வேலைக்கு நான் தயார் - 31: திறன் பயிற்சி கைகொடுக்கும்

வேலைக்கு நான் தயார் - 31: திறன் பயிற்சி கைகொடுக்கும்
Updated on
1 min read

எங்கள் கிராமத்தில் இளைஞர்கள் சிலர் சரிவர படிக்கவில்லை. அதனால் தினக்கூலியாக உள்ளனர். அதுவும் தினசரி வேலை கிடைப்பதில்லை. இவர்களை முன்னேற்ற வழி சொல்ல முடியுமா? - பரமானந்தம், தாணிப்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்.

இன்றைய நவீன உலகில் குறைவாக படித்தவர் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை ஏதேனும் திறன் பயிற்சி முடித்திருப்பின் வாழ்க்கையில் வளம் பெற வாய்ப்புள்ளது. இதற்கென நாட்டில் இலவசமாக அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிலைகளிலான திறன் பயிற்சிகளை 36-க்கும் மேற்பட்ட செக்டார்களில் நடத்தி வருகின்றன. இவை அனைத்தும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

இலவச கட்டுமான பயிற்சி: இன்று நாட்டிலேயே அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு துறையாக கட்டுமானத்துறை உள்ளது. இத்துறையில் பல்வேறு பிரிவுகளில் கட்டுமானத்துறை தொடர்பான பயிற்சிகள் மிகவும் சிறப்பாக வழங்கப்படுகிறது.

உதாரணமாக, மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் நிறுவனமான சி.ஐ.டி.சி. (கன்ஸ்ட்ரக்ஷன் இன்டஸ்ட்ரி டெவலப்மென்ட் கவுன்சில்) கம்பி கட்டுபவர், மேசன், டைல்ஸ் ஒட்டுபவர், உயர்நிலை கிரேன் ஆப்ரேட்டர், கான்கீரிட் மிக்சர் ஆப்ரேட்டர் போன்ற பயிற்சிகளை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்துகின்றது.

இவை அனைத்தும் குறுகிய கால பயிற்சிகளாகும். இதனை முடித்து உரிய சான்றிதழ் பெற்று கட்டுமான நிறுவனங்களில் பணிவாய்ப்பு பெறலாம். அதுபோலவே நாட்டின் தலைசிறந்த கட்டுமான நிறுவனமான எல் அண்ட் ட்டி மிகப் பெரிய கட்டுமான தொழிலுக்கான பயிற்சி மையத்தினை காஞ்சிபுரம் அருகேசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடத்தி வருகிறது.

இங்கு இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமே. இப்பயிற்சி நிலையம் குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் பலர் நம் மாநிலத்தில் அறியாத காரணத்தினால் இங்கு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பயிற்சி பெறுகின்றனர்.

பயிற்சி (ஏற்கெனவே தெரிவித்த கட்டுமான பிரிவுகள்) வெற்றிகரமாக முடித்தவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் உள்கட்டமைப்புக்கான கட்டுமான பணிகளில் ஒப்பந்ததாரர்கள் வழி பணிவாய்ப்பு பெறுகின்றனர். எனவே எவ்வித செலவுமின்றி கட்டுமான துறையில் திறன் பயிற்சி பெற்று பணிவாய்ப்பு பெறலாம்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in