

சிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியின் நூல் "அன்பான பெற்றோரே". குழந்தைகளுக்காகவே வாழ வேண்டும் என்பதை, அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தில் எழுதப்படாமல் உள்ள சட்டமாகவே பெற்றோர் நினைத்து செயல்படுகின்றனர். ஆனால் நடைமுறையில் குழந்தைகளை புரிந்துகொண்டவர்களாக பெரும்பாலான பெற்றோர்கள் நடந்துகொள்வதில்லை.
வளர்ந்த நாடுகளில் குழந்தை வளர்ப்பு தனிக்கல்வியாக, திருமணமான பிறகு, பெற்றோராகும் தருணத்தில், தம் பதிகளுக்கு தரப்படுகிறது. நம் நாட்டிலோ பெண்கள் மட்டுமே குழந்தை வளர்ப்பில் முழுபங்கையும் எடுத்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. நூலாசிரியர் யெஸ்.பாலபாரதி, பெற்றோரிடம், குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறைகளை ஆலோசனைகளாகக் கூறியுள்ளார். ஏன் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்பதற்கு குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறார்.
தினமும் உடற்பயிற்சி: சுத்தத்தை எல்லாமா சொல்லித் தருவாங்க, எங்களுக்கு யாராவது சொல்லித்தந்தார்களா என்ன? என்று கேட்கத் தோணலாம். நமக்கெல்லாம் பாட்டி, தாத்தாக்கள் சுத்தமாக இருக்க அறிவுறுத்திக் கொண்டேதான் இருந்தார்கள். உணவு உண்பதற்கு முன்பு கைகழுவ மறக்கக்கூடாது.
பெற்றோர் குழந்தைகள் முன்பு எடுத்துக்காட்டாக நடந்துகொள்ள வேண்டும் பெற்றோரின் பழக்கமே பெரும்பாலும் குழந்தைகளிடம் தொடரும். இக்காலத்து வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி மிக அவசியமான ஒன்று. உடற்சோர்வு அடையும் வரையான வேலை என்பது இயந்திரங்களின் வரவினால் குறைந்துவிட்டது.
மேலும் சுகாதார மற்ற வாழ்க்கை நடைமுறைகளால் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள இக்கால சமுதாயம் எளிதில் பாதிக்கப்பட்டுவிடுகிறது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்யும்போது, நோய் எதிர்ப்பு திறன் தானாகவே அதிகரிக்கும்.
ஊக்கப்படுத்துங்கள்: பெற்றோர் இளவயதில் கண்ட கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, தன்வாழ்க்கையில் கிடைத்துள்ள கதாபாத்திரங்களாக பிள்ளைகளை நினையாதீர்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து வளர்க்க உதவவேண்டும். பெற்றோரின் ஆசையை திணிக்கக்கூடாது.
எல்லாமே என் குழந்தைக்காகதான் என்று சொல்லும் பெற்றோர்களில், எத்தனை பேர், ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை குழந்தைகளுடன் செலவழிக்கிறீர்கள்?. பணமா? பாசமா? பெற்றோரே முடிவெடுங்கள். மனஅமைதியும், மகிழ்ச்சியும் அடை யணும்ன்னா தினமும் குழந்தைகளுடன் பேசிச் சிரித்து விளையாடுங்கள்.
குழந்தைகளை வளர்ப்பதில் அவ்வப் போது பரிசு வழங்குவது குழந்தைகளை ஊக்கப்படுத்தும். ஆனால் அதை லஞ்சமாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பரிசுக்கும், லஞ்சத்துக்கும் என்ன வித்தியாசம் என்றால், அழகான ஓவியம் வரையும் குழந்தைக்கு பிரஷ்கள், வண்ணங்கள், ஓவியம் தொடர்பான நூற்கள் வாங்கித்தரலாம்.
மேலும் ஓவியத்தில் பயிற்சி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவதாக இருப்பது பரிசு. இரு குழந்தைகள் உள்ள வீட்டில் நல்ல மதிப்பெண் எடுத்த மகனை பாராட்ட பரிசு வாங்கித் தந்தால், குறைவாக மதிப்பெண் பெற்ற மகன் மனம் வருந்தும் இல்லையா? ஆகவே நல்ல மதிப்பெண் எடுத்ததை பாராட்டவும், அடுத்த முறை நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும் இருவருக்குமே பரிசு வழங்கி ஊக்கப்படுத்தலாம்.
சமூக உணர்வு: குழந்தைகளுக்கு அடிப்படையில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. சமூகத்தில் பழக முதலில் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கச் சொல்லித் தர வேண்டும். சமூக விதிகளை மதிக்க வேண்டும். மேலும் பெற்றோர் குழந்தைகளுக்கு பகிர்ந்து கொள்ளுதல் என்ற நல்ல பழக்கத்தை கற்றுத்தர வேண்டும். பள்ளியில் குழந்தையின் நண்பருக்கும் சேர்த்து திண்பண்டங்கள் கொடுத்தனுப்ப வேண்டும்.
உழைப்புக்கு மரியாதை செலுத்த கற்றுத்தர வேண்டும். உயர்வு பெற உழைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். உண்மையும், உழைப்பும் மட்டுமே நிரந்தர மானவை என்பதை பெற்றோர் தாமே உதாரணமாகி வாழ வேண்டும். மரியாதை என்பது உயர்தரக ஆடைகளை அணிவதில் இல்லை. எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்பதை சொல்லித்தர வேண்டும். வீட்டில் பணிசெய்யும்நபர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களிடம் மரியாதையாக பேச பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.
தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் வரும் ஏழ்மை, உடற்குறை, அறிவுத்திறன் குறைபாடு போன்ற கேவலப்படுத்தும் நகைச்சுவை காட்சிகளை குழந்தைகளையும் வைத்துக் கொண்டு நாமும் ரசிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பெற்றோராக இருப்பது மாபெரும் கலை. கற்றுத் தேற "அன்பான பெற்றோரே" புத்தகம் படியுங்கள். நல்ல பெற்றோராக இருந்தால், நல்ல குழந்தைகள், நல்ல சமுதாயத்தை அமைத்துவிடு வார்கள்.