மாறட்டும் கல்விமுறை - 32: அடித்தல் திருத்தலுடன் குழந்தை இஷ்டம்போல எழுதட்டும்

மாறட்டும் கல்விமுறை - 32: அடித்தல் திருத்தலுடன் குழந்தை இஷ்டம்போல எழுதட்டும்
Updated on
1 min read

குழந்தைகள் எழுதிப் பழகும்போது தவறு வருவது இயல்பு. அந்தத் தவறு நோட்டுப்புத்தகத்திலேயே இருந்தால்தான் அடுத்தமுறை அதே தவறு வராமல் எழுத உதவியாக இருக்கும் என்று ஏனோ ஆசிரியர்கள் நினைப்பதில்லை. பெற்றோரும் நினைப்பதில்லை. நோட்டில் அடித்தல், திருத்தலே இருக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.

அப்படியானால் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தது இரண்டு நோட்டுகள் இருக்க வேண்டும். வகுப்பறையில் நடக்கும் கலந்துரையாடலின் கருத்தை வகுப்புக் குறிப்பேட்டில் எழுதி பிறகு அதைத் திருத்தி, அப்புறம் பாடக்குறிப்பேட்டில் எழுத வேண்டும். அதற்கு நம் குழந்தைகள் அதிகமாக உழைக்க வேண்டும். எழுதும் நேரமும் இருமடங்காகும்.

உண்மையில் மாற வேண்டியது தவறுகளைப் பார்க்கும் நம் கோணம்தான். அதிக அடித்தல் திருத்தல் இருக்கும் குறிப்பேடு நம்மிடம் குழந்தையின் சிந்தனையோட்டத்தைக் காட்டுகிறது. ஒருமுறை எழுதி, அது பொருந்தாது என்பதைப் புரிந்துகொண்டு அதை அடித்து வேறொன்றை எழுதும் குழந்தையின் சுயசிந்தனையை நாம் பாராட்ட வேண்டும் அல்லவா?

சுயமாக சிந்தித்து ஒரு படைப்பை மேம்படுத்தத் தெரியாமல் அழகாக எழுதியோ, அடித்தல் திருத்தல் இல்லாமலோ எழுதி என்ன பயன்?

மறைமுக உதவி: படைப்பாற்றல் செயல்பாட்டில் அடித்தல் திருத்தல் இருந்தால் முதலில் அக்குழந்தையைப் பாராட்டுவது அவசியம். அவர் யோசித்த வழியை விளக்கிச் சொல்லும்படி பணிக்க வேண்டும். அந்த யோசனையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் திருத்துவதற்கான உதவியை ஆசிரியர் செய்ய வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. செய்ய வேண்டும். ஆனால், எப்படி என்பதுதான் கேள்வி.

சிவப்பு மை பேனாவால் வட்டமிடுவதோ, அடிக்கோடு இடுவதோ அக்குழந்தையின் எழுதும் விருப்பதைத் தடைசெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகமாக எழுதும்போதுதானே அதிகத் தவறுகள் வருகின்றன. குறைவாக எழுதினால் தவறுகளும் குறையுமே என்று குழந்தை நினைத்தால் அவரைக் குறை சொல்லமுடியாது. தனியாக அழைத்துச் சுட்டிக்காட்டினாலும் தன்னம்பிக்கை குறையும் என்பதில் ஐயமில்லை.

திருத்துவதற்கான ஒரே வழி ஆசிரியரின் படைப்புதான். குழந்தைகள் எழுதியவற்றைக் கவனித்து, பொதுவாக வந்துள்ள தவறுகளைக் குறித்துவைத்து, குழந்தைகளின் படைப்பிறகு ஒருபடி மேலான ஒரு படைப்பை ஆசிரியர்கள் உருவாக்கி அதை வாசிக்கக் கொடுப்பது நல்லது. குழந்தைகளின் மனம் கோணவும் செய்யாது. அதேநேரத்தில் தவறு இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டவும் செய்கிறோம். இதைத் தொடர்ந்தால் நாளடைவில் இந்த அடித்தல் திருத்தல்கள் குறைந்து வருவதைக் காணலாம்.

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் புதுப்புது தவறு செய்பவர் புத்திசாலி என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும் அல்லவா?

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in