முத்துக்கள் 10 - பன்முகத்தன்மையை காத்திட சொல்லும் உலகத் தாய்மொழி நாள்

முத்துக்கள் 10 - பன்முகத்தன்மையை காத்திட சொல்லும் உலகத் தாய்மொழி நாள்
Updated on
2 min read

உலகத் தாய்மொழி நாள் இன்று (பிப்ரவரி 21) உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அரிய முத்துக்கள் 10:

# 1947 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளாகப் பிரிந்தது. 1948 பிப்ரவரி 23 அன்று கூடிய பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபை, தனது உறுப்பினர்கள் உருது அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசலாம் என முடிவெடுத்தது.

# இதை எதிர்த்த கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த உறுப்பினர் திரேந்திரநாத் தத்தா ‘வங்க மொழியையும் அதில் சேர்க்க வேண்டும்’ என்று முன்மொழிந்தார்.

# எனினும், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், கிழக்கு பாகிஸ்தான் முதல்வர் க்வாஜா நசிமுதீன் உள்ளிட்ட பலரின் உதவியுடன் வங்க மொழிக்கு ஆதரவான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

# இதற்கு எதிராக 1948 மார்ச் 19-ல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா ‘பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது மட்டுமே இருக்கும்’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

# இதற்கு எதிரான போராட்டம் வலுபெற்று பிப்ரவரி 21 அன்று டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஒன்பது வயதேயான ரஹியுல்லா உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மக்களின் கடுமையான எதிர்ப்பினை அடுத்து 1956 பிப்ரவரி 16 அன்று பாகிஸ்தானின் அரசு மொழிகளில் ஒன்றாக வங்க மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

# 1970 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தான் பகுதியின் மொத்தமுள்ள 169 இடங்களில் 167 இடங்களை அவாமி லீக் கட்சி கைப்பற்றி, ஆட்சியைப் பிடிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், ‘‘தாங்கள் ஆட்சியமைக்க வழிவிட வேண்டும்; புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்” என்ற முஜிபுர் ரஹ்மானின் கோரிக்கையை பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் மக்கள் கட்சி (தலைமை: பூட்டோ) ஆகியவை கடுமையாக எதிர்த்தன.

# இவ்வாறு தாய்மொழிக்காகத் தொடங்கிய போராட்டம் படிப்படியாக அரசியல்ரீதியாக வலுப்பெற்று, விடுதலைப் போராக உருமாறியது.

# இப்போரின்போது கிழக்கு பாகிஸ்தான் மக்களை அடக்கி ஒடுக்க பாகிஸ்தான் ராணுவப் படைகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வெறியாட்டத்தில் 30 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; 3 லட்சம் பெண்கள் மிகக் கொடூரமான வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாயினர். கிழக்கு பாகிஸ்தானில் காலம்காலமாக இருந்து வந்த கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டன. இறுதியில், உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனியொரு நாடு உருவானது.

# இந்தப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேசக் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, வங்கதேசத்தின் மொழிப் போர் தொடங்கிய பிப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என 1999 நவம்பர் 17-ல் தீர்மானம் நிறைவேற்றியது. பின்பு, ஐக்கிய நாடுகள் சபையும் தனது உறுப்புநாடுகள் இதைக் கொண்டாட வேண்டுமென பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

# பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படும் ஒவ்வொரு தாய்மொழி நாளும் உலகத்துக்குச் சொல்லும் பாடம் இதுதான்: ‘‘தேசிய இனங்களுக்கான உரிமைகளை, அவர்களது மொழி, பண்பாடு ஆகியவற்றை, ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரத் துடிக்கும் எந்தவொரு அரசும் இறுதியில் சிதறுண்டு போனதையே உலக வரலாறு நிரூபித்துள்ளது. எனவே, பன்முகத் தன்மையைப் பாதுகாத்திடுங்கள்!”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in