கழுகுக் கோட்டை 30: வீரனின் வேள்வியும் வீணர்களின் தோல்வியும்

கழுகுக் கோட்டை 30: வீரனின் வேள்வியும் வீணர்களின் தோல்வியும்
Updated on
2 min read

பணிப்பெண் கைகளில் இருந்த புறாவைக் கண்டதும் அந்தப் பணிப்பெண்ணின் அருகில் சென்று, எங்கே, அது என்ன செய்தி என்று பார்ப்போம். இப்படிக் கொடு என்றார் திருத்தோன்றி. அப்போது இளவரசி மதிவதனியும் திருச்சேந்தியின் புதல்வி மஞ்சரியும் அங்கே வந்தார்கள். இளவரசி மதிவதனி அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய பணிப்பெண்ணை நோக்கினாள்.

இளவரசியின் கேள்வியை குறிப்பால் அறிந்துகொண்ட பணிப்பெண்ணும் அவள் அருகில் சென்று தூதுப்புறா வந்திருப்பதை மெல்லிய குரலில் சொன்னாள். அவள் அப்படிச் சொன்னதைக் கேட்ட இளவரசியும் திருத்தோன்றியின் அருகில் சென்று அந்தப் புறாவை உற்று நோக்கினாள்.

உடனே அவள், ‘நீங்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தப் புறா சில நாட்களுக்கு முன் இங்கே வந்த புரட்சிப்படைக் கூட்டத்தின் தூதுவன் கொண்டு சென்றதுதான். இப்போதும் அந்தத் தூதுவன் மூலமாகவே இந்தச் செய்தி வந்திருக்க வேண்டும். அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படித்தீர்களா?’ என்று திருத்தோன்றியை நோக்கிக் கேட்டாள்.

திருத்தோன்றியும், இல்லை. இப்போதுதான் படிக்கப் போகிறேன் கேளுங்கள் என்றவர் தொடர்ந்து அந்த ஓலையில் எழுதி இருந்ததைப் படிக்க ஆரம்பித்தார். எங்கும்பறக்கும் எங்கள் கொடி, நாங்கள் மன்னராட்சிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தமன்னராட்சியில் உள்ள மக்கள் விரோதசட்டத்துக்கு எதிரானவர்கள். மக்களின் நல்வாழ்வுக்கு எதிரான இந்தச் சட்டங்களைத் தூக்கி எறிந்துவிட்டு மன்னராட்சி தொடர்ந்தால், எங்களுக்கும் மகிழ்ச்சி.

மாறாக அந்தச் சட்டங்கள் தொடர்ந்தால், மன்னராட்சியையே தூக்கி எறியவும் நாங்கள் தயங்க மாட்டோம். வருகிற சித்திரைத் திருநாள் அன்று அரண்மனைக் கோட்டையில் எங்கள் மக்கள் புரட்சிப்படையின் கொடியைப் பறக்கவிடுவோம். அப்படி எங்கள் கொடி பறந்துவிட்டது என்றால், நாங்கள் உங்களை வென்றுவிட்டோம் என்று நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்ததை திருத்தோன்றி படித்து முடித்தார்.

தூது செய்தியைப் படித்து முடித்ததும் முதலில் பேச ஆரம்பித்தது மன்னர்தான். அவருக்கு உள்ளுக்குள் கோபம் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தாலும் வெளியில் அதைக் காட்டிக்கொள்ளாமல் பேசத்தொடங்கினார், சிங்கத்தின் கோட்டைக்குள் வந்து சிறுநரிகள் எக்காளமிடுமா? மேன்மை தாங்கிய எனது ராஜகுரு அவர்களே, எனது அருமை அமைச்சர் பெருமக்களே, இந்த பயமுறுத்தல்கள் எல்லாம் நமது படை பலத்துக்கு முன்னால் வந்து நின்று பதில் சொல்லட்டும். இதற்கு யாரும் முக்கியத்துவம் தர வேண்டாம்.

நீங்கள் அனைவரும் வழக்கம்போல் சித்திரைத் திருநாளைக் கொண்டாடுங்கள் என்றார். திருத்தோன்றியும் மதிவதனியும் ஏதோ பேச முயன்றார்கள். ஆனால், அவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல், இன்றைக்கு இந்த ராஜசபை கலைந்தது. அனைவரும் சென்று வரலாம் என்று மன்னர் சொன்னதும் அவை கலைந்தது.

அவை கலைந்ததும் இளவரசி மதிவதனியும் தோழி மஞ்சரியும் அங்கிருந்து நேராய் அந்தப்புரம் நோக்கி சென்றாரக்ள். அப்போது இளவரசி, இன்றைக்கு எனது தந்தை மிகவும் கோபமாக உள்ளார். எப்போதும் எனது வார்த்தைக்கு மதிப்பளித்து நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கும் அவர், இன்று நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கூடக் கேட்காமல் அவையைக் கலைத்துச் சென்றுவிட்டாரே! என்றாள். அதற்கு பதிலளித்தமஞ்சரி, இல்லையே, மன்னர் சகஜமாகத்தானே பேசி முடித்தார்? என்றாள். இல்லையில்லை. அவரது கோபம் உனக்குத்தான் தெரியவில்லை.

வெளியில் தெரியாவிட்டாலும் உள்ளுக்குள் கோபமாகத்தான் இருக்கிறார். நான் என்ன சொல்ல நினைத்தேன் என்றால், இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்துதல் கூடாது என்று சொல்ல நினைத்தேன். ஆனால், எனது தந்தை அதைக் கேட்காமலேயே சென்றுவிட்டார் என்றாள்.

அப்படியென்றால், இனி என்ன நடக்கும்? என்றாள் மஞ்சரி. என்ன நடக்கும் என்றால், எதுவும் நடக்கலாம். வீரதீர சாகசம் செய்கிறேன் என்று நமது பலம் தெரியாமல் அந்த வீரன் வந்து நமது வீரர்களின் கைகளில் மாட்டி சிறைக்குச் செல்லலாம். ஏன் உயிருக்குக் கூட ஆபத்து நேரலாம். வீரம் இருக்கலாம். ஆனால், கண்மூடித்தனமான வீரம் ஆபத்திலும் போய் முடியலாம் அல்லவா? அப்படி இல்லாமல் ஒருவேளை... என்று நிறுத்தினாள்.

அதைக் கேட்ட மஞ்சரி, ஒருவேளை... என்றால், என்ன? ஓ... ஒருவேளை அந்த வீரன் தனது வார்த்தையை நிரூபிக்கும் விதமாக நமது கோட்டையில் கொடியை ஏற்றியும் விடுவான். அப்படித்தானே? அப்படி என்றால், நாம் அவர்களிடம் தோற்றதாக அர்த்தம் ஆகிவிடும். பிறகு இந்த இளவரசியை அந்த வீரன் குதிரையில் ஏற்றிக்கொண்டு சென்றுவிடுவான். அல்லவா? என்று கேலி செய்தாள்.

சில தினங்களிலேயே அனைவரும் எதிர்பார்த்திருந்தபடியே அந்த சித்திரைத் திருநாளும் வந்தது. அன்றைய பொழுது விடிந்ததும் கோட்டைக் கொத்தளங்கள் எங்கும் மக்கள் புரட்சிப்படையின் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. காயங்கள் மறைந்து முழுமையாக குணமாகி இருந்த மக்கள் புரட்சிப்படைத் தலைவர் சேரலாதனிடம் அந்த வெற்றிச் செய்தியை ஓடிவந்து தத்தன் அறிவித்தான்.

அதைக் கேட்டதும் தத்தனைப் பின்தொடர்ந்து வந்த குணபாலனை அனைவரும் தோள்களின் மேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அந்த வெற்றிச் செய்தியைக் கேட்ட குடிமக்களும் தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினார்கள். அதற்குக் காரணம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அவர்களின் துயரமும் நிச்சயம் மாறும் என்கிற நம்பிக்கைதான்.

இந்த வெற்றிச் செய்தியுடன் இந்தத் தொடர்கதையின் முதலாம் பாகம் நிறைவு பெறுகிறது. ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால் குணபாலனின் மதிநுட்பமும் வீரமும் கலந்தே இருந்தது. அவன் எவ்வாறு அரண்மனைக் கோட்டையின் கட்டுக்காவல்களை மீறிச் சென்று மக்கள் புரட்சிப்படையின் கொடியைப் பறக்கவிட்டான் என்பதை இரண்டாம் பாகத்தில் காண்போம்.

- முதலாம் பாகம் நிறைவுற்றது

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in