

சொல்லச் சொல்ல இனிக்குதடா
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
என்ற பாடல் ஒலிக்க, பாட்டுடன் ஒன்றிப் பாடியவாறே அம்மா புத்தகமொன்றைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தார்.
குழலி: என்னம்மா, ஒரே உற்சாகம்... பாட்டுச் சத்தம் வெளிய கேட்குதே...
அம்மா: உற்சாகப்படத் தனியா ஏதாவது காரணம் வேணுமா... நல்ல பாடல்கள, அதுவும் நல்ல தமிழ்ல கேட்குறப்போ மனசு தானாவே உற்சாகமாகிடுது குழலி...
சுடர்: நல்ல பாடல்களக் கேட்குறபோது நம்மள அறியாமத் தானாவே கால்களும் கைகளும் தாளம் போடுதே...
அம்மா: ஏதோ சாமி வந்த மாதிரி தலைகால் புரியாம ஆடுறதுதான உங்க காலத்துப் பாட்டு...
குழலி: ஆமா, சாமி வர்றது உண்மையா... நம்ம பக்கத்து வீட்டுப் பாட்டி மேல கூட பச்சையம்மா சாமி வருதுல்ல...
அம்மா: அது ஒரு மனநிலைதான் குழலி. எல்லாக் காலத்துலயும் இருக்கே. சங்க காலத்துல கூட வேலன் வெறியாடல்னு சொல்வாங்களாம். முருகக் கடவுள் தனக்குப் பூசை வைக்கிற பூசாரி மேல அருளாகி வர்றதா நம்பிக்கை இருந்திருக்கு.
குழலி: கோயில் கொடை சமயத்துல சாமி வந்து பூசாரிகள் அருள் வாக்கு சொல்றாங்களே.
எனக்கும் ஒரு நல்ல வாக்கு சொல்லுங்க அத்தை என்றவாறு சுடரும் வந்தமர்ந்தான்.
அம்மா: என்னாச்சு சுடர்... திடீர்னு அருள் வாக்கெல்லாம் கேக்குற...
சுடர்: பதட்டமா இருக்குறப்ப நமக்கு ஆறுதல் சொல்ற மாதிரி நல்ல வார்த்தைகளக் கேக்குறது மகிழ்ச்சியா இருக்கும்ல. அதான்...
குழலி: குறி சொல்றதும் வாக்குக் கேக்குறதும் அப்படியே பலிக்கும்னு நம்புறியா என்ன... மூடத்தனமா இல்ல...
சுடர்: உன் கேள்விக்கு நான் முன்னாடியே பதில் சொல்லிட்டேன் குழலி. நம்ம மனசுல பலவீனம் வரும்போது நாம ஒரு வடிகாலத் தேடிக்கிறோம். அதே மாதிரி எதிர்காலத்துல என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்கிறதுலயும் நாம ஆர்வமா இருக்கோம். குறி சொல்றது, சோசியம் பார்க்கறது எல்லாம் இந்த எண்ணத்துலதான். அதை நமக்கு எதிர்ல இருக்கிறவங்க பயன்படுத்திக்கிறாங்க.
அம்மா: நீ தெளிவாதான் இருக்க சுடர்.
குழலி: அம்மா நீங்க வேலன் வெறியாட்டுன்னு சொன்னீங்களே.
அம்மா: அந்தக் காலத்துல திருமணமாக இளம்பெண்கள அணங்கு, சூர் அச்சுறுத்தும்னு நம்பிக்கை இருந்துச்சு.
சுடர்: அணங்கா...
குழலி: அம்மா, பேய், பிசாசுன்னு சொல்றமே அது மாதிரியா...
அம்மா: கிட்டத்தட்ட அப்படித்தான். தன்னைவிட ஆற்றலுடைய எதையும் மனுசன் அச்சத்துக்கு உரியதாத்தான் பார்த்தான். தான் எதையெல்லாம் பார்த்து அச்சப்பட்டானோ அதையெல்லாம் தெய்வமா நினைச்சு வழிபட ஆரம்பிச்சான். அணங்கும் அப்படித்தான். அணங்குன்னா வருத்தம் தரக் கூடியதுன்னு பொருள்.
உடலை, மனதை வருத்தக் கூடியதுதான் அணங்கு. அருவி, ஆறு, கடல், காடு, மரம், மலைன்னு எல்லா இடத்துலயும் தெய்வம் இருக்கிறதா நம்பினான் அந்தக் கால மனுசன்.
குழலி: அணங்குன்னா பெண் என்று ஒரு பொருள் இருக்குல்லம்மா. தமிழணங்குன்னு சொல்றோமே...
அம்மா: சரியா சொல்ற. முருகனுக்குப் பூசை வைக்கிற பூசாரிக்குப் பேருதான் வேலன். முருகனோட ஆயுதமான வேலத் தன் கையில ஏந்தி, அருள் வந்து ஆடுறதால வேலன்னு சொல்லியிருக்கலாம். இந்த வேலன் தான் வெறியாட்டை நடத்துவாராம். அச்சப்பட்ட பெண்கள முருகன் கோட்டத்துக்குக் கூட்டிவந்து இந்த வேலனை வச்சு வெறியாட்டு நடத்தும்படி செய்வாங்களாம்.
சுடர்: இந்தக் காலத்துல கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயி வேப்பிலை அடிக்கிற மாதிரின்னு வச்சுக்கலாமா...
அம்மா: ஆமா சுடர். அது போலத்தான். சரி தேர்வுக்குப் படிங்க. அடுத்த வாரம் பேசுவோமா இதப் பத்தி...
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com