

அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்குட்பட்ட லிட்டில் பிக்ஹார்ன் எனும் பகுதி 1876 ஜூன் 17 அன்று பரபரப்பாக இருந்தது. கர்னல் ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான 1300 அமெரிக்கச் சிப்பாய்கள், அந்நாட்டின் பூர்வகுடியினருக்கு எதிராகத் துப்பாக்கி முதலான ஆயுதங்களை ஏந்தி போர் செய்ய பிக்ஹார்ன் நோக்கி விரைந்தனர்.
ஆனால், பழங்குடியினரின் கூட்டு முயற்சிக்கு முன்னால் துப்பாக்கி ரவைகள் துவண்டு வீழ்ந்தன. 650 பழங்குடிகளை வழிநடத்தி இம்மாபெரும் யுத்தத்தில் வெற்றி கண்டவர்தான் நம் நாயகர் சிட்டிங் புல்.
அமெரிக்காவின் வடமேற்கு மாகாணப்புறத்தில் வசித்துவரும் பூர்வப் பழங்குடியினருள் லகோடா சமுதாயத்தினரும் உண்டு. இவர்களை ‘டீடன் சூ’ என்றும் அழைப்பார்கள். பழங்குடி என்றால் மலையிலும் காட்டிலும் வசிப்பவர் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. குறிப்பாக லகோடா பழங்குடிகள் மொன்டானா, டகோட்டா முதலான சமவெளிப் பகுதியில் விரவி வாழ்ந்தனர்.
‘சிட்டிங் புல்’ பிறந்து வளர்ந்த ஹங்க்பாபாபழங்குடியினர் லகோடா சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். உணவு, உடை,உறைவிடம் என சகலமும் ‘எருமை மாடுகளை’ நம்பித்தான். மூச்சு விடத் தெரிவதைப் போல், எருமை மாட்டின் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
யார் இந்த சிட்டிங் புல்? - மொன்டானாவில் உள்ள மஞ்சக்கல் நதிக்கரை ஓரம் 1831ஆம் ஆண்டு மே மாதம் ஜம்பிங் புல் ஹோலி டோர் இணையருக்கு மகனாகப் பிறந்தார் சிட்டிங் புல். இவரின் இயற்பெயர் ஜம்பிங் பேட்ஜர். இந்தப் பெயர்கள் எல்லாம் விசித்திரமாக இருக்கின்றன அல்வவா?
ஆம். சிட்டிங் புல் என்பதன் பொருள் ‘வீற்றிருக்கும் எருது’; அவர் பெற்றோரின் பெயருக்கு ‘குதிக்கும் எருது’, ‘புனிதக் கதவு’என்று பொருள்; மாமா பெயர் ‘நான்கு கொம்பு’. இப்பழங்குடிகள் தாம் வாழும் சமுதாயத்தில் உள்ள பெயர்களையே தமக்கும் சூடிக்கொண்டனர். சிட்டிங் புல் இளம் வயதில் அசமஞ்சமாக இருந்தார். அதனால் நண்பர்கள் அவரை ‘ஸ்லோ' என்றும் அழைத்தனர். ஆனால், உறவினரின் உதவியால் எருது வேட்டையும், குதிரை ஏற்றமும் விரைவில் கற்றுக்கொண்டார்.
எருது வேட்டை: ஒருநாள் எருது வேட்டைக்குச் சென்றபோது, எளிதில் கிட்டிய பசுவைத் தவிர்த்து தூரம் இருந்த எருதின் மேல் அம்புப் பாய்ச்சினார். உடன் வந்தவர்கள் ஏன் இந்தத் தேவையில்லா சாகசம் என்று கேட்டபோது, கன்றுக்குப் பால்தரும் பசுவைக் கொல்லுதல் நியாயமில்லை என்றார். வேட்டையாடிய உணவை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
மற்றொரு சமயம், தம் பழங்குடியினருக்குத் தொல்லைத் தந்துவரும் ‘க்ரோ' மற்றும் ‘அசினிபோயின்’ இனத்தை எதிர்த்துச் சண்டை செய்து வெற்றிப்பெற்றார். இங்ஙனம்ஹங்க்பாபா இனக்குழுவில் தவிர்க்க முடியாத மனிதராக சிட்டிங் புல் வளர்ந்து வந்தார். அதே சமயம் தொல்லைகளும் தோற்றம் கண்டன.
(வேட்டை தொடரும்)
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர். தொடர்புக்கு: iskrathewriter@gmail.com