

பிரிவினைக்கு முந்தைய இணைந்த இந்தியாவில் பிறந்து, பிரிவினையின்போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று மருத்துவ சேவையாற்றி இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த இரு மருத்துவ சகோதரிகள் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
‘யாகூப் சகோதரிகள்' என பெருமையுடன் அழைக்கப்பட்ட இந்த இரு இஸ்லாமிய சகோதரிகள் தான் இந்திய துணைகண்டத்தின் முதல் இஸ்லாமிய பெண் மருத்துவர்கள் ஆவர். பிறப்பால் இவர்கள் இரட்டையர்கள் அல்ல என்றாலும், செய்த பணியால், 'இரட்டை மருத்துவர்கள்' என்று எப்போதும் சேர்த்தே அழைக்கப்பட்டவர்கள் இந்த யாகூப் சகோதரிகள்.
உண்மையான கல்வித் தந்தை: ஹரியானா மாநிலம் அம்பாலா நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் கணேஷ்லால், இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தான் இஸ்லாமியராக மாறியதுடன், தனது பெயரையும் முகமது யாகூப் என மாற்றிக் கொண்டார்.
முகமது யாகூப் அங்கிருந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியதால் கல்வியின் பெருமையை நன்கு உணர்ந்து இருந்ததுடன், தனது எட்டுக் குழந்தைகளையும் மிக நன்றாகவே படிக்க வைத்தார். இதில் மகள் உம்மே குல்சூம் 1898ல் பிறந்தார். பிறகு இரண்டாண்டுகள் கழித்து அம்தூர் ரஹீப் பிறந்த. இந்த இரண்டு மகள்களின் புத்திசாலித்தனத்தையும் பார்த்த முகமது யாகூப் இருவரையுமே மருத்துவராக்க முடிவு செய்தார்.
ஆக்ராவின் புனித ஜான் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற இந்த இரு சகோதரிகளும், ஆக்ரா மகளிர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலச் சென்றனர். தற்போதைய சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி இதுவே. பெண்களுக்கு ஆரம்பப் பள்ளிக்கல்வியே கேள்விக்குறியாக இருந்த அந்தக் காலத்தில், தனக்கு ஏற்பட்ட இகழ்ச்சிகளை எல்லாம் தாண்டி தன் மகள்களின் கல்வியில் உறுதியாக இருந்தார் முகமது யாகூப். தந்தையின் ஊக்கத்தால் மகள்களும் அதே உறுதியுடன் மருத்துவம் பயின்றனர்.
1920 ஆம் ஆண்டு, இரு சகோதரிகளும் எல்.எம்.எஃப் (Licensed Medical Practitioner) மருத்துவப் பட்டத்தைக் கைகளில் ஏந்திய போது, அவர்கள்தான் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மருத்துவர்களாக இருந்தார்கள்.
மருத்துவ சகோதரிகள்: படிப்பை முடித்த உடனேயே இருவரும் மருத்துவப் பணியை தொடங்கியிருந்தாலும், மூத்தவர் உம்மே குல்சூம் அரசியல் ஈடுபாடு உள்ளவராகவும் இருந்தார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் மருத்துவப் பேராசிரியராக பணியாற்றியதுடன், இந்திய விடுதலைப் போரிலும் அவர் தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருந்தார்.
அனைத்திந்திய முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் குழு தலைவராகவும் செயல்பட்ட அவர், பெண்கள் கல்வி, ஆரோக்கியம், மகளிர் முன்னேற்றம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அத்துடன் தனது கணவருடன் சேர்ந்து 'ஹரெம்' என்ற ஒரு உருதுப் பத்திரிகையையும் நடத்தி வந்தார்.
இளைய சகோதரி அம்தூர் ரஹீப், அவரது திருமணத்திற்குப் பின் தனது கணவருடன் சேர்ந்து பரேலி மற்றும் அலிகார் நகரங்களில் மருத்துவப்பணி புரிந்து வந்ததுடன், சகோதரியின் மகளிர் முன்னேற்ற முயற்சிகளுக்கு துணையாகவும் நின்றார்.
தனது மருத்துவப் பணிக்காகவும், சமூகப் பங்களிப்புக்காகவும் எண்ணற்ற அங்கீகாரங்களையும், பட்டங்களையும் பெற்றிருந்தாலும், மூத்தவர் உம்மே குல்சூம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது எடுத்த தனது அரசியல் முடிவுகளால், மக்களிடையே பெரும் எதிர்ப்பையே சம்பாதித்தார். இதனால் சகோதரிகள் இருவரும் குடும்பத்துடன் கராச்சிக்கு குடிபெயர்ந்தனர்.
அங்கும் சாதாரண மக்கள் தொடங்கி, பாகிஸ்தான் தலைவரான ஷாநவாஸ் பூட்டோவின் குடும்பம்வரை மருத்துவம் பார்த்தனர். இதில் மூத்த சகோதரி உம்மே குல்சூம் பல புத்தகங்களையும் இயற்றி வெளியிட்டார். இளைய சகோதரி அம்தூர் ரஹீப் மகப்பேறு மருத்துவராக தனது வாழ்நாள் முழுதும் அரும்பணி ஆற்றினார். வயோதிகம் காரணமாக 1971 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் இருவரும் இயற்கை எய்தினர் என்றாலும், இருவரின் ஒன்றிணைந்த பணிகள், இரு தேசத்திற்கானவை.
(மகிமை தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com