

காலநிலை மாற்றம் ஒரு சமூக அநீதி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அது எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மட்டும் அநீதி இழைக்கிறது?
2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வீசிய வெப்ப அலையால் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 140 பேர் உயிரிழந்தனர். இந்தியா வெப்பமண்டல நாடு என்பதால் இங்கு வெப்ப அலைகள் வீசுவது சாதாரணம்தான். ஆனால், எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 47 டிகிரி வரை உயர்ந்துள்ளதை நாம் சாதாரணமாக கருதிவிட முடியாது. இதுமட்டுமல்ல அவ்வபோது பெய்யும் பருவம் தவறிய மழை, வெள்ளப்பெருக்கு என இயற்கைப் பேரழிவுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பட்டியலின மக்கள்தான் என்கின்றன ஆய்வுகள்.
இந்தியச் சமூகத்தில் வரலாற்றுரீதியாகவே ஒவ்வொரு சமூகப்பிரிவினருக்கும் இயற்கையுடன் ஒவ்வொரு வகையில் தொடர்புண்டு. இதில் பட்டியல், பழங்குடி மக்களே இயற்கையுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டவர்கள். அவற்றையே நம்பி வாழ்பவர்கள். இதனால் இயற்கை பேரழிவு ஏற்படும்போது அதில் அதிகம் பாதிக்கப்படுவதும் அவர்களே.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஓம் பிரகாஷ் வால்மிகி இதை,‘இயற்கையின் வளங்கள் உயர்சாதியினருக்கு ஒதுக்கப்படும் நிலையில், இயற்கையின் சீற்றமோ தாழ்ந்த சாதியினரைச் சென்றடைகிறது’ என்று சுட்டிக்காட்டுகிறார். இதற்கான உதாரணத்தை நாம் அன்றாட வாழ்விலேயே பார்க்கலாம். கார்பரேட் நிறுவனங்களுக்கு மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தரும் அரசு, காடுகளில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றுகிறது. அவர்கள் தம் தேவைக்காக ஓரிரு மரங்களை வெட்டுவதை சுற்றுச்சூழல் குற்றமாக்கி சிறையில் அடைக்கிறது.
இந்தியாவில் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட லண்டனைச் சேர்ந்த Think Tank Overseas Development Institute எனும்நிறுவனம் 1950களில் இருந்து இந்தியாவில் ஏற்படும் கனமழை நிகழ்வுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகச் சொல்கிறது. அதேசமயம் ஒட்டுமொத்த மழைப்பொழிவு வெகுவாக குறைந்துள்ளது என்கிறது.
இதனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த குடிநீர் பற்றாக்குறை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை அதிகம் பாதிக்கிறது. மகாராஷ்டிரா, பிஹார் போன்ற மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் பகுதிகளில் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு மனைவி, தண்ணீர் பிடித்துவர இரு மனைவிகள் என வைத்துக்கொள்கின்றனர். பொதுவாக தண்ணீர் சுமப்பதற்காக அவர்கள் திருமணம் செய்யும் பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்தே வறுமையின் காரணமாக அழைத்து வரப்படுகின்றனர். இது ஒருவகையில் பெண்களுக்கு எதிரான சுரண்டல் அல்லவா?
(தொடர்ந்து பேசுவோம்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘சிதிலங்களின் தேசம்’, ‘உயிர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com