

இதுவரை நாம் பார்த்த நீர் நிலைகளில் நிறைவாக நாம் காண இருப்பது வளைகுடா. அதுலயும், தமிழ்நாட்டை ஒட்டி உள்ள ‘மன்னார் வளைகுடா’. இது பற்றி யாராவது விவரம் சொல்ல முடியுமா..?
‘நான் சொல்றேன்..’ ஒவ்வொரு முறையும் ஒருத்தரே சொன்னா எப்படி..? வேறே யாராவது..? ‘எனக்கு கொஞ்சம் தெரியும்… சொல்லட்டுமா...அது வந்து… மன்னார் வளைகுடா… தமிழகம் – இலங்கை இடையே உள்ள கடற்பகுதி. இதுல படகு வழியாவே இலங்கை சென்று சேர்ந்து விடலாம். அத்தனை அருகில் உள்ளது.’
ரொம்ப சரியா சொன்னீங்க. கடல் வழியா நமக்கு மிக நெருங்கிய நாடாக இலங்கை இருக்கு. சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நமக்கும் இலங்கைக்கும் நடுவுல படகுப் போக்குவரத்து சதாரணமா நடந்துச்சு. ‘கிழக்கு கடற்கரை’யில இருந்து இலங்கை போய் வர்றது இயல்பா இருந்த காலம். நம்முடைய சொந்தங்கள், நம்முடைய நெருங்கிய உறவுகள் நாம் அவர்களோடு சுமுக உறவு வைத்து இருந்தது ஒன்றும் செய்தி இல்லையே.
இந்த உறவுக்குக் காரணம்… மன்னார் வளைகுடாதானே? ஆமாம். அதுல என்ன சந்தேகம்? உலகின் எத்தனை பாகங்களில் கடலில் படகுப் பயணம் செல்ல முடிகிறது. அமைதியான ஆற்று நீரைப் போல அடங்கி இருந்து சாதாரண மக்களின் பயணத்துக்குத் துணை புரிந்தது மன்னார் வளைகுடா. அதனால் இது ஒருவகையில் இயற்கையான நல்லுறவு.
பாம்பன் தீவு, ராமர் பாலம், மன்னார் தீவு (இலங்கை) ஆகியவற்றைக் உள்ளடக்கிய மன்னார் வளைகுடாப் பகுதி ஒரு காலத்தில், கடல்வழி வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது. மன்னார் வளைகுடாவில் சற்றே தெற்கு நோக்கி நகர்ந்தால் வருகிறது பாக் நீரிணை அதாவது, ‘பாக் ஜலசந்தி’. இது பற்றி அடுத்த வாரம் பேசுவோம்.
(பயணிப்போம்)
- கட்டுரையாளர்: கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி; தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com