நானும் கதாசிரியரே! - 34: வசீகரிக்கும் புதிர்க் கதைகள்!

நானும் கதாசிரியரே! - 34: வசீகரிக்கும் புதிர்க் கதைகள்!
Updated on
2 min read

கதை குறித்து அடிப்படைப் பயிற்சிகளுக்கு வழிகாட்டும் இந்தத் தொடரைப் படித்துவரும் ஒரு மாணவர் கேள்வி கேட்டார். புதிர் கதைகள் எழுதுவது எப்படி?

உண்மையில் புதிர் கதை என்றொரு வடிவம் இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது அல்லவா? புதிர்களை விடுவிக்கும் விதமாகக் கதைகளைக் கூறிக்கொண்டே செல்வது நமது கதை மரபில் இருந்துள்ளது. விக்கிரமாதித்யன் கதைகள், தெனாலி ராமன் கதைகள், முல்லா கதைகள், மரியாதை ராமன் கதைகள் போன்றவற்றில் பெரும்பாலான கதைகள் புதிர்களை விடுவிக்கும் வகையில் அமைந்தவையே.

புதையல் யாருக்கு? - அரேபிய நாட்டில் உருவான புதிர் கதை ஒன்றைப் பார்ப்போம். மிகப் பெரிய செல்வந்தர் ஒருவர். அவர் இறக்கும் தருவாயில் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். அவர்களை அழைத்து, “என் வாழ்வில் நான் சேமித்த செல்வங்களை எல்லாம் பாலைவனத்தில் உள்ள பூஞ்சோலை ஒன்றில் புதைத்து வைத்துள்ளேன்.

நீங்கள் வாசல் புறத்தில் உள்ள ஒட்டகத்தில் அண்ணனும், பின்பக்கம் உள்ள ஒட்டகத்தில் தம்பியும் செல்ல வேண்டும். யாருடைய ஒட்டகம் இரண்டாவதாகச் செல்கிறதோ அவருக்கே அந்தப் புதையல்” என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.

அண்ணன் - தம்பி இருவருக்கும் கடுமையான குழப்பம். ஏனெனில், இரண்டாவதாகச் செல்வதற்காக இருவருமே மெதுவாகச் செல்வார்கள். அதிலேயே அவர்களின் வாழ்நாளே முடிந்துவிடும் எனச் சண்டை போட்டுக்கொண்டார்கள்.

இந்தக் கதையின் முடிவுக்கு முன் கதையின் அமைப்பைப் பார்த்துவிடுவோம். நம் கதையின் ஃபார்முலாபடி, கதாபாத்திரங்கள் அறிமுகம் அடுத்து அவர்களுக்கு சிக்கல் இறுதியில் தீர்வு என்பதாக இருக்கும். ஆனால், இதில் அதேபோல இருந்தாலும் சிக்கல் புதிரைப் போல இருக்கிறது. இதையே கதையாக இல்லாமல், வினோத், கீர்த்தி ஆகிய இருவரும் குதிரையில் செல்ல வேண்டும். இரண்டாவது வருபவருக்குப் பரிசு என்றால் யார் வெல்வார்கள் என்று கேட்டால்கூட போதும் இல்லையா? அப்படிப் பார்த்தால் இந்தப் புதிரை இன்னும் சுவையாகக் கொடுக்கவே கதையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஏன் அப்படிக் கொடுக்க வேண்டும்? - இரண்டு காரணங்கள். சில புதிர்களை ஒரு சில வரிகளில் கொடுத்தால் படிக்கும்போது புரியாது. அதை நீட்டி ஒரு கதையாகப் படிக்கும்போது எளிதாகப் புரிந்துவிடும். இரண்டாவது, ஒரு புத்தகத்தில் இருபது புதிர்கள் இருந்தால் அனைத்தையும் படிப்பதற்கு சோர்வாகிவிடும். அதுவே, இருபது கதைகளாக இருக்கும்பட்சத்தில் படிக்க சுவையாகவும் இருக்கும். புதிர்களைத் தெரிந்துகொள்ளவும் ஆர்வம் அதிகரிக்கும்.

புதிரை விடுவிப்பது போலவே, விடுகதைகளை விடுவித்துச் சென்றுகொண்டே கதையைப் படிக்க வைக்கும் கதைகளும் நம்மிடம்இருக்கின்றன. புதிர் கதைகளில் முதன்மையானது புதிரும் அதற்கான விடையும்தான். ஆனாலும், அதைக் கட்டமைத்து அழகாக ஒரு கதையாகவும் எழுதினால் புதிரை விரும்பாதவர்கள்கூட கதையின் தன்மையால் அதை மீண்டும் மீண்டும் படிக்க விரும்புவர். ஆம்.

நண்பர்களோடு சேர்ந்து கதை வடிவில் புதிரைச் சொல்லி அவர்களோடு உரையாட முடியும். குழு விளையாட்டாகவும் மாற்ற முடியும். எந்தப் பாடமாக இருந்தாலும் வகுப்பை எதிர்கொள்வதில் சின்ன பதற்றம் அனைத்து மாணவர்களுக்கும் இருக்கத்தான் செய்யும். அதற்காக, இரண்டு அல்லது நான்கு நிமிடங்களில் புதிர்க் கதை ஒன்றைச் சொல்லி அதற்கான விடையைத் தேடிக் கண்டடையலாம். அப்படிச் செய்யும்போது மனதில் இருக்கும் பதற்றம் விடுபட்டு பாடங்களைக் கேட்கும் ஆர்வம் பிறக்கும்.

அதெல்லாம் சரி, ஒட்டகத்தில் யார் இரண்டாவதாகச் சென்றார்கள்? புதையல் கிடைத்ததா? என்பதைச் சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

- தொடரும், கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in