தயங்காமல் கேளுங்கள் - 61: தேர்வும் வருது; வியர்வையும் வருதே!
எனக்கு எப்பவுமே உள்ளங்கை அதிகமா வேர்க்கும். அதனால, எழுதும்போது பேப்பரெல்லாம் ஈரமாகி சமயத்தில எழுதவே முடியாமல் போயிடும். டென்த் எக்சாம் வர்றதால, இதேபோல வேர்த்து, பரீட்சை பேப்பரும் நனைஞ்சிடுமோங்கற பயமே மறுபடியும் வேர்வையை அதிகமாக்கிடுது டாக்டர். இதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன் என்று 10-ம் வகுப்பு மாணவி மீரா ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
டாக்டர்... வேர்வையினால என் கிட்ட ஒரு வாடை வருது. இதனாலயே என்னுடைய தன்னம்பிக்கை குறையுது. இதுக்கு ஒரு வழி இருந்தா சொல்லுங்க என்று பிளஸ் 1 படிக்கும் பாரதியும் கேட்டிருக்கிறார்.
உண்மைதான். அதிக வியர்வை, அதிலும் சிலருக்கு மட்டும் உள்ளங்கை, உள்ளங்காலிலும் வியர்வை, சிலருக்கு வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் என்று வியர்வையால் உருவாக்கும் பிரச்சினைகள் அதிகம் தான். அதுவும் வெயில் காலம் வந்தால் இவற்றின் தொல்லைகளும் கூடுகிறது. இவற்றை சமாளிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் வியர்வை ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
மனிதன் வெப்ப இரத்த விலங்கு (warm blooded animal) என்பதும், அதிலும் குளிரோ வெயிலோ எந்த சூழ்நிலையிலும் தனது உடல் வெப்பத்தை சமநிலையில் (homeothermic) வைத்திருக்கும் உயிரினங்களில் ஒன்று என்பதையும் நாம் உயிரியல் பாடத்திலேயே படித்திருப்போம்.
ஆனால், உண்மையில் உடலின் எல்லா உறுப்புகளையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்து, உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவுவது நமது மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியில் அமைந்துள்ள நரம்பு மண்டலம் தான். இது உயிரியல் வெப்பமானி (biological thermometer) எனப்படுகிறது.
இந்த வெப்பமானிதான் எப்போதெல்லாம் நமது உடலின் வெப்பநிலை சுற்றுப்புற சூழல்களைப் பொறுத்து இயல்பாகவோ, உடற்பயிற்சி அல்லது நோய்கள் போன்ற காரணங்களால் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் மூன்று வேலை செய்கிறது. வெப்பத்தைக் கடத்துதல், வெப்பச்சலனம் மற்றும் வெப்பம் ஆவியாக்குதல் என்ற முறைகளில் நமது உடலின் கூலிங் சிஸ்டத்தை முறைப்படுத்தி உடலின் வெப்பநிலையை சீராக்கிப் பராமரிக்கிறது.
இந்த முயற்சிகளில் ஒன்றுதான் வியர்வை வெளியேற்றம். நமது சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மிஸ் பகுதியில் இருக்கும் வியர்வை சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும்போது, அவற்றை வியர்வை நாளங்கள் தோலின் வெளிப்பகுதியான எபிடெர்மிஸ்க்கு கொண்டு சேர்த்து உடலைக் குளிர்வாக வைத்துக்கொள்ள முயல்கின்றன. இதில் நமது உடலில் 20-50 இலட்சம் வரை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. இவற்றின் அமைப்பு சார்ந்து, ‘எக்ரைன்' மற்றும் ‘எபோக்ரைன்' (eccrine apocrine glands) என இருவகைகள் இருக்கின்றன.
பொதுவாக இந்த வியர்வை நாளங்கள்அதிக சூடு, அதிக வெயில், உடற்பயிற்சிகள், அதிகப்படியான பணிகள், பதற்றம், பயம் போன்ற நிலைகளில் அதிகம் சுரக்கும். இந்த எக்ரைன் வியர்வை என்பது 99% தண்ணீரால் ஆனது. மீதம் இருக்கும் அந்த வெறும் 1% மட்டுமே சோடியம், க்ளோரைட், பொட்டாசியம், லேக்டேட் போன்ற உப்புகள் கொண்டது.
(வியர்வைக்கு தீர்வு காண்போம்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
