

கம்ப்யூட்டர் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் டெல் (Michael Dell) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிறந்தார் (1965). சிறு வயதில் தபால் தலைகள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கு வரவேற்பு இருப்பதை அறிந்து, யாருடைய உதவியுமின்றி, தானே விளம்பரம் கொடுத்து 10 வயதுக்குள் 2 ஆயிரம் டாலர் சம்பாதித்தார்.
# பள்ளியில் படிக்கும்போது செய்தித்தாள் முகவராக வேலை பார்த்தார். நகரில் புதிதாக குடியேறியவர்கள், புதுமணத் தம்பதிகளின் முகவரிகளை அரசு அலுவலகத்தில் பெற்று, அவர்களிடம் சந்தா பெற்றார். மற்றவர்களைவிட அதிகம் சம்பாதித்தார்.
# அப்பா அவருக்கு வாங்கித் தந்த புது ஆப்பிள் கணினியை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி, பிறகு கச்சிதமாக பொருத்தி கணினி பற்றிக் கற்றுக்கொண்டார்.
# கணினியின் வடிவமைப்பு குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களை அறிந்தார். கணினித் தொழிலில் இடைத்தரகர்கள்தான் அதிக லாபம் அடைகிறார்கள். வாடிக்கையாளர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கப்படுவதில்லை என்று தெரிந்துகொண்டார்.
# டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தனது விடுதி அறையிலேயே பி.சி.லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினார். கணினி உதிரி பாகங்களை வாங்கி, அவற்றை பொருத்தி கணினியை உருவாக்கி விற்றார்.அதிக லாபம் கிடைத்ததால் 19 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, முழு மூச்சாக தொழிலில் இறங்கினார்.
# தரகர்கள் இல்லாமல் நேரடியாக சேவைகளை வழங்கியதால் கணினிகளை மலிவாகத் தரமுடிந்தது. போட்டி நிறுவனங்களும் வேறு வழியின்றி கணினி விலையைக் குறைத்தன.
# வாடிக்கையாளர்கள் எளிதில் தொடர்புகொண்டு தங்கள் தேவைகள், குறைகளைத் தெரிவிக்க தொலைபேசி, இணையம், நேரடி சந்திப்பு என பல வசதிகளைச் செய்தார். அவர்களது குறைகளைப் போக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார். வாடிக்கையாளரின் திருப்தியை முழுமையாகச் சம்பாதிக்கும் நிறுவனம் என்ற நற்பெயரும் கிடைத்தது.
# 1987-ல் நிறுவனத்தின் பெயரை ‘டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன்’ என மாற்றினார். 1992-ல் ‘ஃபார்ச்சூன்’ இதழின் ‘டாப் 500’ நிறுவனங்கள் பட்டியலில் டெல் இடம்பிடித்தது. அப்போது இவருக்கு வயது 27. பட்டியலில் மிகவும் இளமையான தலைமை செயலதிகாரி (சிஇஓ) இவர்தான்.
# 1999-ல் டெல் நிறுவன உத்தி பற்றிப் புத்தகம் எழுதி வெளியிட்டார். மைக்கேல் சூஸன் அறக்கட்டளை மூலம் ஏழை, எளியவர்கல்வி, மருத்துவத்துக்கு உதவிவருகிறார்.
# உலகப் பொருளாதாரப் பேரவை, சர்வதேச பிசினஸ் கவுன்சில், டெக்னாலஜி சிஇஓ கவுன்சில் ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கிறார். ‘மக்களின் தேவை அறிந்து, வாய்ப்புகளைக் கண்டறியுங்கள். அதை வெற்றியாக மாற்றுங்கள்’ என்ற இவரது தாரக மந்திரத்தின் அடிப்படையில் டெல் நிறுவனம் தொடர்ந்து வெற்றிநடை போடுகிறது.