

அடிக்கடி பல பள்ளிக்கூடங்களைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதுண்டு. ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கவோ, அவர் தம் வகுப்புகளைக் கவனிக்கவோ, பள்ளிக்கூடச் சூழலை எப்படியெல்லாம் கற்றலுக்குப் பயன்படுத்தலாம் என்று கலந்துரையாடவோ, பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தவோ... எப்படியாவது ஒரு வாய்ப்பு அமைந்துவிடும்.
அப்போதெல்லாம் நான் தவறாமல் செய்யும் ஒரு சில வேலைகளுள் ஒன்று வகுப்பறைகளுக்குச் சென்று ஜன்னல் வழியாக வெளியே உள்ள சுவரோரத்தைக் கவனிப்பது. காரணம் என்ன தெரியுமா?
காகிதப் பந்து: அனைத்துப் பள்ளிகளிலும் ஜன்னலோரத்தின் வெளியே மாணவர்கள் சுருட்டி எறிந்த காகிதப்பந்துகள் சிதறிக் கிடைப்பதைக் காணலாம். சிலவேளை தற்போது சுருட்டிய காகிதப் பந்துகள் வகுப்பறையின் மூலையிலுள்ள குப்பைத் தொட்டியில் இருக்கலாம்.
எதற்காக மாணவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்? வேண்டுமென்றே அவ்வாறு செய்கிறார்களா? வகுப்பறையில் நடக்கும் ஏதேனும் செயல்பாட்டுக்கும் இச்செயலுக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
ஆம் நிச்சயமாக, வகுப்பறையில் நடக்கும் ஒரு முக்கியமான கண்ணுக்குத் தெரியாத நடத்தைக்கும் இந்தச் செயலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.அது சொல்லிக் கொடுத்து வந்திருக்கலாம். அல்லது சொல்லாமலே குழந்தைகள் புரிந்ததாகவும் இருக்கலாம். அதாவது வகுப்பறையில் பேசுவது அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்.
எழுதுவது அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். தவறே வந்துவிடக் கூடாது. இது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. பெரியவர்களின் செயல்கள், ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களின் கருத்தை அடிக்கடி உறுதிப்படுத்துகிறது.
இது நடைமுறை சாத்தியமா? - வகுப்பறையில் பேசுவது அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். குறிப்பேட்டில் எழுதுவது அனைத்தும் சரியாக தெளிவாக இருக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமா? அதுவும் குறிப்பாக படைப்பாற்றல் செயல்பாடு நடக்கும்போது? மாணவர்கள் எதையேனும் சொந்தமாக எழுதும்போது?
நம்மில் பலருக்கும் கீழ்வரும் அனுபவங்கள் இருக்கலாம். எதையோ எழுத நினைப்போம். காகிதத்தை விரித்து வைத்திருப்போம். பேனாவை எடுத்து எழுத முயற்சி செய்வோம். ஆனால் பேனா ஆடிக்கொண்டிருக்குமே தவிர ஒரு வாக்கியம் வந்து விழாது. நாமே அவ்வளவு சிரமப்படுவோம். அப்படியானால் குழந்தைகளின் நிலை?
கரும்பலகையில் எழுதியதைப் பார்த்து எழுதும்போது ஒருநிமிடம் கவனம் சிதறினாலே தவறு ஏற்படுகிறதே. அப்படியானால் பாடல், கதை,கட்டுரை என சொந்தமாகப் படைக்கும்போது தவறு வருவது இயல்புதானே.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை; தொடர்புக்கு: rajendran@qrius.in