன்றாட வாழ்வில் பின்பற்றுவார்.
இதற்கு ஆழ்ந்துசிந்தித்துக் கற்றல் (Reflective learning) என்று பெயர் என்ற விளக்கிய எழில், அவரைப்போல நீங்களும் இதுவரை பெற்ற வாழ்க்கைத்திறன் கல்வியை உங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி ஆழ்ந்துசிந்தித்துக் கற்று வாழ்வில் பண்பட வாழ்த்துகிறேன் என்று வகுப்பை நிறைவுசெய்தார்.
(முற்றும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித்திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com