தயங்காமல் கேளுங்கள் - 60: தழும்பு மறைய இதை செய்து பாருங்கள்

தயங்காமல் கேளுங்கள் - 60: தழும்பு மறைய இதை செய்து பாருங்கள்
Updated on
1 min read

காயத்தினால் உண்டாகும் தழும்புகள் மட்டுமன்றி முகப்பருக்களின் தழும்புகள், அம்மைத் தழும்புகள், மருக்கள், கர்ப்பகாலத்தில் வயிற்றிலும் முதுகிலும் தோன்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் என அனைத்திலுமே கொலாஜனின் நெகிழும் தன்மை குறைவதால், நமது உடலின் இயல்பிலிருந்து மாறுபட்டு நிற்கின்றன தழும்புகள்.

அதில் ஒருசிலருக்கு மட்டும், வலி, நிற மாற்றம், அரிப்பு, தடிமனான தழும்பு (Keloids Hypertrophic scar), அதன் காரணமாக இயக்கமுடக்கல் என வெளித்தெரியும் வேதனைகளையும் இவை ஏற்படுத்தி விடுகின்றன. மொத்தத்தில் தழும்புகள் ஏற்படுவது என்பது தன்னிச்சையாக நிகழும் ஒரு பாதுகாப்பு செயல். அதை முற்றிலும் தவிர்க்க முடியாது. அதேசமயம் இந்தத் தழும்புகள் மறையும் அல்லது மட்டுப்படும் உக்திகள் இருக்கின்றன.

தண்ணீர் எனும் முதலுதவி:முதலில் நமக்குத் தெரிந்த வீட்டுவைத்தியம் தான் இதிலும் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக, அதிகம் தண்ணீர் பருகுவதும், உணவில் காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை ஆகியவற்றை அதிகம் சேர்ப்பதும் தழும்புகள் தெரியாமல் இருக்க உதவுகின்றன.

இவ்வுணவுகளில் உள்ள கரோட்டீன், ஆந்த்தோ சயினிடின், ப்ரோலின், வைட்டமின் ஏ, சி, ஈ ஆகிய சத்துகள் மற்றும் நீர்த்தன்மை உடலின் கொலாஜன் சுரப்பை இயற்கையிலேயே அதிகப்படுத்தி, தழும்புகளை மட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இதேபோல, நமக்கு மிகவும் பரிச்சயமான சோற்றுக் கற்றாழை, மஞ்சள், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை மேலே தடவுவதும் தழும்புகள் மட்டுப்பட உதவுகின்றன.

அடுத்து, தழும்பு மறைவதற்காகவும், சருமத்தின் சுருக்கங்களைப் போக்குவதற்காகவும் பரிந்துரைக்கப்படும் பல வெல்னஸ் க்ரீம்கள். பொதுவாக இவற்றில் காணப்படுவது, நமது தோலின் உள்ளே இருக்கும் அதே கொலாஜன் தான். மூலக்கூறு எடை அதிகம் கொண்ட இந்த செயற்கை கொலாஜன்கள், உண்மையில் சருமத்தைத் தாண்டி உள்ளே செல்லுமா, தோலை பழைய நிலைக்கு மீண்டும் திரும்பச் செய்யுமா என்பது கேள்விக்குறி தான்.

இருந்தாலும் க்ரீம்களில் கொலாஜனுடன் காணப்படும் மற்ற இயற்கை எண்ணெய்கள், அலோவேரா ஜெல், (சோற்றுக் கற்றாழை), வைட்டமின் ஈ, ஷியாபட்டர் ஆகியன தோலின் ஈரத்தையும், எண்ணெய் பசையையும் அதிகப்படுத்தி, தோலின் மென்மையையும், மினுமினுப்பையும் கூட்டுவதுடன், அதன் தழும்புகள் சற்று மறையவும் வழிவகுக்கத்தான் செய்கின்றன.

இவையனைத்தும் பயனளிக்காதபோது, அத்துடன் தீக்காயங்கள், கீலாய்ட் போன்ற பெரிய தழும்புகளுக்கு காஸ்மட்டாலஜி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைநிபுணர்களின் ஆலோசனை தேவைப்படலாம். எதுவாயினும், வீரத்தின் அடையாளமாக தழும்புகளைச் சொன்ன பரம்பரையில் வந்தவர்கள் தான் நாம்.

ஆனால், இப்போது காயங்கள் ஏற்படுத்தும் வலியைக் கூட தாங்கிக் கொள்ளும் நமது மனம், அது தரும் தழும்புகளை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவது சிறு நெருடல் தானே. அதை வெல்லவும் நம் மனதால் நிச்சயம் முடியும்.

(ஆலோசனை தொடரும்)

- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in