

வாசிப்பு (Reading skill) குழந்தைகளின் மொழி வளர்ச்சி மற்றும் சொல்லகராதிப் பெருக்கத்தினை மேம்படுத்துகிறது. இது சிறந்த தொடர்புத் திறன்களுக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் துவக்கப் பள்ளியில் இருந்தே வாசிப்பை வளர்த்தெடுப்பது கட்டாயம்.
படக் கதைகளின் உதவியுடன் வாசிப்பைத் தொடங்கலாம். குழந் தைகள் படங்களைப் பார்த்து கதையைக் கூறுவார்கள். உண்மைக் கதையில் இருந்து மாறுபட்டு புதியகதை உருவாகலாம். அதை அனுமதியுங்கள். அது கற்பனை மற்றும் பாடைப்பாற்றல் திறனை வளர்க்க உதவும். இது வாசிப்பு முன்தயாரிப்புச் செயலாகும்.
எழுத்து கற்றுக் கொடுத்தபின் வாசிக்க பழக்கப்படுத்த வேண்டும். படங்களும், வார்த்தைகளும் அடங்கிய அட்டையைத் தயாரித்து வழங்கவும். அட்டையிலுள்ள வார்த்தையை உரக்க வாசிக்கச் செய்யவும். ஒவ்வொரு எழுத்தாக கூட்டி வாசிப்பதை தவிர்க்கவும். ஒரு குழந்தை படத்தைப் பார்த்து ‘நாற்காலி' என்பதற்கு ‘பெஞ்ச்' என கூறினால், படத்தின் கீழே உள்ள எழுத்துக்கள் உதவியுடன் சரியான வார்த்ததையை வாசிக்க வலியுறுத்துங்கள், உதவுங்கள்.
தயக்கத்தை அகற்றும்: பின், படங்களும், அதன்கீழ் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் இடம் பெற்றுள்ள அட்டையை வழங்கவும். இதனை இருவர் இருவராக இணைந்து வாசிக்கச் செய்ய வேண்டும். படம் வார்த்தைகளை சரளமாக வாசிக்க உதவும்.இது இணைவாசிப்பு பழக்கத்தினை உருவாக்கும். ஒருவர் தவறாக வாசிக்கும்போது மற்றவர் திருத்தி வாசிக்கஉதவுவார். இது புரிந்து வாசிக்கும்பழக்கத்தை உருவாக்கும். வாசித் தலின் தயக்கத்தை அகற்றும்.
குழந்தைகளின் வாசிப்புத் திறன்வளர்த்தெடுக்கப் பள்ளிக்கு கல்வியாளர் ச.வின்செண்ட்டை அழைத்திருந்தேன். அவர் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளிடம் பயிற்சித்தாள் ஒன்றை வழங்கினார். வாசிப்பதற்கு அரை மணி நேரம் தந்தார். அவை நான்கு பக்கங்கள். எளிய வாக்கியங்களில் சிறு துணுக்குகள், தகவல்கள், கதைகள் மற்றும் படங்களும் இருந்தன.
சரியா தவறா? - ஒவ்வொரு பகுதிக்கு கீழும் சில கேள்விகள் கொடுக்கப்ட்டிருந்தன. நிரப்புக, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க மற்றும் சரியா தவறா என்பது போன்று தலைப்பபுகளில் இருந்தன. அவைகள் எழுத்துத்திறனைச் சோதிப்பதற்காக கொடுக்கப்பட்டவை அல்ல. வாசித்தலின் புரிதலைச் சோதிப்பதற்காக என்றார்.
வாசிப்பின் வெற்றி என்பது புரிந்து படிப்பது. மௌன வாசிப்பு புரிதலை அதிகப்படுத்தும். குழந்தைகள் புரிந்து வாசிக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளும் பொருட்டே வினாக்கள். அவர் புரிதல் அடிப்படையில் மட்டுமே வாசிப்புத் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மௌன வாசிப்பை பரிந்துரைத்தார். ஆரம்ப கட்டத்தில் இரண்டாம் வகுப்பு வரைகுழந்தைகள் சத்தம் போட்டு வாசிப்பதற்குப் பழக்கப்படுத்தலாம். அது உச்சரிப்பை மேம்படுத்தும். மூன்றாம் வகுப்பில் இருந்து மௌன வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். வாய்மொழி கேள்விகள் கேட்பது புரிதலை உறுதிபடுத்தாது. ஒரே நேரத்தில் பலரும் பதில் அளிக்க வாய்ப்பு உண்டு. ஊகித்தும் பதில் அளிக்கலாம். அதனால், அதை தவிர்க்க வேண்டும் என்றார்.
பயிற்சித்தாளில் ஒன்று உங்களுக்காக: என்னுடைய அம்மா ஒரு நாள் என்னைக் கடைக்குப் போகச் சொன்னார். கையில் ஒரு பையைக் கொடுத்தார். ஆறு முட்டைகள், இரண்டு தேங்காய்கள், ஒரு கிலோகத்திரிக்காய், கால் கிலோ தக்காளிஆகியவற்றை வாங்கி வரச் சொன்னார்.
நான் அவற்றை கீழ் இருந்து மேலாக எப்படி அடுக்க வேண்டும். ஏன்? அ) தேங்காய், கத்திரிக்காய், முட்டை, தக்காளி ஆ) முட்டை, கத்தரிக்காய், தக்காளி, தேங்காய்இ) தேங்காய், கத்தரிக்காய், தக்காளி, முட்டை, ஒவ்வொரு மாணவனின் வாசிப்புத் திறனை உண்மையாக மதிப்பீடு செய்ய, இதுபோன்ற பயிற்சித் தாளை உருவாக்கலாம்.
- கட்டுரையாளர் எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை