

எனக்கோர் ஐயம் என்ற தங்கம், வாழ்க்கைத்திறன் கல்வியும் ஆளுமை மேம்பாடும் ஒன்றா? வெவ்வேறா? என்று வினவினாள். இது பலருக்கும் எழும் வினா என்ற ஆசிரியர், இரண்டும் ஒன்றுபோலத் தோன்றுகின்றன. ஆனால், அவற்றுக்கிடையே நுட்பமான வேறுபாடு இருக்கிறதா என்றார்.
என்ன வேறுபாடு? என்று வினவினான் அழகன். அதற்கு முன்னர் ஆளுமை மேம்பாடு என்றால் என்ன எனச் சொல்லுங்கள் என்றாள் மதி. அதற்கு முன்னர் ஆளுமை என்றால் என்ன எனச் சொல்லுங்கள் என்றாள் கண்மணி. எல்லாவற்றையும் கூறுகிறேன் என்றார் ஆசிரியர். அனைவரும் உன்னிப்பாய்க் கேட்டனர்.
இளங்கோவன் என்னும் நடிகர், இயல்பில் அன்பானவர். புன்சிரிப்பு அவரின் அடையாளம். ஆனால், ஒரு நாடகத்தில் அவருக்கு வழங்கப்பட்டதோ கொடூரமான தீயவன் பாத்திரம். அவரது முகத்தோற்றமோ அப்பாத்திரத்திற்குப் பொருந்தவில்லை. எனவே, அப்பாத்திரத்திற்கு ஏற்ற முகமூடியை இளங்கோவனுக்கு இயக்குநர் அணிவித்தார். அந்த நாடக ‘முகமூடி’யை இலத்தீன் மொழியில் ‘பெர்சனா’ (Persona) என்பர். அதிலிருந்தே ‘பெர்சனாலிட்டி’ (Personality) என்னும் ஆங்கிலச் சொல் உருவானது. அதனை ஆளுமை என்று தமிழில் மொழிபெயர்த்தனர் என்று விளக்கினார் எழில்.
வித்தியாசமே தனித்தன்மை! - அப்படியானால், ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அவரது தனித்தன்மைதான் ஆளுமையா? என்று வினவினாள் கயல்விழி. ஆம், ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனை, நடத்தை, உணர்வு வெளிப்பாடு ஆகியன போன்றவற்றில் வேறுபட்டே இருப்பர். அவ்வேறுபாடே அவரது ஆளுமை. அதுவே அவரது அடையாளம் என்றார் எழில்.
அந்த அடையாளத்தைச் செழுமைப்படுத்துவதுதான் ஆளுமை மேம்பாடா? என்று வினவினான் தேவநேயன். ஆம். அது இயற்கையாகவோ அவரது முயற்சியாலோ நிகழும் என்று விளக்கினார் எழில்.
இது வாழ்க்கைத் திறன்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது? என்று வினவினான் முகில். எனக்குப் புரிந்துவிட்டது என்றான்காதர், என்ன புரிந்தது? என்றாள் பாத்திமாகிண்டலாக. ஒருவர் தனது தனித்தஅடையாளத்தை மேம்படுத்துவது தன்னாளுமை மேம்பாடு.
மாறாக, ஒருவர் தனது அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றைப் பண்படுத்தக் கற்றுக்கொண்டே இருப்பது வாழ்க்கைத்திறன் கல்வி என்று விளக்கினான் காதர். அருமையாகச் சொன்னாய் காதர் என்று பாராட்டினார் எழில். அனைவரும் கைதட்டி அப்பாராட்டை வழிமொழிந்தனர்.
தகவல் தொடர்பு, பிறருடன் பழகுதல், ஆக்கச் சிந்தனை, ஆய்வுச்சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்த்தல் ஆகிய திறன்கள் மென்திறன்கள் பட்டியலிலும் வாழ்க்கைத்திறன் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கின்றன. அப்படியானால் மென்திறன்களுக்கும் வாழ்க்கைத்திறன்களுக்கும் என்ன வேறுபாடு? என்று வினவினான் சாமுவேல். ஒருவர் தனது பணியைச் சிறப்பாகச் செய்ய உதவுவன மென்திறன்கள்; ஒருவர் வாழ்க்கையைச் செம்மையாக வாழ உதவுவன வாழ்க்கைத் திறன்கள் என்றார் எழில். புரியவில்லை என்றான் சுடர்.
அருள்மொழி தனது பணியிடத்தில் அனைவரிடமும் இன்முகத்தோடு பழகுவார். எதையும் சுருங்கச் சொல்லிப் புரிய வைப்பார். நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து சிக்கல்களைத் தீர்ப்பார். புதிய திட்டங்களை வகுப்பார். ஆனால், வீட்டிலோ அனைவர் மீதும் எரிந்துவிழுவார். வளவளவென்று பேசுவார்.
சிக்கல்களை கிடப்பில் போடுவார். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் முடிவெடுப்பார். புதிய முயற்சியில் ஈடுபடவே மாட்டார். ஏன் அவர் வீட்டிலும் வெளியிலும் வெவ்வேறுவிதமாக நடந்துகொள்கிறார்? என்று வினவினார் ஆசிரியர்.
ஏனெனில் அவர் பணியிடத்தில் மென்திறன்களைப் பயன்படுத்துகிறார். ஆனால், வீட்டில் அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்றான் முகில். ஏன்? என்றாள் இளவேனில். மென்திறன்கள் அவரின் மனப்பாங்கில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. வாழ்க்கைத்திறன் கல்வியே அம்மாற்றத்தை விதைக்கும் என்று விளக்கினாள் கண்மணி.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித்திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com