

எண்கள் இல்லாமல் ஓர் ஊரைப் பற்றி குறிப்பிட இயலாது. அழகான ஊர், இனிமையான மக்கள் எனக் கூறலாம். ஆனால் ஊரைப் பற்றிச் சொல்லும்போது எண்கள் தவிர்க்க முடியாதவை. அந்த ஊர் எங்கே இருக்கிறது? அதற்கு ஒரு குறிப்பு வேண்டும். சென்னையில் இருந்து இத்தனை கிலோமீட்டர், மதுரையில் இருந்து இத்தனை கிலோ மீட்டர்.
மதுரையில் இருந்து 50 கிலோமீட்டர் என்று சொன்னால் அந்த இடத்தைக் கண்டுபிடித்துவிட முடியுமா? ஒரு புள்ளியில் இருந்து ஒரு ஆரத் தைக்கொண்டு ஒரு வட்டத்தையே வரையலாம். ஆகவே மதுரையில் இருந்து எந்தத் திசையில் வேண்டுமானாலும் அந்த ஊர் இருக்கலாம். அப்படியெனில் எப்படித்தான் ஊரினைக் குறிப்பிடுவது?
அட்சரேகை, தீர்க்கரேகை (Latitude and Longitude) இவை இரண்டும் இருந்தால் எந்த ஒரு இடத்தினையும் கச்சிதமாகத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். உங்களின் ஒவ்வொரு ஊருக்கும் இப்படி இருக்கும். முதலில் அதைக் கண்டுபிடியுங்கள். இணையத்தின் மூலம் இதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அப்படி தேடும்போது உங்கள் ஊர் பற்றி மேலும் சில எண்கள் கிடைக்கும். மதுரையின் ஆள்கூறுகள் (Coordinates): 9.925200°N 78.119800°E
பரப்பளவு: ஊர் என்பது ஒரு புள்ளியா என்ன? அது உறுதியான ஒரு வடிவிலும் இருக்காது. அதன் எல்லைகள் கோணல்மாணலாக இருக்கலாம். வட்டம், சதுரம், செவ்வகம் எனச் சரியான வடிவில் இருக்காது. ஊர் பற்றிய குறிப்பில் பரப்பளவினைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதை வைத்தே எவ்வளவு பெரிய ஊர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
உங்கள் ஊர் பற்றி மட்டும் பார்த்தால் பெரியதா சிறியதா என்று தெரிந்துவிடுமா? நிச்சயம் இல்லை, அதற்குக் குறைந்தது இரண்டு மூன்று ஊர்களைப் பார்த்தால்தான் ஓரளவிற்கு எந்த வரிசையில் வரும் என்று தெரியும்.
பெரிய ஊர் என்றால் நிலப்பரப்பு மட்டும் பெரியதாக இருந்தால் போதுமா? சில நாடுகளில் ஒரு வீட்டிற்கும் மற்ற வீட்டிற்குமே அதிக தூரம் போக வேண்டும் என்பார்கள். அப்படியெனில் அந்த ஊரின் மக்கள் தொகை எவ்வளவு என்று குறிப்பிட்டு இருப்பார்கள். மக்கள் தொகையிலேயே இன்னும் தொகுத்து,
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வரையில் தரவுகளை எடுக்கலாம். இது சில ஆயிரத்தில் இருந்து லட்சங்கள் வரையும் செல்லும். 2011-ம் ஆண்டு கடைசியாக எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதுரையின் மக்கள் தொகை 14,70,755 [14 லட்சம்]. இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஏறி 36 லட்சத்திற்கு வந்திருக்கலாம் என கணக்கிடுகின்றனர்.
அடர்த்தி: மக்கள்தொகை வந்த பின்னர் அடர்த்தி மிக முக்கியம். அதை வைத்தே நகரத்தைத் திட்டமிட முடியும். நம்மிடம், மக்கள் தொகையும் உள்ளது ஊரின் பரப்பளவும் உள்ளது. இரண்டையும் வகுத்தாலே விடை கிடைக்கும். அது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு மக்கள் வசிக்கின்றனர் என்ற கணக்கு.
அப்படியே ஒவ்வொருகிலோ மீட்டருக்கும் ஒன்றுபோல இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சராசரிஎண்ணிக்கைதான். மதுரையின் பரப்பளவு 6425 / km2. அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் 6425 நபர்கள் வசிக்கின்றனர்.
ஏற்றம் என்றால் என்னவாக இருக்கும்? கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்திற்கு அந்த ஊர் இருக்கிறது என்று இது குறிப்பிடும். நகரங்கள் கடல் மட்டத்திற்குக் கீழே இருக்க வாய்ப்புள்ளதா? தேடிப்பாருங்கள். புதிதாக ஒன்றினை ஆராயும்போது ஆரம்பத்தில் சிரமமாகஇருக்கும், ஆனால் அதற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால் சலிக்காத மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்.
மகிழ்வூட்டவும் உற்சாகமூட்டவும் எண்கள் எப்போதுமே துணையிருக்கும். அதைக்கொண்டே பல இடங்களில் மதிப்பிடவும்முடியும். இன்னும் எங்கெல்லாம் ஊரும் எண்களும் சங்கமிக்கின்றன?