முத்துக்கள் 10 - பல சமூகங்களை அறிய பன்மொழிகள் உதவும்

முத்துக்கள் 10 - பல சமூகங்களை அறிய பன்மொழிகள் உதவும்
Updated on
2 min read

ஜெர்மனியைச் சேர்ந்த மொழியியலாளரும் இந்திய - ஐரோப்பிய மொழிகளின் ஒப்பியல் வல்லுநருமான ஆகஸ்ட் ஸ்லைகர் (August Schleicher) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# ஜெர்மனியில் மெய்னிங்கன் என்ற இடத்தில் பிறந்தார் (1821). தந்தை மருத்துவர். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். லீப்சிக் பல்கலைக்கழகத்தில் இறையியல் பயின்றார். பின்னர் போன் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மொழிகளைப் பயின்றார்.

# 1846-ல் முனைவர் பட்டம் பெற்றார். இவரது மொழி அறிவை உணர்ந்த இளவரசர் வழங்கிய உதவித்தொகையைப் பெற்று மொழி ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். பிராகா மற்றும் ஜேனா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

# அரேபிய மொழி, ஹீப்ரு, சமஸ்கிருதம், பாரசீகம், ஃபிரெஞ்ச், ஸ்பானிய மொழி, போர்ச்சுகீசிய மொழி, லத்தீன் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றார். டுபிங்கன் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது மொழியியல் வல்லுநர் ஜி.டபிள்யு. எஃப். கேகலின் நூல்களைப் படித்தார்.

# மொழிகளின் இலக்கணம், ஓசைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்தார். 1950 முதல் ஏழாண்டுகள் பிராகா பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய வரலாற்று ஆய்வியல் மற்றும் கிரேக்கம், லத்தீன் மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வு பாடங்களைக் கற்பித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்லாவிய மொழிகள் எனக் குறிப்பிடப்படும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

# இவரது ஆராய்ச்சிகள் குறித்த கட்டுரைகள் ‘ஹேண்ட்புக் ஆஃப் தி லிதுவேனியன் லாங்வேஜ்’ இதழில் வெளிவந்தது. மொழிகள் வளர்ச்சிக் காலம், முதிர்ச்சிக் காலம், சிதைவு காலத்துடன் கூடிய உயிரினம் போன்றது என்ற கோட்பாட்டை உருவாக்கினார். மொழியியல் ஒப்பீட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

# ஐரோப்பிய மொழிகள், இந்திய மொழிகளைக் கற்றார். ஐரோப்பிய மொழிகள் குறித்து முறையாக விளக்கும் ‘தி லாங்வேஜ் ஆஃப் யூரோப் இன் சிஸ்டமேடிக் பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நூலை எழுதினார். பண்டைய இந்திய - ஐரோப்பிய மொழிச் சொற்களை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.

# ‘கம்பென்டியம் ஆஃப் தி கம்பேரிடிவ் கிராமர் ஆஃப் தி இன்டோ –யுரோப்பியன்’, ‘சான்ஸ்கிரிட்’, ‘க்ரீக் அன்ட் லத்தீன் லாங்வேஜஸ்’, ‘ஃபார்மல் டீச்சிங் ஆஃப் தி சர்ச் ஸ்லவோனிக் லாங்வேஜ்’, ‘டார்வின் தியரி அன்ட் லிங்விஸ்டிக்ஸ்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ‘ஜெனரல் நியூஸ்பேப்பர் ஃபார் சயின்ஸ் அன்ட் லிட்ரேச்சர்’ இதழை நடத்தினார்.

# தாவரவியல் வகைப்பாட்டு முறையைப் போன்றே மொழி வகைப்பாட்டுக்கான முறையைக் கண்டறிந்தார். ஒவ்வொரு மொழிக்கும் அவற்றுக்குத் தொடர்பான மொழியைத் தேடிக் கண்டறிந்து ஒரு மரபுவழி வரைபடமாக (genealogical tree) அவற்றை வரிசைப்படுத்தும் முறையைக் கண்டறிந்தார்.

# இவரது இந்த மாதிரி கொடிவழி கோட்பாடு (ஃபேமிலி-ட்ரீ தியரி) எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரே ஒரு மொழிதான் இருந்தது என்றும் அதிலிருந்து பிறந்தவைதான் பிற மொழிகள் என்பதும் சாத்தியமே இல்லாத ஒன்று என இவர் கூறினார்.

# மொழிகள் குறித்து அறிந்துகொள்வதன் மூலம் அந்தந்த சமயத்தில் வாழ்ந்த சமூகம் தொடர்பான விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்று எடுத்துக்காட்டினார். 19-ம் நூற்றாண்டின் தலைசிறந்த மொழியியல் வல்லுநர்களுள் ஒருவராகப் போற்றப்பட்ட ஆகஸ்ட் ஸ்லைகர் 1868-ம் ஆண்டு 47-வது வயதில் காசநோய் பாதிக்கப்பட்டு மறைந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in