

பெரும் சமவெளிப் பகுதியில் 1800களின் தொடக்கத்தில் இருந்தே வசித்து வரும் பழங்குடிகளுக்கும் அமெரிக்காவின் குடியானவர்களுக்கும் இடையே உரசல் ஆரம்பித்தது. அதற்கடுத்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் பெருமளவிலான மக்கள் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி நோக்கி குடியேறினர். அதோடு பழங்குடிகளுக்கு வாழ்வாதாரமான எருதுகளையும் அவர்கள் வேட்டையாடினர். பொறுக்க மாட்டாத லகோடா பழங்குடியினர் குடியானவர்களைத் தாக்கினர்.
அமெரிக்க அரசாங்கம் இராணுவ வீரர்களை அனுப்பி பழங்குடி மக்களை அடக்கி ஆள நினைத்தது. 1854ஆம் ஆண்டு ‘ஸ்ட்ரே க்ரோ’ எனும் பகுதியில் 100 லகோடா பழங்குடியினர் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதற்கடுத்த ஆண்டுகளில் தங்கச்சுரங்கம் அமைக்கும் பணிக்காக மொன்டானா பகுதியில் கோட்டைகளும் சாலைகளும் நிர்மாணிக்கப்பட்டன. லகோடா சமூகத்தின் இதயக்கூட்டில் ஈட்டிவைத்துப் பிளந்தனர்.
அதிகரித்து வரும் அநியாயங்களுக்கு எதிராக சிட்டிங் புல்லின் மாமா ‘ஃபோர் ஹார்ன்ஸ்’ மக்களை அணிதிரட்டினார். போர்ஒன்றே தீர்வென கருதி, தமக்கான தலைவராக ‘சிட்டிங் புல்’லை முன்னிறுத்தினார். அவரின் பொறுமையும் விவேக குணமும் மதிநுட்பமும் இளவயதிலேயே தலைமை தாங்கும் பொறுப்பை ஈட்டித் தந்தது.
1874இல் ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் தென்டகோட்டாவின் மலைப் புறத்தில்தங்க வேட்டைக்காகப் பணியமர்த்தப்பட்டனர். தங்களின் புனித மண்அசுத்தப்படுவதைக் கண்டு பொறுக்கமாட்டாமல், லிட்டில் பிக்ஹார்ன் பகுதியில் பெரும் படையோடு போர் செய்து வெள்ளைக்கார குடியானவர்களை கதிகலங்கி ஓடச் செய்தனர்.
விரட்டியடிக்கப்பட்ட பூர்வகுடிகள்
அமெரிக்க அரசாங்கம் ஓயாமல் இராணுவத்தை அனுப்பி தொல்லை செய்தது. அச்சுறுத்தலுக்குப் பயந்த பழங்குடியினர் பலர், தேச எல்லையைத் தாண்டி கனடாவிற்குத் தப்பிச் சென்றனர். ஆனால், அங்கு எருதுகள் கிடைத்தபாடில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசியால் உயிர்துறந்தனர். 1881ஆம் ஆண்டு வேறுவழியின்றி அமெரிக்க அரசாங்கத்திடம் லகோட்டாவினர் சரணடைந்தனர்.
‘ஸ்டாண்டிங் ராக்’ எனும் பகுதியில் அரசாங்கம் நிர்ப்பந்திக்கும் கட்டுப்பாடான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. “அன்றாட பிடிமானங்களை வரிசையில் நின்று வாங்கி சுதந்திரம் இழந்து வாழ்வதை விட, வேட்டைக்கு எருது இல்லாவிடினும், பட்டினி கிடந்து சாவது மேல்” என்று தன் நண்பர்களிடம் புலம்பித் தவித்தார் புல்.
புகழ்ச்சி உண்டாக்கிய மரணம்
இவ்வேளையில் சிட்டிங் புல் பற்றி அமெரிக்கா முழுவதும் பேச்சுஎழுந்தது. கிழக்கு மாகாணங்களுக்கு நேரில் சென்று தம்குறைகளையும் கள யதார்த்தத்தையும் கூறி மக்களின் ஆதரவைப் பெற்றார். சட்டத்தில் உள்ள தவறானஅம்சங்களைச் சுட்டிக்காட்டி, லகோடா மக்களை முன்புபோல் சுதந்திரமாக வாழஅனுமதிக்க வேண்டுமென்று குரல்கொடுத்தார்.
மக்களின் அபரிமிதமான வரவேற்பைக் கண்டு அமெரிக்க அரசு பயந்தது. 1890ஆம் ஆண்டு ஜேம்ஸ் எனும் அதிகாரி இந்தியப் பழங்குடி ஒருவரை அனுப்பி சிட்டிங் புல்லை கைதுசெய்து வரச்சொன்னார். ஆனால், அந்த நபர் சிட்டிங் புல்லையும் அவர் மகன்‘க்ரோ ஃபூட்’டையும் தந்திரமாக சுட்டுக்கொன்றார். தம் மக்களுக்காக இன்னுயிர் நீத்த சிட்டிங் புல் போன்றொரு தைரியசாலியை அதன் பின்னர் இம்மக்கள் பார்க்கவே இல்லை. ரிசர்வேஷன் பகுதியில் வாழ்ந்துவரும் மக்களுக்கு இன்னும் இவர் தலைவர்தான். ‘வெள்ளைப் பிசாசுகளை விரட்டியடித்த எருது’ என நினைவு ததும்ப இவரைக் கொண்டாடுகின்றனர்.
(தொடரும்)
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர். தொடர்புக்கு: iskrathewriter@gmail.com