

கடந்த அத்தியாயத்தில் மாணவர்கள் பகுதி நேர வேலைக்கு செல்வதன் அவசியம் குறித்து எழுதி இருந்தேன். அதனை வாசித்த சேலத்தை சேர்ந்த ஆசிரியை இசபெல்லா, “மாணவர்கள் படிக்கும் காலத்தில் வேலைக்கு செல்லாமல் சம்பாதிக்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா? மாணவர்களுக்கு செயலற்ற வருமானம் (Passive income) ஈட்டும் வழிகளை பரிந்துரைக்க இயலுமா?'' என வினவினார்.
எனவே, இந்த அத்தியாயத்தில் மாணவர்கள் தினமும் வேலைக்கு செல்லாமல், கஷ்டப்படாமல் செயலற்ற முறையில் ஸ்மார்ட்டாக வருமானம் ஈட்டும் 10 வழிகளை பார்க்கலாம். இந்த வழிகளில் ஒருமுறை நேரத்தையும், திறமையையும் முதலீடு செய்தால் அதன்பிறகு வருமானம் தானாகவே வந்துக்கொண்டிருக்கும். அதில் முதல் 5 வழிகளை இங்கு பார்க்கலாம்.
1. புகைப்படம், வீடியோ, ஓவியம் விற்பனை: மாணவர்கள் தங்களிடம் இருக்கும் செல்போனைக் கொண்டே நன்றாக புகைப்படம், வீடியோ எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். தங்களை சுற்றி இருக்கும் அரிதான, வித்தியாசமான விஷயங்களை படமாகவும், வீடியோவாகவும் எடுத்து சேமித்து வைக்க வேண்டும். இதற்காக ஒரு ஸ்டாக் தளத்தை உருவாக்க வேண்டும். பின்னர் இந்த புகைப்படம், வீடியோவை பயன்படுத்தும் நிறுவனங்களை இணையதளம் மூலமாகவே கண்டறிந்து, அவர்களுக்கு விற்பனை செய்யலாம்.
பத்திரிகைகள், செய்தி சேனல்கள், இணையதளங்கள், யூடியூப் தளங்கள், ஆன்லைன் விற்பனை தளங்கள் ஆகியவற்றுக்கு உங்களது படைப்புகளை விற்பனை செய்யலாம். ஒவ்வொரு படம், வீடியோ ஆகியவற்றுக்கு ஏற்ப சன்மானம் கிடைக்கும். பின்னர் அந்த நிறுவனம் ஒவ்வொரு முறை உங்கள் படைப்பை பயன்படுத்தும்போதும் உங்களுக்கு உரிய சன்மானத்தை வழங்கிக்கொண்டே இருப்பார்கள். ஓவியம், கார்ட்டூன் ஆகியவற்றையும் இதே பாணியில் விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.
2. வலைப்பூ மூலம் வருமானம்: எழுத ஆரம்பிக்கும் நபர்களுக்கு பிளாக் எனப்படும் வலைப்பூ ஒரு இலவச பயிற்சி களம். அந்த தளத்தில் மாணவர்கள் எழுதி பழகலாம். ஒரு குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்து அதைப் பற்றி மட்டும் விரிவாகவும், வித்தியாசமாகவும் எழுதலாம்.
வேறு துறைகளில் கவனம் செலுத்த விரும்பாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடம் தொடர்பாகவும், அதற்கான வினா விடை, வினா வங்கி, நோட்ஸ் தொடர்பாகவும் கூட எளிமையாக எழுதலாம். இதை படிக்கும் வாசகர்களிடம் இருந்து சந்தா வசூலிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் எழுத்தாற்றல் வளர்வதுடன், ‘கூகுள் ட்ரெண்ட்ஸ்’ மூலம் வருமானமும் கிடைக்கும்.
3. மின்புத்தகம், புத்தகம் வெளியிடுதல்: பிளாக் எழுதுவோர் அடுத்தக்கட்டமாக ஈ-புக் எனப்படும் மின்புத்தகம் வெளியிடலாம். இதற்கு வடிவமைப்பு, அச்சிடும் செலவு, கூரியர் செலவு என எந்த செலவும் இல்லை. எல்லாமே ஆன்லைனில் இலவசமாக கிடைக்கிறது. இணையதளம் மூலமாகவே ஆய்வு செய்து, அதன் மூலமாகவே எழுதி, வடிவமைத்து அமேசான் போன்ற தளங்களில் வெளியிடலாம்.
2010ம் ஆண்டுக்கு பின்னர் ஈ-புக் விற்பனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு புத்தகமும் விற்பனையாகும்போதும் அதற்கேற்ப ராயல்டி உங்களது வங்கி கணக்கிற்கு வந்துசேரும். ஈ-புக் வெளியிட்ட நபர்கள், தங்களது வாசக பரப்பை விரிவுப்படுத்தும் நோக்கில் அச்சு நூலாக சொந்தமாக வெளியிடுவதன் மூலமாகவும் நேரடியாக வருமானம் ஈட்ட முடியும்.
4. செல்போன் செயலி: இன்றைக்கு செல்போன் பயன்பாடு உச்சத்தில் இருக்கிறது. நம்முடைய அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் செல்போன் செயலி மூலமாகவே நடக்கிறது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் 70 சதவீதத்துக்கும் அதிகமான செயலிகள் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்களாலே உருவாக்கப்பட்டது.
எனவே மாணவர்கள் செல்போனைக் கொண்டு புதிய செயலியைஉருவாக்கலாம். அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம்வந்துக்கொண்டே இருக்கும். இதேபோல ஒருவர் எத்தனை செயலிகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஒவ்வொரு செயலியில் இருந்தும் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
5. ஆன்லைன்வழி கற்பித்தல்: கரோனா பெருந்தொற்று நெருக்கடிக்கு பிறகு ஆன்லைன் கற்றல், கற்பித்தல் முறை அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல், வாகன விபத்து, அலைச்சல், நேர விரையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏராளமானோர் டுட்டோரியல், ஆடல், பாடல், திறன் மேம்பாடு, மார்க்கெட்டிங் வகுப்புகள் அனைத்தையும் ஆன்லைனிலே கற்க விரும்புகின்றனர்.
இந்த சூழலை பயன்படுத்தி மாணவர்கள் ஆன்லைனில் கற்பித்தலை தொடங்கலாம். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் வரும். குறிப்பாக ஆன்லைன் கோர்ஸை உருவாக்கி அதன் மூலம் நேரடியாக சம்பாதிக்கலாம். இல்லையேல் கற்பித்தல் தொடர்பான மையங்களை நடத்தும்நிறுவனங்களுக்கு ஆன்லைன் கோர்ஸ்களைஉருவாக்கி விற்பனை செய்யலாம். இதன் மூலம் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
மீதியுள்ள 5 வழிகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in