கழுகுக் கோட்டை 29: பறந்து வந்த தூதும் மறைந்து நின்ற சூதும்

கழுகுக் கோட்டை 29: பறந்து வந்த தூதும் மறைந்து நின்ற சூதும்
Updated on
2 min read

குணபாலன் பேசியதை இடைமறித்த தத்தன், என்ன ஆனால்... என்று இழுக்கிறாய்? சித்திரைத் திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அதற்குள் எப்படி அரண்மனைக் கோட்டையில் மக்கள் புரட்சிப்படையினரின் கொடியை ஏற்ற முடியும்?

உன்னிடம் ஏதாவது திட்டம் இருந்தால், என்னிடம் சொல். எனது மூளையில் போட்டுக் கசக்கி எடுத்து அந்தத் திட்டத்தை மெருகேற்றிக் கொடுக்கிறேன். அப்படி ஏதும் இல்லை என்றாலும் சொல்லிவிடு. இப்படியே சொல்லாமல் கொள்ளாமல் இந்த இடத்தை விட்டு வேறு தேசத்துக்கு ஓடிவிடுவோம் என்றான். அவன் அப்படிச் சொன்னதும் அதைக் கேட்ட குணபாலன் குலுங்கிச் சிரித்தான். பிறகு, என்ன சொன்னாய், சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடுவதா? அது கோழைகளின் செயல் அல்லவா? என்றான்.

அதைக் கேட்ட தத்தனோ, நான் வீரன் என்று எவன் சொன்னான்? எனது புறத்தோற்றம் வேண்டுமானால் முரட்டுத்தனமாக இருக்கலாம். ஆனால், நான் மிகவும் இளகிய மனசுக்காரன். வீரதீர செயல்களை எல்லாம் என்னால் செய்ய முடியாது. என்னை விட்டுவிடு. இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்றான்.

அதைக் கேட்ட குணபாலன், என்னது, நீ இல்லாமல் விளையாட்டா? இந்தத் திட்டத்தில் நீயும் உண்டு. சரி, அதைவிடு. பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது கழுகுகளுக்கு நாம் தீனி போடப் போகலாமா? நானும் அவற்றுக்குத் தீனி போட்டு அவற்றுடன் பழகிக்கொள்கிறேனே என்றான்.

ஆக, என்னை உயிரோடு விடப்போவதில்லை என்று முடிவே செய்துவிட்டாய் போலிருக்கிறது. சரி, என் விதி அதுதான் என்றால், யாரால் மாற்ற முடியும்? அப்படியே ஆகட்டும். வா என்று விரக்தியான பதிலைச் சொல்லி குணபாலனைப் பின்தொடர்ந்து சென்றான் தத்தன்.

அதே நேரம், அரண்மனையில் மன்னர் சங்கடசேனன் அமைச்சர்களைக் கூட்டி சித்திரைத் திருவிழாவினைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். இந்த வருடம் நடைபெற இருக்கும் சித்திரைத் திருவிழாவை அறுபத்து நான்கு தேசத்தவர்களும் மெச்சிப் போற்றும்படி நாம் கொண்டாட வேண்டும்.

நமது தோழமை தேசங்களிலிருந்து வரக்கூடிய விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்புவது முதல், திருவிழாவில் நடைபெறவிருக்கும் கலை நிகழ்ச்சிகள் வரை எல்லாம் துல்லியமாகத் திட்டமிடப்பட வேண்டும். இது நமது பண்பாட்டுத் திருவிழா என்பதை எடுத்துக் கூறுவதை விட, நமது ராஜ்ஜியத்தின் புஜபல பராக்கிரமத்தை பறைசாற்றும் பெருவிழாவாக அமைய வேண்டும் என்று மன்னர் சங்கடசேனன் அமைச்சரவையில் பேசினார்.

மன்னரின் பேச்சைக் கேட்ட அமைச்சர்கள், சான்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் கரகோஷம் செய்து, ‘அப்படியே ஆகட்டும் மன்னா!’ என்று ஒருமித்த குரலில் ஆமோதித்தனர். திருச்சேந்தியாக நடித்துக்கொண்டிருந்த திருத்தோன்றியும், மன்னா, தாங்கள் கூறிய அத்தனையும் உண்மைதான்.

இந்த ஆண்டு நாம் கொண்டாட இருக்கும் சித்திரைத் திருவிழா எவராலும் மறக்க முடியாத ஒரு விழாவாக அமையப் போகிறது என்பதில் ஐயம் வேண்டாம். ஆனாலும் அதற்காக நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. இந்தத் திருவிழாவில் சில தேசவிரோதிகள் கலகம் விளைவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதைமுன்கூட்டியே கண்டறிந்து நாம் முறியடிக்க வேண்டும். என்றார். அதையும் அந்த அவையில் இருந்தோர் ஆமோதித்து கோஷம் எழுப்பினர்.

திருத்தோன்றி அவ்வாறாகப் பேசியதைக் கேட்ட மன்னர் சங்கடசேனன் மிகவும் கோபத்துடன், என்ன... நம்மை எதிர்ப்பதாகச் சொல்லித் திரியும் அந்தப் புல்லுருவிக் கூட்டத்துக்கு பயந்து நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா? எந்த தேசவிரோதியும் நம் முன்னால் வந்து நிற்கப் போவதில்லை. அப்படி நின்றால், அடுத்த கணம் அவனது உயிர் மேல் அவனுக்கு உரிமையில்லை என்றார்.

அதைக் கேட்டு சிறு புன்னகை புரிந்த திருத்தோன்றி, மன்னா, தங்களை சந்தித்துச் சென்ற தேசவிரோத தூதுவனை தாங்கள் உயிருடன் தப்பிச்செல்ல விட்டதே பெரும்பிழைதான். இதைச் சொல்வதற்காக என்னை மன்னியுங்கள். ஆனாலும் இந்த தேசத்தின் மீது பற்று உள்ள காரணத்தினால் இந்த அவையில் சொல்ல நேர்ந்தது என்றார்.

அவையில் நிசப்தம் நிலவியது. மன்னரே பேச்சைத் தொடர்ந்தார், தூதுவனைக் கொல்வது எமது வீரர்குல மரபில் இல்லை என்பதாலேயே அவனை அன்று பிழைத்துப் போகட்டும் என்று விட்டோம். ஆனால், அவனைப் பின்தொடர்ந்து சென்று அந்தக் கூட்டத்தையே இரண்டு திங்களில் ஒழித்துக் கட்டுவேன் என்று சவால் விட்ட நீர்தான் அனைத்தையும் கோட்டைவிட்டுவிட்டு என் முன் நிற்கிறீர் என்று கேலியுடன் பேசி நிறுத்தினார்.

அதற்கு திருத்தோன்றி என்னபதில் சொல்வதென்று தெரியாமல்திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தார். அதனால் அங்கே மறுபடியும் அமைதி நிலவியது. அப்போது அந்த அமைதியைக் கலைத்தவாறு ஒரு பணிப்பெண் ஓடிவந்தாள். அவள் கைகளில் ஒரு புறா இருந்தது. அது குணபாலன் அனுப்பிய தூதுப்புறா.

- தொடரும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in