

உலகிலேயே மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலை உம்லிங் லா. கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் இருக்கும் இந்த சாலை அண்மையில் தான் திறக்கப்பட்டது. வாகனங்கள் செல்லும் மிக உயரிய சாலை என்பதற்காக உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த இடத்துக்கு வர வேண்டும் என்பது சாகச விரும்பிகளின் கனவு.
கிழக்கு லடாக்கில் சீன எல்லையில் இருக்கும் இந்த இடத்துக்கு தற்போது தான் சாலைகள் ஏற்படுத்தி இருக்கிறது BRO என்று அழைக்கப்படும் எல்லை சாலைகளை ஒருங்கிணைக்கும் அமைப்பு. கூகுள் மேப்பில் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான வழியை இந்த மேப் காட்டுவதில்லை.
புது வெள்ளை மழை: பாங்காங் டிஸோ ஏரியிலிருந்து கிளம்பிநேராக ஹன்லே பகுதியை வந்தடைய இரவாகிவிட்டது. நடுவில் காக்ஸங்லா கணவாய் வழியாவ ஹன்லே வந்தடைந்தோம். உலகிலேயே மிக உயரமான சாலைகளின் முதல் பத்து இடத்தில் இந்த காக்ஸங்லாவும் இடம் பெற்றிருக்கிறது.
இந்த மொத்த பயணத்திலும் முதல் முறையாக பனிக்கட்டிகளைப் பார்த்தது இங்கு தான். தென்னிந்தியாவில் இருக்கும் நமக்கு மார்கழி மாத குளிரே கொண்டாட்டம் தான். முதல் முறையாகப் பனிக்கட்டிகளைப் பார்க்கும்போது, மனம் ஒரு குழந்தையைப் போல் துள்ளிக் குதித்தது. பனிக்கட்டிகளை கைகளில் எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்து விளையாடி மகிழ்ந்தோம்.
லடாக்கின் நூப்ரா பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் தான் லடாக்கில் இருக்கும் கடைசி பெட்ரோல் பங்க். அதனால் நமக்குத் தேவையான அளவு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, இரண்டு கேன் வாங்கி அதிலும் பெட்ரோல் நிரப்பிக் கொண்டோம். அதன்பிறகு கிட்டத்தட்ட முன்னூறு கிலோமீட்டருக்கு பெட்ரோல் பங்க் கிடையாது.
ஷியோக் வழியாக பாங்காங் ஏரி வந்து, அங்கிருந்து காக்ஸங்லா வழியாக ஹன்லே வந்தபோதே பாதி பெட்ரோல் தீர்ந்து விட்டது. அதனால் அங்கு கடைகளில் பெட்ரோலை வாங்கி விற்கும் இடத்துக்குச் சென்று காலியானதை நிரப்பிக் கொண்டோம்.
லடாக் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூற்றி இருபது ரூபாய், அதுவே இதுபோன்ற கடைகளில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நூற்றி எண்பது ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.
ஹன்லே ரொம்பவே அழகான சிறிய கிராமம். உம்லிங் லா பிரபலமானதும் இந்த கிராமமும் வளர்ச்சியடைந்து வருகிறது. சுற்றுலாத்தலம் ஒரு ஊரின் வளர்ச்சியை மொத்தமாக மாற்றுகிறது என்பதை இங்கே கண்கூடாக பார்த்தோம். புதிது புதிதாக பல ஹோட்டல்கள் கட்டப்பட்டு வந்தன.
ஹன்லே வந்துதான் தங்குவதற்கு இடம் தேடமுடியும். அலைந்து திரிந்து ஒரு வீட்டில் நமக்குத் தங்குவதற்கு இடம் கிடைத்தது. தங்குவதற்கும் இரவு உணவுக்கும் சேர்த்து ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாய். நமக்கு அதிகமாகத் தெரிந்தாலும், அப்படி ஒரு இடத்தில் இது கம்மி தான் என்கிறார்கள்.
நமக்கும் வேறு வழியில்லை. குளிர் நடுங்கி எடுத்தது. இரவு உணவாகச் சப்பாத்தி, சூடு சாதமும் பருப்பும் கொடுத்தார்கள். அமிர்தமாக இருந்தது. அந்த இரவு நட்சத்திரங்களால் பகல் போலத் தெரிந்தது. எந்த மாசும் இல்லாமல், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கைக்கு அருகே இருப்பது போல் தெரிந்தது. நாளை உம்லிங் லா செல்ல வேண்டும்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பரியை; தொடர்புக்கு: withlovelogi@gmail.com